பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களில் முதல் தலம், உலகளந்த பெருமாள் - திருக்கோயிலூர்

  கோமதி   | Last Modified : 29 Nov, 2018 01:47 pm

the-first-of-the-pancha-krishna-shetras-the-lord-perumal-thirukoilur

திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம்,திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்சஷேத்திரங்களில் இது முதலாவது தலம். கோயில் நுழைவு வாயிலின்  வலதுபக்கம் சாளக்கிராமத்தால் ஆன கிருஷணர் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.  108 வைணவ திவ்ய தேசங்களில்   43 வது தேசமாக  உலகளந்த பெருமாள்  கோயில் உள்ளது. தமிழகத்தில் 3 வது பெரிய கோபுரம் கொண்ட தலம் இது.  ராஜகோபுரம் 192-அடி உயரம் கொண்டது . இத்தலத்தை நடுநாட்டு திருப்பதி என்றும் கூறுகின்றனர்,இக்கோயிலில்  அருள்பாலிக்கும் பெருமாள் வேறு எங்கும் இல்லாத சிறப்பாக  வலது கரத்தில் சங்கும் இடது புறத்தில் சக்கரமும் ஏந்தி ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார்.பெருமாளைப் புகழ்ந்துபாடிய முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்  இத்தலத்து பெருமாளைத்தான் முதன்  முதலாக போற்றிப் பாடியுள்ளனர்.

‘அன்பே தகளியாக;

ஆர்வமே நெய்யாக’

என்ற பெரியாழ்வார் பாடியிருக்கிறார். 

சிவன் கோவில் ஒன்றில் விளக்கு அணையும் நிலையில் இருந்த போது, அங்கு துள்ளி திரிந்த  ஒரு எலியின் மூக்கு நுனியால் விளக்குத் திரி தூண்டப்பட்டு அணையும் தருவாயில் இருந்த விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. இதனால் சிவபெருமானின் அருளைப் பெற்று   மறுபிறவியில் நாடு போற்றும் மகாபலி சக்கரவர்த்தியாக பிறப்பெடுத்தது.

அசுர குலத்தில் பிறந்திருந்த மகாபலி சக்கர வர்த்தி சிறப்பாக  ஆட்சி புரிந்து  பேரும், புகழும் பெற்று வாழ்ந்தான். தன்னை விட புகழ்பெற்றவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான்.  இதைக் கேள்விப்பட்ட தேவர்கள் கலங்கிப் போனார்கள். புண்ணிய காரியங்களைச் செய்திருக்கும் மகாபலி இந்த வேள்வியையும் முடித்துவிட்டால் அசுரகுலத்தைச் சேர்ந்தவன் இந்திரப்பதவி அடையக்கூடும் என்று மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். தேவர்களைக் காக்கும் பொறுப்பு தன்னுடையது என்பதால் மஹாவிஷ்ணுவும் அவர்களது கோரிக்கைகளை ஒப்புக்கொண்டார். அதேநேரம் மகாபலியின் சிறப்பை உலகும் அறியவேண்டும் என்று புறப்பட்டார்.

வாமன  அவதாரம் தரித்தத  மகாவிஷ்ணு 3 அடி உயரத்துடன்  ஒரு கையில் தாழம்பூ குடை, மற்றொரு கையில் கமண்டலம் கொண்டு மகாபலி நடத்தும் வேள்வி சாலைக்குச் சென்றார்.  வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அசுர குல குருவான சுக்ராச்சாரியார் அறிந்து கொண்டார்.  மகாபலி அவரை வரவேற்று தானம் வழங்க முற்பட்டான்.சுக்ராச்சாரியார், மகாபலியிடம், ‘மகாபலி! வந்திருக்கும் அந்தணரின் மேல் எனக்குச் சந்தேகமாக உள்ளது. அவர் திருமாலின் அவதாரமாக இருக்கலாம். எனவே தானம் கொடுப்பதில் அவசரம் வேண்டாம்’ என்று  கூறினார்.மகாபலி மிகவும் மகிழ்ச்சியாக, “குருவே! என்னிடம் தானம் பெற வந்திருப்பது திருமாலின் அவதாரம் என்றால் இதைவிட பெரிய பேறு எனக்கு  என்ன இருக்கப் போகிறது!’ என்று குழந்தையாக காட்சித் தந்த மஹாவிஷ்ணுவின் அருகில் சென்று,  கமண்டலத்தை எடுத்து நீர் வார்த்து தானத்தைக் கொடுக்க முன்வந்தான்.  சுக்ராச்சாரியார்  ஒரு  தும்பி  (வண்டு)யின் உருவம் கொண்டு கமண்டலத்திற்குள் புகுந்து நீர் வரும் வழியை அடைத்துவிட்டார். வாமனராக அவதாரம் எடுத்த மஷாவிஷ்ணுவோ தர்ப்பைப் புல் ஒன்றை எடுத்து நீரை அடைத்திருந்த  வண்டை நோக்கி குத்தினார். இதில் சுக்ராச்சாரியாரின் கண் பார்வை பறி போனது. 

’இப்போது சொல்லுங்கள் தங்களுக்கு என்ன வேண்டும்?  என்று கேட்ட மகாபலியிடம் ’எனக்கு  மூன்றடி மண் வேண்டும்” என்று கேட்டார் வாமனர்.அவ்வளவுதானே .. அது என் பாக்கியம் என்று நீர் வார்த்து தானத்தைக்  கொடுத்து தங்களுக்கு உண்டானதை எடுத்துக்கொள்ளுங்கள் என்றான்.  இதற்காகவே காத்திருந்த வாமனர் உருவத்தில் இருந்த மஹாவிஷ்ணு  தன் 3 அடியிலிருந்து  வானுயரத்திற்கு உயர்ந்தார்.  செய்வதறியாது ஆச்சரியத்தில் மலைத்துப் போய் நின்றான் மகாபலி சக்கரவர்த்தி.

உயர்ந்து நின்ற வாமனர் முதல் அடியைக்  கொண்டு மண்ணுலகையும், இரண்டாம் அடியாக விண்ணுலகையும் அளந்து  முடித்தார். பின்னர் மகாபலியிடம், ‘சக்கரவர்த்தியே! நான் இரு உலகங்களையும் இரண்டு அடியில் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது’ என்று கேட்டார்.  மகாபலி சற்றும் யோசிக்காமல் நிலத்தில் மண்டியிட்டு  ‘இறைவா! மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்’ என்று சிரம் தாழ்த்தினான். மகாவிஷ்ணு வும் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளி,‘மகாபலியே! உன் சிறப்பான நல்லாட்சியால் உன் நாட்டை வளம் பெறச்  செய்தாய்.நீ பெற்ற புண்ணியம் அனைத்தும் உனக்கு உயர்வைத் தந்தது.  இப்போது நீ எனக்கு வழங்கிய தானத்தினால், இந்த உலகமே போற்றும் அளவுக்கு சிறப்புற்று இருப்பாய்’ என்று அருளி  தன்னோடு  இணைத்துக் கொண்டார்.

இங்கு வீற்றிருக்கும் மூலவர் திருவிக்கிரமர்  திருமேனி   தாருவால் ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  தாயார் பூங்கோவல் நாச்சியார்.  இங்கு தல விருட்சம்  புன்னை மரம். இந்த ஆலயத்தின் மற்றுமொரு சிறப்பு 108 திவ்ய  தேசங்களில் இங்கு மட்டும்தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறார். பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான் விஷ்ணு துர்க்கை பார்க்க முடியும்.   நவக்கிரக தோஷம் இருப்பவர்கள் செவ்வாள், வெள்ளிக் கிழமைகளில் ராகு தோஷத்தில் துர்க்கைக்கு பூஜை செய்தால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

தொழிலில் பதவி உயர்வு, எதிரிகள் பிரச்னை, இழந்த புகழை மீண்டும் பெற இப்பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார். நேரம் கிடைக்கும் போது தவறாமல் சென்று வாருங்கள். தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் அருள்மிகு திருவிக்கிரமசுவாமி அருள்பாலிக்கிறார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.