சகல நலன்களையும் அளிக்க வல்ல சப்த கன்னியர் வழிபாடு

  கோமதி   | Last Modified : 28 Nov, 2018 10:37 am
worship-of-the-sapta-kanniyar-will-provide-all-the-benefits

சாக்த வழிபாடு எனப்படும் சக்தி வழிபாட்டில், சப்த மாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது ஒரு அங்கமாகவே காணப்படுகின்றது. 

யார் இந்த சப்த கன்னியர்கள் ?

அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களின் அக்கிரமங்கள் எல்லை கடந்து போக,அவர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள்.ப்ராம்மி,மகேஸ்வரி,கவுமாரி,வைஷ்ணவி,வராஹி,இந்திராணி,சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகளே சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 

ப்ராம்மி

அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் ப்ராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள். அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை, படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். உயர்தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்து வந்தால் வெற்றி நிச்சயம். அச்சமயம் அசைவம் கண்டிப்பாக  தவிர்க்க வேண்டும்.

வாராஹி

அம்பிகையின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்கும் இவள், சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவள் எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள்.மிருகபலமும்,தேவகுணமும் கொண்டவள். பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள்.லலிதாம்பிகையின் படைத்தலைவியும் இவளே. இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.

மகேஸ்வரி

அம்பிகையின் தோளில் இருந்து உருவான இவளது சக்தியால் தான் ஈஸ்வரன் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள். 

இந்திராணி:

அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி. இந்திரனின் அம்சம். தன்னை வணங்குபவர்களுக்கு சொத்து சுகம் தருவதோடு, அவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துத் தருவதிலும்,சிறந்தவள். முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே.மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

கௌமாரி

முருகனின் அம்சமே கௌமாரி. இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவள்,கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்தும் சக்தி படைத்தவள்.இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். அந்த முருகனைப் போன்று மாறாத இளமையைத் தருபவள்.

வைஷ்ணவி

அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். வளமான வாழ்வையும், சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவள். 

சாமுண்டி

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளி,தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள்.இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே என்பதால், சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் வரங்களை அருளுபவள்.இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். 

சப்த கன்னியர்களை வழிபட்டால் நம் வாழ்விற்கு தேவையான அனைத்து நலன்களையும் பெற்றிடலாம்.தூய்மையான மனதால்,இந்த சப்த மாதர்களை வணங்கிட கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்கள்.நம்மை காத்து நிற்பார்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close