ஆன்மிகக்கதை – எந்த சூழலிலும் இந்த நபரை மட்டும் விட்டு விடாதீர்கள்

  கோமதி   | Last Modified : 03 Dec, 2018 02:28 pm

spiritual-story-do-not-leave-this-person-in-any-situation

இன்பம்- துன்பம், ஏற்றம் -இறக்கம் என  எத்தகைய சூழலிலும்  தன்னிலை மறக்காமல் வாழும்  மனிதன்  மாமனிதன். அத்தகைய பேறு எல்லாருக்கும்  எளிதில் கிட்டுவதில்லை.  எளிதில் கிட்டினாலும் மனிதன் அதைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு பக்குவம் பெறுவதில்லை என்பதுதான் ஆன்மிக வாதிகளின் கருத்து.

ஓர் ஊரில்  குறையாத செல்வம் பெற்ற பெரும் செல்வந்தன் ஒருவன் இருந்தான். தானம், தருமம் என்று அனைத்தையும் செய்து மக்களின் அன்பை பெற்று மகிழ்வோடு வாழ்ந்திருந்தான்.  அஷ்ட லஷ்மிகளும் அவன் வீட்டில் குடிபுகுந்து வசிக்கத் தொடங்கியது. நல்ல மனைவி, சிறந்த குழந்தை, அரண்மனை போன்ற வீடு என ஊர்போற்ற வாழ்ந்தவனுக்கும் அடிசறுக்கியது. செய் தொழிலில் ஏற்பட்ட சரிவு தொடர்ந்து அவன் சாம்ராஜ்யத்தைப் பதம் பார்த்தது.  நாளாக நாளாக சரியாகும் என்ற அவனது எண்ணம் தவிடு பொடியானது. அவனால் இயன்றளவு நஷ்டத்திலிருந்து மீளப் பார்த்தான். அவனைச் சுற்றியிருந்த உறவுகளும், நண்பர்களும், ஊர் மக்களும்  அவனுக்கு உதவினார்கள்.   மனம் தளராமல் தைரியமாக அனைத்தையும் எதிர்கொண்டான். அவன் வாழ்வில் வறுமை மெல்ல எட்டிப்பார்த்து வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துவிட்டது.  அவனிடம் ஒன்றுமில்லை என்றது உறுதியானதும்  ஊர் மக்கள் அவனிடமிருந்து கரைந்து செல்லத் தொடங்கினார்கள். அவர்களை இன்முகத்தோடு அனுப்பினான். அடுத்தடுத்தது உறவினர்கள் கூட்டமும்  ஏதோ  ஒரு காரணம் சொல்லி கரைந்து சென்றது. அவர்களிடமும் முகம் காட்டாமல் புன்னகையுடனே வழியனுப்பினான். இறுதியாக  நண்பர்கள் கூட்டம்  நழுவிய போதும் நட்பு பாராட்டி அனுப்பினான்.

அதுவரை  வாழ்க்கையில் சொர்க்கத்தை மட்டுமே அனுபவித்த  அக்குடும்பம் வறுமை என்னும் அரக்கனின் பிடியில்  சிக்கியது. அவன் இல்லத்தில் வறுமை சிம்மாசனமிட்டு அமர்ந்தது. எனினும் அவன் மனம் தளரவில்லை.  அதுவரை குடியேறாமல் இருந்த மூதேவி   மெல்ல எட்டிப்பார்த்தாள்.  தானத்தையும், தர்மத்தையும்,  மகிழ்ச்சியையும்  ஒரு சேர அந்த வீட்டில் கண்ட அஷ்டலஷ்மிகள் அவ்வீட்டின் துரதிஷ்டத்தைக் கண்டு  வெளியேற முடிவு செய்து அவனிடம்  அனுமதி கேட்டது. அதுவரை  அமைதியாக இருந்த அவன் அழத்தொடங்கி னான். என்னை விட்டு செல்வம் போயிற்று... தானம் தர்மமும் செய்ய முடியாமல் போயிற்று... சுற்றமும், சூழலும் கரைந்து போனார்கள்... நண்பர்கள் பிரிந்து சென்றார்கள்... அப்போதெல்லாம் நீ என்னுடன் இருக்கிறாய்   என்னும் தைரியத்தில் இருந்தேன்.  அதனால் நீ மட்டும் என்னை விட்டு போகாதே என்று கதறினானாம். மனமிறங்கிய மஹாலஷ்மி  அவன் வீட்டிலேயே வசிக்க தொடங்கியதாம். நமக்கு இந்த வீட்டில்  வேலையில்லை என்று தரித்தரமும், மூதேவியும் வெளியேறியதாம். மீண்டும் செல்வங்கள் கொழிக்க உற்றார், உறவினர்களை அரவணைத்து ஊர் போற்ற வாழ்ந்தானாம்  அவனுக்குத்தான்  லஷ்மி உடன் இருக்கிறாளே. எத்தகைய சூழல் வந்தாலும் தைரிய லட்சுமியை மட்டும் நம் மனதில் நிலைக்க செய்தால் போதும், மற்ற லட்சுமிகளும் கூடவே இருப்பர்கள்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.