ஆன்மீக கதை - எல்லாவற்றையும் அறிந்தவன் பகவான் நாராயணன் மட்டுமே

  கோமதி   | Last Modified : 09 Oct, 2018 05:03 pm
spiritual-story-only-god-narayanan-knows-everything

புராணக் காலத்தில்,ரோமசர் என்றோர் இளைய துறவி இருந்தார். அவர் உடம்பில் அடர்த்தியாக உரோமம் இருந்ததால் அவர் ரோமசர் என்று அழைக்கப்பட்டார். வேதங்களில் மிகச் சிறந்து விளங்கிய அவர்,சிறந்த ஜோதிடராகவும் திகழ்ந்தார். மக்களின் நெற்றியில் பிரம்மதேவனால் எழுதப்பட்ட தலையெழுத்தை படித்துச் சொல்லக் கூடிய வல்லமை அவருக்கு இருந்தது. 

ஒரு நாள் தன் தலையெழுத்தைத் அறிய அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. குருவினிடம் தனக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கேட்டார். அவரும், உன் விதி உன் உடலில் உள்ள உரோமம் சம்பந்தமாக உள்ளது என்று கூறினார். இதற்கு அர்த்தம் தெரியாமல் அவர் பலரையும் கேள்வி கேட்க அதில் ஒருவர், பிரம்மாதான் உனக்கு பதில் சொல்ல முடியும் என்று கூறினார். 

ரோமச முனிவரும் தன்னுடைய தவ வலிமையால் பிரம்மதேவரின் இருப்பிடம் அடைந்தார். பிரம்மதேவன் பூஜையில் இருந்ததால் அங்கு காத்திருக்க நேர்ந்தது. பூஜை முடிந்ததும் பிரம்மதேவன் ரோமசரைக் கண்டு எந்த விஷயமாக தன்னைக் காண வந்ததாகக் கேட்டார். ரோமசரும்,“அடுத்தவர்களின் தலையெழுத்தைக் கூறும் நான் எனக்குள்ள படி விதி என் ரோமத்தால் ஏற்படும் என அறிந்தேன். அதைப் பற்றி விவரமாக அறிய விரும்புகிறேன்” என்றார்.

“நீங்கள் சிறிது நேரம் காத்திருந்தால் நான் எழுதிய குறிப்புகளைப் பார்த்துக் கூறுகிறேன். நான் தினமும் கோடி கோடியாக எழுதுவதால் நினைவில்லை”என்று பிரம்மா கூரியதும்,“அதற்கென்ன நான் காத்திருக்கிறேன்” என்று ரோமசரும் கூறினார். “நீங்கள் ஏற்கெனவே காத்திருந்து இருக்கிறீர்கள். இன்னமும் காத்திருக்க வேண்டுமா? மேலும் நான் பூஜை செய்யும் சமயத்தில் காத்திருந்த நேரம் சத்யலோகத்தில் இரண்டரை நாழிகை. இது பூமியின் 35 கோடி எழுபது லட்சத்து நாற்பதாயிரம் வருடங்களுக்குச் சமம். நீங்கள் உங்கள் இடத்திற்குச் சென்றால் கூட உங்களால் அதைத் தெரிந்து கொள்வது கடினம். எல்லாம் மாறியிருக்கும்” என்றார் பிரம்மா.

ரோமசருக்கு வியப்பு ஏற்பட்டது. உடனடியாக தன் இடத்திற்குச் சென்றார். எல்லாமே மாறி இருந்தது. அவருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. இந்த பிரம்மதேவன் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர். பூமியின் 35,70,40,000 வருடங்கள் சத்யலோகத்தின் இரண்டரை நாழிகைக்கு ஈடானது. எனக்கு மட்டும் இப்படிப்பட்ட நீண்ட ஆயுள் கிடைத்தால் பூஜையை மணிக்கணக்கில் செய்ய முடியுமே என்று எண்ணினார். பிரம்ம லோகம் திரும்பச் செல்வதா என்று யோசித்த போது கோயில் ஒன்றிலிருந்து விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் ஓம் பூத பவ்ய பவத் ப்ரபவே நமஹ என்ற நாமம் இவர் காதில் விழுந்தது. இதற்கு அர்த்தம் - எல்லாவற்றிற்கும் காரணமானவர் பகவான். அவன் நிலைத்திருப்பவன். மேலும் அவனே அனைத்து பிரம்மாக்களின் தலைவன். காலத்திற்கு உட்படாதவன்.

இந்த பிரம்மாவின் இரண்டரை நாழிகையே இத்தனை வருடங்கள் பூமியின் காலத்திற்குச் சமம் என்றால் பகவானின் காலக்கணக்கு எப்படி இருக்கும் என்பதை ரோமசர் புரிந்து வியந்தார். பிரம்மாவிடம் செல்வதைவிட பகவானின் நாமத்தைச் சொல்வதுதான் உசிதம் என்று ஓம் பூதபவ்ய பவத் ப்ரபவே நமஹ என்று மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தார். ரோமசரின் பக்திக்கு இறங்கி பகவான் நாராயணன் அவருக்குக் காட்சியளித்து ரோமசருக்கு என்ன வரம் வேண்டும் என கேட்க, நான் பிரம்மா மாதிரி நீண்ட ஆயுள் பெற்று உம்மை அதிகமாக பூஜை செய்ய வேண்டும் என்று கேட்டார். பகவானும், உன்னுடைய உடம்பில் ஒரு முடி விழும் போது ஒரு பிரம்மாவின் ஆயுள் முடியும். உன் உடம்பில் எப்போது அனைத்து முடிகளும் உதிருகிறதோ, அப்போது நீ மோட்சம் அடைவாய் என்று அருள் பாலித்தார்.

இப்போது தன் விதி தன் ரோமத்தோடு எப்படி சம்பந்தப்பட்டது என்பதை ரோமசர் புரிந்து கொண்டார். பிரம்மதேவனால் கூட ரோமசரின் முடி உதிர்வில் எத்தனை பிரம்மாக்கள் தோன்றுவார்கள் என்பதை கணக்கிட முடியாது. எல்லாவற்றையும் அறிந்தவன் பகவான் நாராயணனே. அதனால்தான், ரோமசர் பிரம்மாவிடம் சென்று தன் தலையெழுத்து பற்றிக் கேட்டபோது பிரம்மாவினால் கூற முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close