ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் – தகப்பனுக்கே சுவாமியானவன்

  கோமதி   | Last Modified : 14 Nov, 2018 04:01 pm
arupadai-veedu-of-murugan-swamimalai

சுவாமிமலை - நான்காவதுபடை வீடு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாகத் திகழ்வது சுவாமிமலை. இதற்கு திருவேரகம் என்ற பெயரும் உண்டு. இங்கு கதிர்வேலனாக முருகப்பெருமான் தன்னை நாடி வந்தோர்க்கு அருள்பாலிக்கிறார். வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்" என்று போற்றுகின்றனர்.தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

தகப்பன் ஸ்வாமியானவன்

தன்னால் தான் இந்த உலகின் ஜீவராசிகள் படைக்கப்படுகின்றது என்ற மமதை,பிரம்மனின் நான்கு தலைக்கும் ஏறியது.இந்த கர்வம் அளவு கடந்து போக, ஒருமுறை முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்த போது அவரை வணங்க தவறிவிட்டார். அப்போது பிரம்மாவிடம், படைப்புத் தொழில் செய்யும் உமக்கு -ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். கேள்விக்கு விடை தெரியாத பிரம்மாவை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகன். ஈசனே கேட்டுக்கொண்ட தன் பேரில், பிரம்மாவை விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?" என்று முருகனிடம் கேட்டார். "ஓ நன்றாகத் தெரியுமே" என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?" என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!" என்றார் முருகன்.

அதன்படி சிவபெருமான்,தகப்பன் ஸ்தானத்தில் இருந்து சிஷ்யன் நிலையில் அமர்ந்து, இந்த தலத்தில், முருகப்பெருமானிடம் பிரணவ உபதேசம் கேட்டார். இவ்வாறு தகப்பனுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவர் சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றப்படுகிறார். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலை என்று பெயர் பெற்றுவிட்டது.

நான்கரை அடி உயர நின்ற கோலத்தில் கருணாமூர்த்தியாக காட்சித் தரும் ஞான குருநாதன் முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை காண நம் மனதிலும் அந்த சாந்தம் குடிகொள்ளும்.வழக்கமாக முருகன் கோவில்களில் மகாமண்டபத்தில் மயில் காணப்படும்.  ஆனால் இங்கு மயிலுக்கு பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானையை பார்க்கலாம்.  

பெயரளவில் தான் மலை

பெயரளவில் மலை என்று இருந்தாலும், இயற்கையாக இல்லாமல், ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில் தான் சுவாமிமலை. மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்திலும், இரண்டாம் பிரகாரம் மலையின் நடுப்பாகத்திலும் முதலாம் பிரகாரம் மலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.சுவாமிநாத சுவாமியை தரிசிக்க, 60 தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் 60 படிகளை கடந்து,மேலே ஏறிச் செல்ல வேண்டும். 

இங்கு மேல்தளத்தில் சன்னதி கொண்டிருக்கும் கண்கொடுத்த கணபதியை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை கிடைக்கும் என்பது நம்பிக்கை. செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு இவர் கண்பார்வையை அருளியதால் இவரை "கண் கொடுத்த கணபதி" என்று பக்தர்களால் போற்றப்படுகிறார். 

திருக்கார்த்திகை திருவிழா இத்தலத்தில் 10 நாட்கள் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். சித்திரை10 நாள் பிரம்மோற்சவம், வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி மாத பவித்ரோற்சவம், புரட்டாசி மாத நவராத்திரி பெருவிழா, ஐப்பசி மாத கந்த சஷ்டி விழா, மார்கழி திருவாதிரைத் திருநாள், தை மாத தைப்பூசப் பெருவிழா, பங்குனி வள்ளி திருக்கல்யாணம் ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

வேலுண்டு வினையில்லை...

மயிலுண்டு பயமில்லை....

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close