ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - இந்த தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு

  கோமதி   | Last Modified : 11 Nov, 2018 06:48 am

the-arupadai-veedu-of-arumugan-getting-maariage-in-this-temple-is-the-specialty-of-this-place

திருப்பரங்குன்றம் - முதல்படைவீடு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம். முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட சிறப்பு பெற்ற தலம் இது.மதுரையில் இருந்து தென்மேற்கில் 9 கிலோமீட்டர் தொலைவில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. இந்த குன்றே சிவலிங்க வடிவில் காணப்படுவதால், அந்த சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக கருதப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. ஆதலால் இந்த மலையை வலம் வந்து வழிபட்டால் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். 

கயிலாயத்தில் ஒருநாள், பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடி மீது குழந்தையாக அமர்ந்திருந்த முருகப்பெருமானும் அந்த உபதேசத்தை கேட்டார்.பவித்ரமான மந்திரத்தின் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ளவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த குற்றத்திற்குப் பரிகாரம் தேடும் பொருட்டு முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.சிவபெருமானும், பார்வதிதேவியும் முருகப் பெருமானுக்கு பரங்கிநாதர் - ஆவுடை நாயகி என்னும் பெயரில் காட்சி தந்து அருளினார்கள். இன்றும் திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி -சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் இவர்கள் எழுந்தருளியுள்ள ஆலயம் இருப்பதைக் காண முடியும்.எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன்-பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகப்பெருமான் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் அன்று காட்சித் தந்ததால், திருப்பரங்குன்றத்தில் 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பூசம் திருவிழாவில், சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுகின்றவர்கள் வேண்டும் வரம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. 

சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்து,தேவர்கள் துயர் தீர்த்தப்படியால்,முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையை முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்துக் கொடுத்தான். 

திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை முருகனின் கைவேலினால் உண்டானது என்பதால் இந்த தீர்த்தத்தைக் கண்டாலும், அதில் நீராடினாலும் பாவங்கள் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.  இக்கோவில் மூலவரை, பாறையினை குடைந்து உருவாக்கி உள்ளதால், மூலவருக்கு அபிஷேகம் என்று இல்லாமல், எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆனால் வெற்றி வேலவனின் கையில் உள்ள வேலுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது என்பதால், இந்த தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாக கருதப்படுகிறது.இக்கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. 

தைப்பூசம், கார்த்திகைத் திருநாள், தெய்வயானையை மணந்து கொண்ட பங்குனி உத்திர நாள் ஆகியவை சிறப்பான விழாக்களாக இங்க கொண்டாடப்படுகின்றன.மதுரை சித்திரைத் திருவிழாவில் தன் தாய் அன்னை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண இத்தலத்து முருகன் மதுரை சென்று திரும்புவதும் முக்கிய விழாவாகும்.

வேலுண்டு வினையில்லை..

மயிலுண்டு பயமில்லை...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.