தன் பக்தியால் இறைவனை ஆண்ட ஆண்டாள் நாச்சியார்

  கோமதி   | Last Modified : 16 Dec, 2018 11:49 am
andal-nachiyar-the-one-who-conquered-god-by-her-devotion

பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் என்ற பெருமைக்குரிய ஆண்டாளை அறியாதவர்கள் யாருமில்லை. மார்கழி என்றாலே ஆண்டாளும் அவளது பக்தியும் நினைவுக்கு வரும்.ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் துளசி செடியின் அடியில் ஆண்டாள் அவதாரம் செய்தாள். பெரியாழ்வார்  ஆண்டாளை எடுத்து சுரும்பார் குழற்கோதை என்ற பெயரிட்டு அன்பாக  வளர்த்து வந்தார். இவரது முக்கியப்பணி நந்தவனத்தில் உள்ள மலர்களைப் பறித்து அழகிய மாலையாக தொடுத்து ரெங்கமன்னருக்கு வழங்குவதே.அவ்வாறு மலர்களைப் பறிக்கும்போதும், மாலையாக தொடுக்கும்போதும் அவருக்குத் தெரிந்த சமயம், தமிழ் தொடர்பான அனைத்தையும் கோதைக்கு கற்றுத் தந்தார்.அவர் சொல்வதைக் கேட்க கேட்க இளம் வயதிலேயே கோதைக்கு விஷ்ணுவின் மீது இனம்புரியாத பக்தி ஆட்கொண்டது. ஆழ்வார் சொல்வதைக் கேட்டு வளர்ந்த கோதை வளர்ந்து பெரியவளானதும் சிறுவயது முதல் தான் கேட்டு வளர்ந்த கண்ணனையே மணாளனாக அடையவேண்டும் என்று தீவிரம் கொண்டாள். கண்ணனை அடையும் அழகு தனக்கிருக்கிறதா என்று அறிந்துகொள்ள இறைவனுக்கு அளிக்கப்படவிருக்கும் மாலைகளை யாரும் அறியாமல் அணிந்து பார்த்து கண்ணனுடன் மணப்பெண்ணாக கற்பனை செய்து அகமகிழ்வாள். ஒவ்வொருமுறையும் மாலைகளை அணிவதும் கண்ணாடி முன் நின்று கண்ணனை நினைத்து மெய்சிலிர்த்து மகிழ்ந்து மீண்டும் மாலையை எடுத்து வைப்பதும் கோதையின் வழக்கமாயிற்று.

ஒருமுறை மாலையை திருமாலுக்கு அணிவித்த போது கோதையின் கூந்தல் முடி ஒன்று மாலையில் சிக்கியிருந்தது.  மாலை தூய்மையில்லை என்று ஆழ்வாரிடம் அர்ச்சகர் சொல்ல வீட்டுக்குத்திரும்பிய ஆழ்வார்  தொடுத்து வைத்த மாலையை  கோதை அணிந்து அழகுப்பார்ப்பதைக் கண்டு கோதையைக் கண்டித்தார். அன்றையதினம் இரவு ஆழ்வாரின் கனவில்  தோன்றிய பெருமாள்  கோதை சூடிய மாலையே தாம் விரும்பி ஏற்கும் மாலை என்று கூறினார். அன்றுமுதல் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையே கண்ணன் விரும்பி அணியும் மாலையாயிற்று. மணவயதுக்குரிய பருவத்தில் கோதை என் மணாளன் ஸ்ரீரங்கத்தில் உறைபவனே என்று உள்ளத்தில் உறுதியுடன் கூற, செய்வது அறியாமல் திகைத்த ஆழ்வாரின் கனவில் மீண்டும் வந்த இறைவன் கோதையை ஸ்ரீரங்கம் அழைத்துவரச்சொல்லி உத்தரவிட்டார். இறைவன் குறித்த நாளில் கோயிலுக்கு செல்லப்பட்ட கோதை கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்று ஆண்டாள் வரலாறு சொல்கிறது. அனைவருக்கும் ஆண்டாளின் கதை தெரியும். ஆனாலும் எத்தனை முறை இந்தக் கதையைக் கேட்டாலும் அலுக்காமல் மனதில் பக்தி ஊற்று மட்டுமே பெருக்கெடுக்கும். 

ஸ்ரீரங்கநாதரை திருமணம் செய்வதற்காக மார்கழி மாதம் முழுவதும் நோன்பிருந்தாள் ஆண்டாள். இறைவனை மட்டுமே நினைத்து சுவாசித்து  ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்து இவள் பக்தியுடன் இயற்றியவையே திருப்பாவை. திரு என்றால் மரியாதைக்குரிய. பாவை என்றால் பெண் என்று பொருள்படும். மரியாதைக்கும் வணக்கத்துக்கும் உரிய பெண் தெய்வமான ஆண்டாள் பாடியவை என்பதால் அது திருப்பாவை என்று அழைக்கப்பட்டது. ஆண்டாள் காதலின் வீரமாக நாச்சியார் திருமொழியையும் பாடினாள். அதனால் தான் கோயில்களில் அதிகாலை நேரங்களில் இறைவனை துயில் எழுப்பும் விதமாக திருப்பாவை, திருவெண்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகின்றன.
ஆண்டாள் தன்னுடைய உண்மையான பக்தியினால் கடவுளை அடையும்பேறை அடைந்தாள். கன்னிப்பெண்கள் மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து நீராடி, திருப்பாவை பாடி மனம் முழுக்க பக்தியுடன் வேண்டினால் சிறந்த கணவனை அடையலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close