சபரிமலையில் மணிகண்டனின் தவக்கோலம்

  கோமதி   | Last Modified : 21 Nov, 2018 04:47 pm
manigandan-s-penance-in-sabarimala

இறைவனின் பல அவதாரங்கள் , இயற்கை மற்றும் மனித வாழ்க்கையை மேம்படுத்தவும், பல பாடங்களை உணர்த்தும் செயல்களே. உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்களை சபரிமலைக்கு ஈர்க்கும் அய்யன் ஐயப்ப சாமியின் அவதாரத் திருக்கதை எப்போது,எத்தனை முறை படித்தாலும் நமக்கு மெய்சிலிர்க்க செய்திடும் ஆன்மிக அற்புத அனுபவம்.

இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார். அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் மகனாக அவதரித்தவர்  ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார்.

குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும்,ஹரனும்.இறைவனின் திருவிளையாடல்களுக்கு அளவேது.தனது தீவிர பக்தனான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொருளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர்.

வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேட, மரத்தடியில் ஜொலிக்கும் தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.

அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள்.ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும் குழந்தை பிறந்தது என பெரு மகிழ்ச்சி  அடைந்தனர்.அதிக காலம் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இளவரசராக, வருங்கால அரசராக மணிகண்டன் முடி சூடமுடியாது. அவர் நீங்கள் பெற்ற பிள்ளை அல்லவே என சிலர் தூபமிட்டனர். எல்லாம் இறைவனின் திருவிளையாடலின் பகுதி தானே.

உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சு கலக்கப்பட்டது.பெற்ற பிள்ளை மன்னன் ஆகவேண்டும் என்ற ஆசையில் மனம் தடுமாறினாள் அரசி. மனம் மாறிய அரசி தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.

அனைத்தும் அறிந்த அய்யன் , தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுத்தாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலிகளாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன். புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள். ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.அவதார நாயகன் தர்ம சாஸ்தா அய்யன், தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் ஐயப்பன்.

சபரிமலையில்  தவக் கோலத்தில் அருள் தரும் ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதன் பின்னணியில் புராண சம்பவம் ஒன்று பொதிந்துள்ளது.ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு முறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்ட போது அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.அதனால் தான் இன்றைக்கும் ஐயப்ப சாமியின் விக்கிரத்தை உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றுகிறது.

ஐய்யப்பனுக்கு விரதம் இருக்கும் காலங்களில் நம் மனம் மற்றும் உடல் பக்குவமடைந்து இறைவனிடம் சரணடைகிறது.நம்மை ஒழுக்க நெறியில் இட்டுச் செல்லும் இத்தகைய விரதங்களும் வழிபாடுகளும் தான் நம் இந்து மதத்தின் பலம். 

சுவாமியே சரணம் ஐய்யப்பா!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close