ஜீசஸ், அல்லா, சிவன் - எந்த சாமி பெரியவர்…?

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 12:07 pm
which-is-god-is-best-christmas-special-article

 

இயேசு நாதர் அவதரித்தத் கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடும் அனைவரும் நிறைந்த மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துகளுடன் பிராத்திக்கிறோம். இந்த நன்னாளில் சில விசயங்களை மனதளவில் நினைவுகூர்வதற்கும் அதை மனமுவந்து செயல்படுத்தவும் உறுதிபூணுவோம். 

எந்த சாமி பெரியது…? 
அதே தான். அவர் தான், அந்த சாமி தான் பெரியவர். அவர் தான் உலகத்தைச் சிருஷ்டித்தார். அவர் தான் இந்தப் பிரபஞ்சத்தைக் காத்து வருகிறார். இங்கே நடக்கும் நல்லது-கெட்டது, நியாயம்-அநியாயம், ஏற்றம்-இறக்கம், சந்தோசம்-துக்கம், ஆக்கம்-அழிவு எல்லாவற்றிற்கும் காரணம். ஆமாம், அவரே தான் எல்லாவற்றிற்கும் காரணம். நீங்கள் நினைக்கும் அந்த கடவுள் தான் எல்லாவற்றிற்கும் ஒரே காரணம். இந்த எண்ணத்தை ஒரு போதும் மறந்து விடாதீர்கள். 

பூமியில் பெரும்பான்மைப் பகுதியை ஆக்கிரமித்திருப்பது சமுத்திரம் என்கிறேன் நான், Ocean என்கிறார் இன்னொருவர், கடல் என்கிறார் மற்றொருவர், லாவுத் , ஓஸோனோ, ஓஸொனம் என்றெல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கின்றார்கள். இவர்கள் எல்லாம் ஓரிடத்தில் கூடி இவர்கள் கடல் தான் பெரிது, ஓஸோன் தான் பெரிது என்று அடித்துக் கொண்டார்கள் என்றால் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு என்ன தோணும்? பைத்தியக்காரர்கள் என்று தானே? 

இந்த உலகத்தில் இறைவனின் பிரதிநிதியாகத் தோன்றிய எல்லா மதகுருமார்களும் வகுத்து வைத்த விதிகள் மனிதகுல வளர்ச்சிக்காக மட்டுமே இருந்திருக்கின்றன. அதில் ஒரு செய்தி கூட மனிதர்களின் வளர்ச்சிக்கு எதிராக இருந்ததே இல்லை. அந்த மதம் சொல்வது எனக்கு ஏற்புடையதாக இல்லையே, இது எனக்குப் பொருந்தவில்லையே என்பதெல்லாம் மதம் காட்டிய மோட்சத்தின் வழியன்று. அந்தந்த பூகோளத் தன்மைக்கேற்ப வாழும் முறை தான்.

ஐரோப்பாவில் ஒயின் குடிக்கச் சொன்ன அதே சாமி தான் அரேபியாவில் மது குடிப்பது கடவுளுக்கு எதிரான வாழ்க்கை முறை என்று போதிக்கிறது. காரணம், ஒயின் குடிப்பதால் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடல் சூட்டைக் கூட்டி, குளிரிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்று குளிர் தேசத்துச் சாமி போதிக்கிறது. பாலைவன தேசத்துச் சாமியோ, குடித்தால் ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹாலைச் சுத்திகரிக்க உடலுக்கு அதிக நீர் தேவைப்படும், அது இந்த பாலைவனத்தில் வாழும் உங்களுக்குச் சாத்தியப்படாது. ஆகவே குடிப்பது பாவம் என்று போதிக்கிறது. தேவாலயங்களில் ஒயின் கொடுக்கிறார்கள் என்று சவுதி அரேபியாவில் உட்கார்ந்து கொண்டு ஒயின் குடித்தாலோ, குடிப்பது பாவம் என்று சொல்லிக் கொண்டு ஆல்ப்ஸ் மலையில் ஒழுக்கம் கடைபிடித்தாலோ அதோகதி தான். 

ஒரு விசயம் புரிந்து கொள்வோம். கடவுள் வேறு கலாச்சாரம் வேறு. கலாச்சாரம் அந்தந்த பூகோளச் சூழல், தட்பவெப்பம், கிடைக்கும் உணவைப் பொறுத்தது. அதில் மாற்றம் நிகழ்ந்தால் அது அங்கே வாழும் சமூகத்திற்குத் தான் கேடு. ஆரம்பத்தில் ஒன்றும் பெரிய பாதிப்பாகத் தெரியாது. ஆனால், படிப்படியாக அதன் தாக்கம் நம் சந்ததியினை அழித்துவிடும். எஸ்கிமோக்கள் வாழும் சமூகத்தில், அரைக்கீரை தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பதும், காய்கறிகள் அதிகமாகக் கிடைக்கக் கூடிய சமூகத்தில் ஆவினங்களைத் தான் சாப்பிடுவேன் என்று அதிகாரம் பண்ணுவதும், சர்க்கரை நோயாளிகள் மிகுந்த சமூகத்தில் கேக்கும் ஒயினும் தான் என் ஆகாரம் என்று அலும்புவதும் தான் பிரச்சினை. கடவுளாலோ, மதத்தினாலோ இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. 

ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்த சமூகத்தில் கடவுளின் பெயரோ, உருவோ ஒரு பிரச்சினையே இல்லை. ஒரே சாமிக்கு ஆயிரத்து எட்டு பெயரை வைத்து அதைச் சஹஸ்ரநாமம் என்று கொண்டாடும் சமூகத்தில், இயேசுவோ, மேரியோ, அல்லாவோ நிச்சயம் ஏற்கமுடியாதது அன்று. சமீபத்திய உரசல்களுக்கு மதத்தின் பெயரால் தலைவர்களாக இருப்பவர்கள் எவ்வளவு காரணமோ அதை விட ஒரு மடங்கு அதிகமாக, நம் சூழலுக்கு ஒவ்வாத கலாச்சாரப் புகுத்தல் தான். 

இது நம் பூமி, நம் தாத்தாக்கள், பூட்டன்கள் வாழ்ந்த பூமி! அவர்கள் பற்பல தலைமுறைகளாக இதில் வாழ்ந்து இந்த மண்ணின் தன்மையையும், இதன் மாண்பையும் உணர்ந்து அதற்கேற்ப வாழ்ந்த அவர்களின் வாழ்க்கை முறையைச் சீரழிப்பது, நாம் அவர்களை அவமதிப்பது போன்றது. வணங்குவது எந்தக் கடவுளின் திருநாமமாகவும் இருந்து விட்டுப் போகட்டும். வாழ்வது இந்த மண் தானே? நாம் அதற்கேற்ப தானே வாழும் முறையைக் கடைபிடிக்கணும்? கடவுளின் பெயரைச் சொல்லி நம்முள் காழ்ப்புணர்ச்சியை ஊட்டி நம் கலாச்சாரத்தைக் கெடுப்பவர்களைத் தவிர்ப்போம்.  இந்தச் சின்ன உடலில் கூட ஒவ்வாத விசயம் உட்புகுந்தால் ஒட்டு மொத்த உடலும் பாதிக்கப்படும். அந்த உடலும் உயிரும் வாழும் இந்த மண்ணையும் அதன் மாண்பையும் போற்றி நல்வாழ்வு வாழ்வோம்.  “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி 
    இருந்ததும் இந்நாடே -- அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
    முடிந்ததும் இந்நாடே -- அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து 
    சிறந்தது மிந்நாடே -- இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன் 
    வாயுற வாழ்த்தேனோ -- இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம் 
    என்று வணங்கேனோ? 

என்ற நற்சிந்தனையுடன் கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை மனமாறப் பகிர்ந்துகொள்கிறோம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close