தீப ஜோதியானது பிரகாசமான ஒளியைத் தரும். ஆம் அறையின் இருட்டைப் போக்க சிறிய தீபத்தின் ஒளி போதுமானது. அதுபோல் நம் வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்களும், அசெளரியங்களும் இருட்டு போலதான். எப்போதும் இவை நம்முடன் தொடர்ந்து இருக்க முடியாது. இவற்றிலிருந்து வெளி வருவதற்கு தான் தீபம் என்னும் வெளிச்சம் வழியாக இறைவனை இல்லத்துக்குள் பூஜிக்கிறோம்.
இறைவனை நினைத்து பூஜிக்க தொடங்கும் போதே இறைவனின் கண் பார்வை நம் மீது திவ்யமாய் பிரகாசிக்கும். விளக்கேற்றுவதற்கு உரிய நேரம், பூஜை முறைகள் என்று ஒவ்வொன்றையும் சரிபார்த்து செய்யும் சிலர் விளக்கேற்றும் போதும் சில நியதிகளை கடைப்பிடிக்க வேண்டும். வெள்ளி, பித்தளை விளக்குகளில் காமாட்சி அம்மன் உருவத்தோடு வழிபடுவது பொதுவானது. ஆனால் இறைவன் அருளைப் பெற மண் அகல்விளக்கு கூட போதுமானது. மண் அகலில் எண்ணெய் விட்டு அதன் பிறகு திரியை இட்டு விளக்கேற்ற வேண்டும். பசு நெய்யில் விளக்கேற்றினால் எல்லா சுகங்களும் கிடைக்கும். பசுவில் தேவர்களும் அனைத்து தெய்வங்களும் வசிப்பதாக ஐதிகம்.மேலும் பசுவின் பாலில் இருந்து உருவாகும் நெய்யில் அம்பிகை வாசம் செய்வதால் நெய் தீபமானது சிவமாகிய ஜோதியுடன் இணைந்து சிவசக்தி சொரூபமாக மாறுகிறது.
எள்ளிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெய்யால் நம்மைப் பிடித்திருக்கும் பீடைகள் விலகும். விளக்கெண்ணெய் தீபம் புகழையும், இல்லற சுகத்தையும் கொடுக்கும்.எல்லா வளமும் பெறுவதற்கு பசுநெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காயெண்ணெய் கலந்த பஞ்சதீப எண்ணெய் மிகவும் உகந்தது. பஞ்சமி திதியில் குத்துவிளக்கில் அடிப்பாகம், நடுப்பகுதி, உச்சிப்பகுதியில் பூச்சூடி பஞ்ச தீப எண்ணெயை ஊற்றி, திரியிட்டு ஐந்துமுகமாக ஏற்றி வடக்குப் பக்கம் பார்த்து தீபம் ஏற்றி வழிபட்டால் செய்யும் காரியங்களில் வெற்றிக்கிடைக்கும் என்பது வாக்கு.
தீபத்தை ஏற்றியாகிற்று.கண்களை மூடியபடி இறைவனை வேண்டாமல் முழுக்கவனத்தையும் தீபத்தைப் பார்த்து இறைவனை மனமுருக வேண்டினால் போதும். நம் உடம்பின் ஐம்புலன்களில் முக்கியமானது முதன்மையானது கண்கள் தான். கண்கள் வழியாகத்தான் உலகில் உள்ள அனைத்தையும் பார்க்கிறோம். பார்ப்பது மனதிலும் ,உயிரிலும் பதிகிறது. உயிரானது ஆன்மாவில் பதிவாகிறது. பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றி வழிபடும் போது அந்தத் தீப ஒளியை 15 நிமிடங்கள் தொடர்ந்து, கவனத்துடன் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம். அப்படி பார்க்கும் போது நமது மனத்தில் உள்ள குழப்பங்கள் மறைந்து மனம் தெளிவடையும். மனத்தில் ஆன்மிக உணர்வும் இறைவனின் அருகாமையும் உணரக்கூடிய ஞானத்தை அளிக்கும் தீப வழிபாட்டை மேற்கொள்வோம்.