ஆன்மீக கதை - எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

  கோமதி   | Last Modified : 27 Dec, 2018 03:14 pm
spiritual-story-everyone-should-get-everything

பிருந்தாவனம் என்னும் ஊரில் ஓர் ஞானி இருந்தார். மக்களுக்கு அவர் மேல் மிகுந்த பக்தி. உன் கடமையை நீ செய். பலனை அனுபவிப்பாய் என்று மக்களுக்கு அவ்வப்போது உபதேசம் அளிப்பார். அவரை வணங்கினாலும் கடவுளைத் தவிர வேறு யாரையும் வணங்காதே. அவனே பெரியவன் என்று புத்திமதி சொல்வார். சில நேரங்களில் அவர் பேச்சு மேதாவியைப் போல் தோன்றும். சில நேரம் பித்தனைப் போல் பிதற்றுகிறாரோ என்று தோன்றும். தினமும் ஒரு வீட்டிற்கு சென்று அவர்கள் அளிக்கும் உணவை உண்டு வாழ்ந்துவந்தார். 

ஒருமுறை பக்கத்து ஊரில் திருவிழா நடைபெற்றது. பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் விழா என்பதால் ஊர்மக்கள் அனைவரும் அங்கு சென்றிருந்தனர். ஞானிக்கு பசியாற வேண்டியிருந்தது. அந்த ஊரின் ஆற்றங்கரையோரத்தில் ஒரு பெண்மணி இருந்தாள். அவள் தேவதாசி இனத்தைச் சேர்ந்தவள் என்பதால் ஊரிலிருந்து ஒதுக்கி வைப்பட்டிருந்தாள். ஞானி ஊர்மக்கள் யாரும் இல்லாத நிலையில் அவளைத் தேடி வந்தார்.  உதவி என்று நாடிவரும் யாருக்கும் இல்லை என்று சொல்லாத அந்தப் பெண்மணியைப் பற்றி அவரும் அறிந்திருந்தார். அவளிடம் பிள்ளைகளுக்கு கல்வி கற்க, தொழில் செய்ய, மருத்துவம் பார்க்க என்று எத்தனையோ பேர் உதவி பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் அவளை ஊருக்குள் விடுவதற்கு யாருக்கும் மனமில்லாமல் போயிற்று. 

வீட்டுக்கு வந்த ஞானியை வரவேற்று உணவளித்தாள். ஞானியும்  அவளுக்கு நன்றி சொல்லியபடி உணவை உண்டு வழக்கம் போல் நீ நீயாகவே இரு. உன் எண்ணங்களுக்கேற்பவே உன் ஆன்மாவும்  உயர்வுபெறட்டும் என்று அவளை வாழ்த்தி சென்றார். அவளுக்குப் புரியவில்லை. எல்லோரும் சொல்வது போல் கடமையை செய் என்று சொல்வதை விட்டு வேறு ஏதோ சொல்கிறாரே என்று நினைத்தாள். அடுத்த நாள் ஊர்மக்கள் திரும்பினர். அப்போதுதான் அவர்களுக்கு ஞானியின் நினைவே வந்தது.எல்லோரும் பதறியபடி எங்களை மன்னித்துவிடுங்கள் சாமி.. நாங்கள் உங்களைப் பற்றி நினைக்கவேயில்லை. எப்படி உணவருந்தினீர்கள் என்று கேட்டனர். ஞானியும் தான் ஆற்றங்கரை ஓரம் இருந்த வீட்டில் உணவருந்தியதாக சொன்னார். மக்கள் அனைவருக்கும் கோபம் உண்டாயிற்று. ஆனால் எதிர்த்து கேட்டால் அவர் சபித்து விட்டால் என்று மெளனமானார்கள். கூட்டத்திலிருந்த கோயில் பூசாரி மட்டும் கொக்கரித்தார். நீங்கள் என்ன ஞானி? கடவுளின் அவதாரமாக உங்களை நினைத்தோமே... இப்படி பாவியாகிவிட்டீர்களே... நாங்களே மன்னிக்காத போது கடவுள் உங்களை எப்படி மன்னிப்பார்? இனி ஊருக்குள்ளிருந்து உங்களையும் தள்ளி வைக்கிறோம். இதுதான் மக்கள் சார்பில் நான் சொல்வது? நீங்கள் பதில் கண்டிப்பாக பதில் சொல்லியே தீரவேண்டும் என்று மக்கள் புறம் திரும்பினார். மக்களும் அதை ஆமோதித்தனர்.

ஞானி மெளனமாக இருந்தார். பிறகு பூசாரியைப் பார்த்து உன் மனைவிக்கு எப்படி பிரசவம் நடந்தது என்பதை மறந்துவிட்டாயா? என்றார்.பூசாரிக்கு கிலி ஆயிற்று. தன் மனைவிக்கு பிரசவம் நடக்கும்போது மழைக்காலம் ஆதலால் ஆற்றைக் கடக்க முடியாமல் அவதிப்பட்ட போது ஆற்றங்கரை வீட்டில் இருந்த பெண்மணிதான் பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் மீட்டாள். அது.. அது.. என்று தயங்கிய பூசாரியை மறித்த ஞானி பரவாயில்லை விட்டுவிடு... இதுபோல் பலருக்கும் பலதும் நன்மையாகவே நடந்திருக்கிறது. இனியும் நன்மையாகவே நடக்கட்டும். உங்களுக்கான பதிலை நிச்சயம் சொல்வேன். இனியும் நான் இங்கிருப்பது சரியல்ல என்று விடைபெற்று ஊரை விட்டு வெளியேறினார். காலங்கள் உருண்டோடின.  மாண்டவர்கள் மேலோகத்தில் சந்தித்தனர். என்ன அதிசயம் தேவதாசி பெண்மணி சொர்க்கலோகம் செல்ல தயாராக இருந்தாள்.ஞானி அவளுக்கு வழி காட்டிக்கொண்டிருந்தார். பூசாரி நரகத்துக்குச் செல்ல வேண்டும் என்ற தண்டனையைக் கேட்டு அதிர்ந்த பூசாரி இது அநியாயம் என்றார். அப்போது   சத்தம் கேட்டு திரும்பிய ஞானி... இப்போது பதில் சொல்கிறேன் கேளும் என்றார்.

நீ தினமும் இறைவனுக்கு பூஜை செய்ததாலேயே இறைவனின் அருளைப் பெறும் தூய்மையைப் பெற மாட்டாய். பூஜை செய்தது கடவுளை வேண்டி அல்ல.. அது உன் பணியாக இருந்தது. உதவி என்று கேட்பவர்களுக்கு நீ என்ன செய்திருக்கிறாய்? அவள் தேவதாசி பெண்ணாக பிறந்தாலும் உதவி என்று வரும் போது அதைச் செய்ய இறைவன் அனுமதித்திருக்கிறானே என்று ஒவ்வொரு நொடியிலும் இறைவனுக்கு நன்றியுரைத்தாள்.   கோயிலுக்குள் வருபவர்களுக்கே நீங்கள் வேறுபாடு பார்த்தீர்கள். ஆனால் ஊரே ஒதுக்கி வைத்தாலும் எல்லோருக்கும் உதவுவதற்கே இறைவன் இப்பிறப்பை அளித்திருக்கிறான் என்று அப்பெண் நினைத்தாள். எனக்கு அவள் உணவு அளித்தபோது அவளது தொழில் முறை தெரியவில்லை. மாறாக இறைவனின் படைப்பில் இவளும் ஒரு பெண்.... தாயாகத்தான் தெரிந்தாள். இப்போது உங்கள் கேள்விக்கான விடை புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் என்றார். மக்கள் தலைகுனிந்தனர். 

இறைவனின் படைப்பில் எல்லோருமே ஒன்றுதான். இறைவனது அருள் அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைக்கும் போது நாம் மட்டும் ஏன் பிரிவினை பார்க்க வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற எல்லாம் வல்ல இறைவன் இருக்கும் போது நம் எண்ணங்களும் நல்லனவாய் அமைந்தால் போதும். அருள் கிட்டும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close