ஆன்மீக கதை -கடவுளே குடியிருக்க விரும்பும் கோயில்…

  கோமதி   | Last Modified : 08 Dec, 2018 06:01 pm

spiritual-story-the-temple-that-god-wants-to-live-in

நினைத்தது நினைத்தபடி நடந்துவிட்டால் இறைவனை நினைப்பதற்கு நேரம் இருக்காது என்று  விளையாட்டாக சொல்வார்கள். ஆனால் இன்பத்திலும் துன்பத்திலும் பக்தர்கள் தங்களுக்குப் பிடித்த கடவுளை அவருக்குப் பிடித்தமான வகையில் வழிபாடு செய்து வருகின்றனர். நமக்கு என்னெல்லாம் தேவை என்று கடவுளிடம் பட்டியிலிடுகிறோம். ஆனால்  பொறுமையோடு நிதானம் தவறாமல் அனைவரிடமும் அன்பு செலுத்து. உனக்கு உண்டானது நிச்சயம் உன்னைச் சேரும் என்கிறார் கடவுள்.

இதற்கு ஓர் உதாரணக் கதை உண்டு. மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் ஒரு குருகுலத்தில் கல்வி கற்பதற்குச் சென்றார்கள். ஏற்கனவே  பல நாடுகளைச் சேர்ந்த இளவரசர்கள் குருகுலத்தில் தங்கியிருந்தனர். இவர்களும் அங்கு தங்கி ஆர்வத்தோடு படித்தார்கள். சில ஆண்டுகள் கழிந்ததும் எல்லோரும் ஊருக்குத் திரும்பும் காலம் வந்தது. ஒவ்வொரு மாணவரும் குருவிடம் சென்று விடைபெற்று திரும்பினர். குரு ஒவ்வொரு மாணவனிடமும் ’’நீ என்ன கற்று கொண்டாய்?” என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஓலைச்சுவடியில் தங்களுக்குப் பிடித்த பாடங்களை எழுதி வைத்திருந்தனர். அதைப் படித்து காட்டியபடி குருவிடம் பாராட்டு பெற்றனர். இப்படி ஒவ்வொருவராக வந்து குருவிடம் தாங்கள் கற்றுக் கொண்டவற்றைப் பகிர்ந்துகொண்டனர். அடுத்தது தர்மரின் முமுறை வந்தது. குருவுக்கு தர்மரிடம் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. தருமர் அருகில் வந்து அமைதியாக நின்றார். “என்னிடம் நீ என்ன கற்றுக்கொண்டாய் தர்மா... உன் கையில் வைத்திருக்கும் ஓலைச்சுவடியைப் பிரித்துப் படி...!” என்றார் குரு.

தருமர் தன்னிடம் இருந்த ஓலைச்சுவடியைப் பிரிக்காமல் குருவே... நான் உங்களிடம் ஒன்றே ஒன்றை கற்றுக்கொண்டேன்.வாழ்க்கையில் எனக்கு மிகவும் முக்கியமான பாடம் அதுதான் என்றார்.குருவுக்கு ஆச்சரியமாக இருந்தது. “இவ்வளவு காலம் என்னுடன் இருந்தாய்....என்னிடம் அதிகம் கற்றுக்கொண்ட மாணவன் நீ... ஒன்றை  மட்டும் கற்றுக்கொண்டாயா.. நன்றாக யோசனை செய்து சொல் தர்மா.. ஏனெனில் இங்கு வயதில் மூத்தவன் நீதான்.. அறிவிலும் உன்னை உயர்ந்தவன் என்றே நினைக்கிறேன்” என்றார்.

தர்மரிடம் இருந்து மீண்டும் அதே பதில் வந்தது. “நிச்சயமாக குருவே.. இவ்வளவு காலமாக நான் உங்களிடம் கற்றுக் கொண்ட பாடம் ஒன்றுதான்” என்றதும் குருவுக்கு கோபம் வந்துவிட்டது. “என்ன உளருகிறாய் தர்மா? உன்னை விட வயது குறைந்த மாணவர்கள் எவ்வளவு அழகாகப் புரிந்து அதை ஓலைச்சுவடியிலும் எழுதியிருக்கிறார்கள். முதலில் உன் ஓலைச்சுவடியைப் பிரிந்து படி”.. என்று கட்டளையிட்டார். “இல்லை குருவே..  உங்களிடமிருந்து முக்கியமான பாடம் ஒன்றை மட்டுமே கற்றுக்கொண்டிருக்கிறேன்.அதை மட்டும்தான் சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறேன். வேறு எதையும் நான் விரும்பவில்லை” என்றதும்  அங்கிருந்த மாணவர்கள் சிரித்துவிட்டார்கள். குருவுக்கு அவமானமாகிவிட்டது தர்மரை ஓங்கி அறைந்துவிட்டார்.ஆனாலும் தர்மர் அமைதியை இழக்காமல் நின்றார். சுற்றியிருந்தவர்கள் பயந்துவிட்டார்கள். பொறுமையிழந்த குரு தர்மரின் கையிலிருந்த ஓலைச்சுவடியை வாங்கி உரக்க படித்தார்.

‘எப்படிப்பட்ட சோதனையிலும் நிதானம் இழந்து கோபத்திற்கு ஆளாகக் கூடாது. எதிரியாக இருந்தாலும் அன்பு செலுத்த வேண்டும். கடவுளின் அருள் பார்வை நிச்சயம் கிட்டும் என்று படித்ததும் குருவுக்கும் மாணவர்களுக்கும் புரிந்துவிட்டது. தர்மர் வாழ்க்கைப் பாடத்தை மட்டும் படிக்கவில்லை. கடவுளை அடையும் வழியையும் கற்றுணர்ந்திருக்கிறார்.  குரு, தர்மரை கட்டித் தழுவி “என்னை மன்னித்துவிடு தர்மா... நானே தெரிந்து கொள்ளாத ஒன்றை பரம்பொருள் அடையும் வழியை எனக்குப் போதித்துவிட்டாய். என்னுடைய மாணவன் நீ என்பதில் பெருமிதமடைகிறேன்”என்றார்.

ஆம்.. கடவுளின் அருள் பார்வை கிட்டாதா என்று ஏங்குபவர்கள் முதலில் கடவுளுக்குப் பிடித்த பிள்ளைகளாக நடக்கவேண்டும். அன்பும், பொறுமையும் இருக்கும் இடங்கள் கடவுளே குடிகொள்ள விரும்பும் ஆலயம் என்பதை உணர்ந்து அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.