ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி

  கோமதி   | Last Modified : 12 Nov, 2018 07:16 pm
arupadai-veedu-of-murugan-lord-of-wisdom-lord-dhandayuthapani

பழனி – மூன்றாம் படை வீடு 

தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் பெயரை உச்சரிக்கும் போதே தெய்வீக உணர்வை நமது உள்ளத்தால் உணர முடியும். கந்தன், கடம்பன், முருகன், ஆறுமுகன், சண்முகன், செந்தில் ஆண்டவன் இப்படி எத்தனை எத்தனை திருநாமங்கள் முருகப்பெருமானுக்கு. இந்து மதத்தில் மட்டுமே பக்தர்களுக்கு மிக நெருக்கமாக இறைவன் இருக்கிறார். அதனாலேயே மிகுந்த உரிமையுடன் இறைவனை கெஞ்சுவதும் ஏன் சில நேரங்களில் இறைவனுடன் முறையிட்டு சினந்து கொள்வதும் சாத்தியமாகிறது.சஷ்டி விரத காலத்தில் முருகனின் பெருமைகளை அறிந்து கொள்வதும் ஆறுமுகன் புகழ் பாடுவதும் பல நன்மைகளைத்தரும்.

தந்தை பரமசிவன் தாய் பராசக்தியிடம் தீராத சினம் கொண்டு புறப்பட்ட முருகப்பெருமான் சினம் தீர்ந்த திருத்தலம் பழனி.  பழனி என இந்தத்திருத்தலம் அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப்பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே "பழனி" ஆகிவிட்டது.அறுபடை வீடுகளில்  மூன்றாவது படை வீடான இத்திருத்தலத்தில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார்.  இதனால் பக்தர்கள்  பழனியாண்டவர் என்று முருகப்பெருமானை அழைக்கிறார்கள்.மூலஸ்தானத்தில் உள்ள பழனியாண்டவர் திருமேனி, அகத்தியரின் தலையாய சித்தரான போகரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் ஆற்றல் பெற்றது.

 இத்திருத்தல புராணப் பின்னணி:

சிவபெருமான் திருவிளையாடல்களில் ஒன்றான ஒரு ஞானப்பழத்துக்காக பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வந்த முருகப்பெருமான் பழனி மலையில்தான் தங்கினார். அங்கு, எந்த பற்றும் அற்ற ஆண்டிக் கோலத்தில் காணப்பட்டார் மகன் கோபித்துக் கொண்டு சென்றதால் மனம் வருந்திய சிவனும், பார்வதியும் இந்த பழனி மலைக்கு வந்தனர். முருகப்பெருமானை சமரசம் செய்தவர்கள், அவருக்கு "பழம் நீ" என்று சூட்டிய பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது. என்கிறது  தலப்புராணம்.

பழனி மலை எப்படி உருவானது ?

 பொதிகை மலையில் வந்து தங்கிய அகத்திய முனிவர், தனது சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று, அங்கு முருகப்பெருமானுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களை தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார்.சிறந்த பக்திமானான இடும்பாசுரன், அகத்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு மலை குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடி போன்று கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான்.அப்போது முருகப்பெருமான் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார். மலைகளை சுமந்து வந்த இடும்பாசுரன் ஓரிடத்தில் களைப்பு ஏற்பட்டதால் மலைகளை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுத்தான். ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் மலைகளை  தூக்க முயன்றான். ஆனால், முடியவில்லை.

இடும்பனுக்கு ஒன்றும் ஓடவில்லை.எதனால் தன்னால் மலையை தூக்க முடியவில்லை என்று திகைத்த இடும்பன் மலையை உற்றுப் பார்த்தான்.மலைக்குன்றின் உச்சியில் ஓரிடத்தில் கோவணம் மட்டுமே அணிந்த ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அந்த சிறுவன் இருப்பதால்தான் மலையை தூக்க முடியவில்லையோ என்று யோசித்தவன், அந்த சிறுவனை கீழே இறங்குமாறு கூறினான்.ஆனால் அந்த சிறுவனான முருகனோ, இடும்பாசுரன் தூக்கி வரும் மலைக்குன்று தனக்கே உரியது என்று உரிமை கொண்டாடினார். கோபம் கொண்டான் இடும்பன். சிறுவனைத் தாக்க முயன்று, பிறகு முடியாமல் வீழ்ந்தான்.பின்னர், இடும்பன் மனைவியான இடும்பியும், அகத்திய முனிவரும் அங்கு விரைந்து வந்து வந்து வேண்டிக் கொள்ள, அவர்களுக்காக முருகப்பெருமான் மனமிறங்கி வீழ்ந்த இடும்பனை உயிர்ப்பித்தார்.

இடும்பனது குரு பக்தியை மெச்சிய முருகப்பெருமான் அன்று முதல் இடும்பனுக்கு, தனது காவல் தெய்வமாக விளங்கும் பேற்றை அளித்ததோடு, இடும்பனைப் போன்று சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருட்களை எல்லாம் காவடி எடுத்துத் தன் சன்னதிக்கு வருவோருக்கு அருள்பாலிப்பதாக அப்போது அருளினார்.அன்றுமுதல் முருகன் கோவில்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது. இடும்பாசுரன் கொண்டு வந்த மலை அங்கேயே நிரந்தரமாக வைக்கப்பட்டது. அந்த மலைதான்  பழனி. இன்றைக்கும் , பழனி மலைமீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப்பாதையில் உள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்கிறார்கள்.

அபிஷேகப்பிரியரான பழனி முருகர் 

மூன்றாம் படை வீடான பழனியில் முருகப்பெருமான்  அபிஷேகப் பிரியராக, சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போல் அல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆதியில் போகர் சித்தராலும், அவரது சீடராகிய புலிப்பாணி முனிவராலும் வழிபடப்பட்டு வந்த இந்த கோவிலில், சேர மன்னர்கள் முதன் முதலில் திருப்பணிகள் செய்துள்ளனர். இத்திருத்தலத்தில்  ஆண்டிக்கோலம் பூண்டு அருள் பாலிக்கும் தண்டாயுதபாணி ஒரு பெரும் தத்துவத்தை தனது பக்தகோடிகளுக்கு உணர்த்துகிறார்

ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும் என்பதே அந்த அற்புதமான தத்துவம் .

முருகா போற்றி ! பழனியாண்டவா போற்றி!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close