ஆன்மீக கதை – இதயத்தில் இறைவனை நிறுத்துங்கள்

  கோமதி   | Last Modified : 29 Dec, 2018 01:07 pm
spiritual-story-place-the-god-in-the-heart

மன்னைநல்லூர் என்னும் அழகிய கிராமம் மலையடிவாரத்தில் இருந்தது. இயற்கையையும் வளத்தையும் இறைவன் அள்ளிக்கொடுத்திருந்தார் . அங்கு வசித்த மக்கள் தாங்கள் எல்லோரும் தேவலோகத்தில் வசிப்பது போன்ற கர்வத்துடன் வாழ்ந்தனர். கடவுளை மறந்தும் திரும்பி பார்க்காமலேயே வாழ்ந்தார்கள். பக்கத்து கிராமங்கள், வெளி கிராமங்கள் என எந்த தொடர்பும் இன்றி தனிக்காட்டு ராஜாவாய் அந்த கிராமம் அனைத்து வசதிகளையும் பெற்று இருந்தது. ஏதேனும் தேவை என்றாலும் வெளியிடங்களுக்குச் சென்று அதை வாங்குவதற்கு அவ்வூர் மக்களில் சிலர் இருந்தார்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் வெளியாட்களை அவர்கள் கிராமத்துக்கு வரவிடமாட்டார்கள். 

ஒருமுறை மன்னைநல்லூர் கிராமத்தின் எழிலைக் கண்ட ஞானி ஒருவர் இறைவனை நினைத்து தியானம் புரிய ஏற்ற இடமாக உள்ளதே என்று அங்குவந்தார். அவரது வருகை அவர்களுக்கு தொல்லையாக போயிற்று. யாசகம் எதுவும் கேட்காமல் பழங்களையும் காய்கறிகளையும் உண்டு வந்த அவரை என்ன சொல்லி விரட்டுவது என்று தெரியாமல் இருந்தார்கள். அவரை விரட்டுகிறேன் என்று ஒரு கூட்டமே அவரை சுற்றி இருந்தது. சில நேரங்களில் வாயால் அருவருக்கதக்க சொற்களைப் பேசினார்கள். சில நேரங்களில் கையில் கிடைத்ததை எடுத்து அவர் மேல் வீசினார்கள். இன்னும் சில நேரங்களில் அவர் தியானம் செய்யாமல் இருக்கும் வகையில் அதிக சத்தங்களை எழுப்பினார்கள். ஞானியார் வேறு ஏதோ உலகத்தில் இருப்பது போல் நடப்பதை கவனியாமல் மெளனமாக இருந்தார். இவரது மெளனம் அவர்களுக்கு இன்னும் ஆத்திரத்தைத் தூண்டியது. அத்துமீறிய அவர்களது ஆட்டத்தைக் கண்டும் காணாமலும் சிலைபோல் இருந்தார் ஞானியார்.

அவர்களது ஆட்டத்தை ஞானியார் பொறுத்துக்கொண்டார். ஆனால் காக்கும் கடவுளுக்கு கோபம் வந்துவிட்டது போலும். அந்த வருடம் வழக்கத்தை விட இயற்கை சீற்றம் அதிகம் இருந்தது. வருணபகவான் ஊரை புரட்டி எடுக்க புறப்பட்டார். மக்கள் தங்கள் உடைமைகளையும் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள கடும் பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது. ஆனாலும் வேறு இடங்களுக்கு செல்லவோ உதவிக்கு யாரையும் அழைக்கவோ விரும்பவில்லை. கரை புரண்ட வெள்ளம் ஊரை நோக்கி மக்களை அச்சுறுத்தியது. எல்லோரும்  ஞானி இருந்த காட்டுப் பகுதிக்குள் வந்தனர். புயல் வருவது போன்ற அறிகுறிகள் அவர்களை மேலும் வாட்டியது. எல்லோரும் குளிர்ல் நடுங்கி அடுத்து வரும் புயலை எதிர்கொள்ள தயாராகினார்கள். அப்போதும் இறைவனை   நினையாமல் இருந்தார்கள்.

எல்லோருக்கும் கேட்கும் வகையில் ஒரு அசரீரி அப்போது ஒலித்தது. உங்கள் பக்தியில் மெச்சினோம் ஞானியாரே.. நீங்கள் அனுமதி அளித்தால், உங்களை உதாசினப்படுத்திய இந்த மக்களை ஒரே நிமிடத்தில் காணாமல் போகச் செய்கிறோம் என்ன சொல்கிறீர்கள் என்ற குரல் கேட்டது. அவ்வளவுதான்... மக்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். இனி நாம் பிழைக்க மாட்டோம். நாம் என்ற கர்வத்துடன் படைத்தவனையும் நினையாமல் எல்லோரையும் உதாசினம் செய்ததற்கு நமக்கு இது தேவைதான் என்று கண்களை இறுக்க மூடியபடி நின்றனர். அசரீரியின் குரல் மீண்டும் ஞானியிடம் அனுமதி கேட்டது. ஞானியின் மெளனம் கலையாமல் இருக்கவே அசரீரி குரல் மறைந்தது.
சிறிது நேரம் கழித்து ஞானி வானத்தை நோக்கி பேச ஆரம்பித்தார். இறைவான் ஏன் துஷ்ட சக்திகளை என்னிடம் பேச அனுமதித்தாய். இவர்களுடைய அச்சத்தைப் போக்கி பாதுகாவலனாக நான் இருக்கிறேன் என்று உன்னை நினைவுப்படுத்தி நம்பிக்கை அளிக்க வேண்டாமா. நான் உன்னுடைய உதவியை அல்லவா எதிர்பார்த்தேன் என்றார். வந்தது துஷ்ட சக்தி என்பதை எப்படிக் கண்டறிந்தாய் என்று கடவுளின் அசரீரி பதிலாக ஒலித்தது. இதில் என்ன சந்தேகம் பல்லாயிரம் கோடி ஜீவராசிகளின் அன்னை நீ. நல்லதை மட்டுமே கொடுக்கக் கூடிய உன்னிடம் நன்மை பயக்கும் குரலைத் தானே கேட்க முடியும் என்றார். 

இறைவனை நினையாமல் செய்த தவறை எண்ணி வருந்திய மக்கள் ஞானியிடம் மன்னிப்பு கேட்டு ஊரில் ஆலயம் எழுப்பி அக்கம், பக்கம் கிராமங்களிலும் பக்தியைப் பரப்பி வந்தார்கள். இயற்கை எழிலோடு இறைவனின் வசிப்பிடமாகவும் அந்தக் கிராமம் உருவாயிற்று.. 
நான் தான் செய்தேன். என்னால் தான் ஆனது. எனக்கு மட்டுமே உரிமை. நான் இல்லையெனில் இதை யாராலும் செய்ய முடியாது என்று சொல்வதை விட வாழ்வில் நடக்கும் அனைத்தும் இறைவனின் அருளால் உண்டானவையே. நல்லதை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும், சோதனை காலங்களை தாங்கும் பொறுமையும் இருந்தால் இறைவன் நம் இதயத்தில் குடிகொள்வான். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close