மார்கழி கோலம் நம் வாசலிலும் மலரட்டும்.

  கோமதி   | Last Modified : 16 Dec, 2018 12:28 pm
let-our-houses-also-be-decorated-by-margazhi-month-kolams

இல்லங்களில் லஷ்மிகடாட்சம் என்பது வாயிற்புறத்திலிருந்தே துவங்குகிறது. சிறப்பு மிக்க மார்கழி மாதத்தில் மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையில் எழுந்து வாசலைச் சுத்தம் செய்து, சாணம் தெளித்து வண்ணக் கோலங்களை இட்டு மகிழ்வார்கள். அரிசி மாவில் செய்த மாவை கோலமாக்கி எறும்பு உயிரினங்களுக்கு தானம் செய்வதில் தொடங்கும் அன்றைய பொழுது. .பசுஞ்சாணியைப் பிள்ளையாராக்கி மஞ்சள் குங்குமம் வைத்து பரங்கிப்பூவை நடுவில் செருகி மார்கழி பிள்ளையாரைப் பிடித்து வைப்பார்கள். பிரம்மமுகூர்த்த வேளையில் பெண்கள் வாசலைத் தூய்மைபடுத்தி அதிகாலையில் நீராடி திருப்பாவை, திருவெம்பாவை பாடி அந்த மாதம் முழுவதும் கோயிலுக்குச் செல்வார்கள். இறைவனை மட்டுமே தியானம் செய்ய வேண்டிய மாதத்தில் மனம் முழுக்க பகவானை பக்தியுடன் பாராயணம் செய்வார்கள். இவையெல்லாம் புராணாக்காலங்களிலும், கதைகளிலும் நடந்த கற்பனைத் தோற்றமில்லை. பாரம்பரியமிக்க நம் முன்னோர்கள் கடந்த 25 வருடங்கள் முன்பு வரை கடைப்பிடித்தவை தான்.

இன்றைய அவசர யுகத்தில் காலை எழுந்ததும் வாசலில் சாணம் கரைத்து தெளிப்பது குறையலாயிற்று.. பிறகு நீர் தெளிப்பதும் குறைய லாயிற்று..கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய் கோலமிடும் வழக்கமும் குறைந்து பெயிண்டால் வரையும் அளவுக்கு வந்துவிட்டது. நெருக்கடி மிகுந்த நகரங்களில் பெருகிவரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மட்டுமல்ல தனி வீடுகளிலும் இத்தகைய தோற்றத்தைக் காண முடிகிறது என்பது கவலையளிக்கிறது. அதற்கேற்றார் போல் கிராமங்களிலும் மார்கழி கோலத்துக்கான முக்கியத்துவம் குறைந்துவருகிறது என்பதைப் பார்க்க முடிகிறது. நம் முன்னோர்களின் செயல்கள் ஒவ்வொன்றும் ஆன்மிக ஞானத்தையும், அறிவியல் விஞ்ஞானத்தையும் இணைந்தே செய்யப்பட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பல விஞ்ஞான உண்மைகளை ஆன்மிகத்தோடு தொடர்புபடுத்தி இயற்கையின் வழியில் தங்களை இணைத்து வாழ பழகியிருந்தார்கள் என்பதை உலக முழுவதுமுள்ள அறிஞர்கள் உணர்ந்து வியக்கும் வகையில் தான் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கோலம் போடுவதில் என்ன விஞ்ஞானம் என்று விதண்டாவிதம் செய்யாமல் என்ன காரணம் என்று ஆராயலாம்.

பிரம்ம முகூர்த்தத்தில் வீசும் காற்று உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடியது. வைகறைப் பொழுதில் சூரியனுடமிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம் உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளைத் தருகின்றன.

மார்கழி மாதம் ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல் நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

மனித உடம்பில் சமநிலையையும் ஸ்திரத்தன்மையும் கொடுப்பதற்கு உகந்த நேரம் பிரம்மமுகூர்த்தமான அதிகாலை பொழுது தான் (4 மணி முதல் 6 மணி வரை) இதனாலேயே நமது முன்னோர்கள் யோகப்பயிற்சியை உருவாக்கி வைத்தார்கள். அவற்றில் ஒன்று அதிகாலையில் போடப்படும் வண்ணக்கோலம்.

பெண்கள்  வாசலை அடைத்து போடப்படும் வண்ணக் கோலங்களினால் தங்கள் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனின் மீது நாட்டம் செலுத்துகிறார்கள். அரிசி மாவு மாக்கோலம் ஆயிரக்கணக்கான ஜீவராசிகளுக்கு அன்னதானம் இட்டதற்கு சமம். பரங்கிப்பூ சேர்ந்து பிள்ளையார் வைக்கும் போது அழகாக மட்டுமல்ல.. அதிசயத்தக்க விஞ்ஞானமும் இதில் இணைந்திருக்கிறது.  பசுஞ்சாணம் விஷப்பூச்சிகளை வீட்டிற்குள் அனுமதிக்காது. பரங்கிப்பூ இணையும் போது சாணம் எளிதில் வறட்டியாகாது. அதனுடைய தன்மை நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

கோல வெண்மை பிரம்மாவையும் , காவி சிவபெருமானையும், பசுஞ் சாணத்தில் உள்ள பசுமை விஷ்ணுவையும் குறிக்கும். கோலத்தின் நடுவில் இருக்கும் பூசணி பூ செல்வத்தை அளிக்கும். 

வாசலை அடைக்கும் அளவு கோலம்போட முடியவில்லையென்றாலும் இருக்கும் இடத்துக்கேற்றார் போலவாது சிறிய கோலத்தை அரிசி மாவில் போடுங்கள். குறிப்பாக வேலையட்களைக் கொண்டு கோலம் போடச் சொல்லாமல் வீட்டுப் பெண்களே கோலமிடுவது சிறந்தது. முன்னோர்களின் செயல்கள் நம்மையும் நம் வாழ்க்கையையும் மேலும் செம்மைப்படுத்தவே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

மார்கழி கோலம் நம் வாசலிலும் மலரட்டும். மகாலஷ்மி வாசம் குறையாமல் கிடைக்கட்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close