சிவசிந்தனையும் சிவபக்தியும் விதியை வெல்லும்( மார்கண்டேய புராணம் 1)

  கோமதி   | Last Modified : 24 Dec, 2018 11:01 am
thinking-of-lord-sivan-and-siva-bakti-will-win-the-fate-margandeyan-myth-1

ஆசிர்வாதம் செய்யும் போது என்றும் 16 ஆக மார்க்கண்டேயன் போல சிரஞ்சீவியாய் வாழ்வாய் என்று சொல்வார்களே ஏன்?..மார்க்கண்டேயன்  இறவா வரம் பெற்ற அமுதக்கனியான நெல்லிக்கனியைச் சாப்பிடவில்லை.... மாறாக மார்க்கண்டேயன் மகேஸ்வரனை சரணடைந்தான்... மரணத்தையே வென்றான்... மார்கழியில் பிறந்த மார்க்கண்டேயனைப் பற்றி  அறிவோமா...

திருக்கடையூர் அடுத்துள்ள ஊரில் தவத்தில் சிறந்த மிருகண்டு முனிவரும் உற்ற இல்வாழ்க்கைத் துணையாய் மருத்துவதியும் இனிய இல்லறம் நடத்தி வந்தார்கள். சிவ வழிப்பாட்டிலும் சிவ சிந்தனையிலும் வாழ்வதையே  குறிக்கோளாக கொண்டிருந்தார்கள். எனினும் குழந்தைச் செல்வம் இல்லாததை எண்ணி வருந்தி மகேஸ்வரனை நோக்கி தவமிருந்தார்கள். தவத்தை மெச்சிய மகேஸ்வரன் அவர்கள் முன் தோன்றி இப்பிறவியில் உங்களுக்கு மழலைச் செல்வம் இல்லை. ஆனால் உங்கள் தவத்தால் இரண்டு வரங்களை அளிக்க விரும்புகிறேன். தீயப் பழக்கங்களைக் கொண்டு நீண்ட ஆயுளுடன் வாழும் குழந்தை வேண்டுமா? ஒழுக்கத்தில் சிறந்து அழகும் அறிவும் பெற்று 16 வயது வரை மட்டுமே வாழும் குழந்தை வேண்டுமா? என்று கேட்டார்.

சிவ சிந்தையில் ஊறியிருக்கும் இத்தம்பதி குறைந்த ஆயுளைப் பெற்றாலும் நல்லொழுக்கத்துடன் கூடிய குழந்தையையே வேண்டி அருள் பெற்றனர். அதன்படி மருத்துவதியும் மார்கழி மாதத்தில் அழகான ஆண்மகவை பெற்றெடுத்தார். சிவபக்தியிலும் சிவசிந்தனையிலும், பெற்றவர்களை விட சிறந்து விளங்கினான் மார்க்கண்டேயன். பெற்றோர்களின் மனம் கோணாமல் அவர்களது எண்ணத்துக்கேற்ப வாழ்ந்து வந்தவன், தனது 16 வயதை நெருங்கும் சமயம் பெற்றோர்களின் முக வாட்டத்தைக் கண்டான். காரணத்தைக் கேட்ட மகனிடம் மனதை மறையாது ஈசனின் வரங்களைக் கூறினார்கள். இதற்காகவா இத்தனை வாட்டம். நான் இறைவனுக்கு பூஜை செய்யும் நேரம் வந்துவிட்டது. சென்று வருகிறேன் என்று சாந்தப்படுத்தியபடி ஈசனை அடைந்தான். ஓம் நமசிவாய என்ற மந்திரத்துடன் பூஜித்துக்கொண்டிருந்தான். மனிதக் கூட்டிலிருந்து ஜீவன்களை காலம் தவறாமல் காக்கும் காலன் தன் பணியை நிறைவு செய்யும் பொருட்டு பாசக்கயிறை மார்க்கண்டெயன் மீது விட்டெறிந்தான். அக்கணமே சிவலிங்கத்தை மார்க்கண்டேயன் அணைத்துக் கொள்ள பாசக்கயிறு லிங்கத்தின் மீதும் விழுந்து இறுக்கியது. கோபம் கொண்ட சிவன் காலனை காலால் எட்டி உதைத்தார். தன் கையிலிருந்த சூலாயுதத்தினால் காலனை சம்ஹாரம் செய்து கால சம்ஹார மூர்த்தி ஆனார். மார்க்கண்டேயனை ஆரத்தழுவி சிரஞ்சிவீயாக வாழ்வாய் என்று வாழ்த்தினார். 

யமதர்மன் இறந்ததால் பூமியில் உயிர்கள் பெருகின. பாரத்தைத் தாங்க முடியாத பூமா தேவி, சிவப்பெருமானிடம் தனது சுமையைச் சொல்லி யமதர்மனுக்கு  மீண்டும் உயிர்ப்பிச்சை அளிக்கும்படி வேண்டினாள். என்னிடம் பக்தி உள்ள பக்தர்களை வதைக்காதே என்ற நிபந்தனையுடன் யமதர்மனை உயிர்பித்தார் சிவபெருமான். இது புராணம்.

சிவசிந்தனையும் சிவபக்தியும் விதியை வெல்லும். விதியை வெல்ல மதிசூடியவனை இறுகப் பற்றலாம் என்ற மதியை மார்க்கண்டேயன் கொண்டிருந்தான். ஆனால் ஆயுள் முடியும் போது ஆலிங்கனம் செய்தால் யமதர்மன் விட்டுவிடுவானா? அவனுடைய கடமையை  சரியாக அல்லவா செய்தான்.. மார்க்கண்டேயன் மட்டும் விதிமுடிந்தும் சிரஞ்சீவியாக வாழ சிவபெருமான் நிந்தித்தது ஏன் என்பதை அடுத்த கட்டுரையில்  பார்க்கலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close