பூஜைக்கே வெற்றி தரும் வெறும் இலை…

  கோமதி   | Last Modified : 27 Dec, 2018 02:55 pm

just-a-leaf-that-succeeds-pujas

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி.

ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஸ்நாமி ப்ரயதாத்ம :

என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் சொல்லியிருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்றால் என்னை வணங்கும் பக்தனானவன்  மலர்களாலும், பழங்களாலும், நீராலும், இலையாலும் பூஜை செய்தால் அவன் அளிக்கும் இந்தப் பொருள்களை நான் அன்புடன் பெற்றுக்கொள்கிறேன். அவனுக்கு வேண்டிய அருளையும் தருவேன் என்று கூறியிருக்கிறார். இதை அடிப்படையாக வைத்துத் தான் நாம் எந்தக் கடவுளுக்கு பூஜை செய்தாலும் பூஜையில் வெற்றிலை, பாக்கு, பழங்களைக் கட்டாயம் வைக்கிறோம். பரமாத்மா இலை தானே கேட்கிறார். ஆனால் ஏன் வெற்றிலை மட்டும் வைக்கிறோம் என்பதற்கு காரணமும் உண்டு.

வெற்று+ இலை இரண்டும் இணைந்துதான் வெற்றிலை என்னும் பெயர் உண்டாகிற்று. எந்தச் செடியாக இருந்தாலும் அவற்றில் பூக்கள், காய்கள், பழங்கள் என்று ஏதேனும் ஒன்று இருக்கும். ஆனால் வெற்றிலை கொடியாக படர்ந்து வெற்றிலையை மட்டுமே கொண்டிருக்கிறது. அதனால்தான் வேறு எந்த இலைக்கும் இல்லாத சிறப்பாக வெற்றிலை மட்டும் பூஜையில் தனித்துவம் பெற்றிருக்கிறது. அமர கோசம் நூலின் கருத்தின் படி... வெற்றிலைக் கொடி நாகலோகத்தில் உருவானதாக கூறப்படுகிறது.மேலும் வெற்றிலையின் நுனியில் லட்சுமிதேவியும், நடுவில் சரஸ்வதி தேவியும், காம்பில் பார்வதி தேவியும் இருப்பதாக ஐதிகம். அதனால் தான் எந்த வித பூஜைசெய்து, எண்ணற்ற பொருள்களை வைத்து படைத்தாலும்  வெற்றிலை இல்லையென்றால் நாம் படைக்கும் நிவேதனமும் முற்றுப்பெறுவதில்லை.
நம்மாழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உண்ணும் சோறும், அருந்தும் நீரும், வெற்றிலையும் எல்லாமே பரம்பொருளான எம்பெருமானே என்று கண்களில் நீர்மல்க மனம் உருகி பாடியிருக்கிறார். கூத்தனூர் தேவி சரஸ்வதி தனது தாம்பூலச்சாற்றை கொடுத்து ஒட்டக்கூத்தரை கவி வித்தகர் ஆக்கினார் என்று வரலாறு கூறுகிறது.

எல்லா காலங்களிலும் கிடைக்கும் என்பதால் வாழைப்பழம் பூஜையில் பயன்படுத்தப்படுகிறது. பழங்கள் அனைத்தும் இறைவனுக்கு நிவேதனம் செய்யலாம். எந்தப்பழமும் இல்லையென்றாலும் பாக்குப்பழம் வைக்கலாம்.  ஏனெனின் பாக்கு என்பது ஒருவகை பழத்தைச் சார்ந்தது. இதை பூகி பலம் என்று வடமொழியில் அழைக்கிறார்கள்.பொதுவாக பழங்கள் நீண்ட நாட்கள் நன்றாக இருக்காது. விரைவில் அழுகும் தன்மை கொண்டவை. ஆனால் பாக்குப்பழம் அப்படியல்ல.நீண்ட மாதங்கள் ஆனாலும் அழுகாமல் இருக்கும். அதனால்தான் வெற்றிலையுடன் எப்போதும் பாக்கும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. இவை இரண்டும் மகாலஷ்மியின் அம்சங்களாக சொல்லப்படுகிறது. திருமணத்துக்கு முன்னதான நிச்சயதாம்பூலம் என்று அழைப்பது கூட மகாலஷ்மியின் அம்சமான தாம்பூலம் வைத்து அவள் அருளால் அவள் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பது போல்தான். திருமணம் போன்ற சுப விசேஷங்களுக்கு அழைக்கும் போது வெற்றிலைப் பாக்குடன் பணம் வைத்து அழைக்கிறார்கள். அதே போன்று நிகழ்ச்சிகளின் போதும் வெற்றிலைப்பாக்கு இணைந்த தாம்பூலம் அளித்து வழியனுப்புகிறார்கள்.

தேவியின் நிறம் பச்சை, அதனால் தான் வெற்றிலை லஷ்மியின் அம்சம். வெண்மை சிவனின் நிறம். இவை இரண்டும் இணைந்து மாறும் சிவப்பு சக்தியின் வடிவம்.  அதனால் தான் தாம்பூலம் சிறப்படைகிறது. விஞ்ஞான  ரீதியாக தாம்புலம் போடுவதால் நமது உடலில் ஜீரணசக்தியை அதிகரிக்க செய்யும். மேலும் சுண்ணாம்பு கலந்த வெற்றிலை நமக்கு தேவையான கால்சியம் சத்தையும் அளிக்கிறது.
காய், பழம் என எதுவுமே இல்லாத வெறும் இலைதான். ஆனால் வெறுமனே இல்லாமல் இவை இல்லாதது பூஜையல்ல என்ற உயர்ந்த இடத்தைப் பிடித் திருக்கிறது. பூஜை செய்தால் வெற்றி தரும் என்றால்…பூஜை செய்த பலனை பூர்த்தியடைய செய்து பூஜைக்கு வெற்றிதருவது வெற்றிலை தான்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.