ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஔவ்வைக்காக சுட்ட பழம்

  கோமதி   | Last Modified : 14 Nov, 2018 07:09 pm
arupadai-veedu-of-murugan-pazhamuthircholai

பழமுதிர்ச்சோலை - ஆறாவதுபடை வீடு

முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படுவது பழமுதிர்ச்சோலை. பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை " என்று அழகானப் பொருளை தருகிறார்கள். மதுரை மாநகரில் இருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது.எந்த முருகன் கோவில்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பாக,இந்த தலம் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடும் அமைந்துள்ளது. இது சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பது சிறப்பு. 

பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் முருகப் பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. கோவில் மூலஸ்தானத்தில் வெற்றிவேலனாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

ஔவ்வைக்காக சுட்ட பழம் :

தனது தமிழ் புலமையால் ஏற்பட்ட செருக்கால் ‘தான்’ என்ற அகங்காரம் ஏற்பட்ட ஔவ்வையாருக்கு, அதனை உணர்த்த எண்ணிய முருகப்பெருமான், ஔவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் காட்சி தந்தார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்த ஔவ்வைக்கு, நீண்ட பயணத்தால், களைப்பும் பசியும் ஏற்பட்டது.  அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார்.உடனே அந்த சிறுவனிடம், "குழந்தாய்... எனக்கு பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களை பறித்து தர முடியுமா? " என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.சிறுவனின் கேள்வி ஔவ்வைக்கு புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப்பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுட்டப்பழத்தையே கொடுப்பா... " என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப்பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்த பழங்களை பொறுக்கிய ஔவ்வை, அந்த பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா? " என்று கேட்டார்.சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே ஔவ்வையின் அகங்காரம் பறந்துபோனது. தன்னை சிந்திக்க வைத்த அந்த சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்தவர் "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார். மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து ஔவ்வைக்கு அருளினார்.இந்த திருவிளையாடல் நடந்ததாக சொல்லப்படும், நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில், முருகன்  கோவிலுக்கு சற்று முன்னதாக இன்றும் காணப்படுகிறது. 

பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்னும் புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதே புரியாத புதிராக இருக்கும் நிலையில்,ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்த தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும், முருகப்பெருமானின் திருப்பாதத்தில் இருந்து இது உருவாகியது என்ற கர்ண பரம்பரைக் கதையும் வழக்கில் உள்ளது.இந்த தீர்த்த தண்ணீர் இரும்புச்சத்து, தாமிரச்சத்து,அபூர்வ மூலிகைகள் பல கலந்து இருப்பதால்,இந்த தீர்த்தத்தில் நீராடினால் எப்பேற்பட்ட நோயும் பறந்தோடிவிடும் என்று இங்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடிச் செல்கிறார்கள்.இத்தலம் ஒரு சிறந்த திருமண பரிகார தலமாக விளங்குகிறது. திருமணம் ஆகாதவர்கள், இந்த வெற்றிவேல் முருகனை வழிபட்டால் வெற்றிக்கரமான வாழ்க்கை அமையும் என்று கூறுகிறார்கள்.கந்த சஷ்டி விழா,தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

வேலுண்டு வினையில்லை....

மயிலுண்டு பயமில்லை...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close