ஹனுமன் ஜெயந்தி - தாஸ்ய பக்திக்கு இலக்கணம் வகுத்தவர்

  கோமதி   | Last Modified : 03 Jan, 2019 08:59 pm
hanuman-jayanthi-he-who-sets-an-example-to-dasya-devotion

பிடித்த கடவுளை மனதில் ஓயாமல் நினைத்துக்கொண்டே வழிபடுவது ஒருவித பக்தி என்றால்... கடவுளை இமைதட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பது பக்தியிலும் பக்தி. இறைவன் எங்கிருந்தோ  நம்மை வழிநடத்துகிறார் ,அவரை நான் எப்போதும் நினைவு கூறுவேன் என்ற பக்தி ஒருபுறம்.. உலகில் இருக்கும் எல்லா ஜீவராசிகளிடமும் இறைவன் இரண்டற கலந்திருக்கிறார் என்று அனைவரிடமும் அன்பு காட்டுவது மற்றொரு பக்தி. ஆனால் இறைவன் வேறெங்கும் இல்லை. என்னுள் தான் இருக்கிறார். என்னுடன் இருந்து என்னை வழிநடத்துகிறார். அதனால் நான் எப்போதும் என் உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருந்து அவரிடம் சரணடைந்து அவருடன் இணைந்து சேவை செய்வது பக்தியிலும் சிறந்த பக்தி. தாஸ்ய பக்தி. இதற்கு பொருத்தமானவர் அனுமன் தான். அனுமன் மட்டுமே தான். 

ருத்ரனின் அம்சமான, சிவாம்சம் பொருந்திய அனுமன் தானும் விஷ்ணுவின்  இராம அவதாரத்தில் அவருடன் இருக்க வேண்டும் என்று விரும்பி வானர முகம் கொண்டு அவதாரமெடுத்தார். இராமயண காவியத்தில் இராமனுக்கு அடுத்து அனுமன் தான் எல்லோர் மனதிலும் வியாபித்திருக்கிறார். அவர்களுக்குள் அத்தகைய பக்தி இருந்தது. ஸ்ரீ ராமன் வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பிய போது அனுமனும் இராமனுடன் சென்றார். ஸ்ரீ ராமனுக்கு சேவை செய்ய யாரையும் அண்டவிடாமல் அனுமனே காலை முதல் இரவு வரை ஸ்ரீ ராமனுக்கு தேவையான அனைத்து பணிவிடைகளையும் செய்து வந்தார். என்னதான் ஸ்ரீ ராமனின் மனைவியாக இருந்தாலும், மனம் கவர்ந்த நாயகனை உடனிருந்து கவனித்தப்படி தன்னால் சேவை செய்ய முடியவில்லை என்று சீதாபிராட்டியும், ஸ்ரீ ராமனின் சகோதரர்களும் நாங்கள் எப்போது என்னுடைய அண்ணனுக்கு சேவை செய்வது என்ற எண்ணம் உண்டாயிற்று. அனைவரும் ஒன்று சேர்ந்து அனுமனுக்கு தெரியாமல் ஸ்ரீ ராமனிடம் சென்றனர்.

சுவாமி உங்களுக்கான சேவையை அனுமன் மட்டுமே எப்போதும் செய்கிறார். எங்களுக்கும் அந்த பாக்யத்தை ஒருநாளாவது கொடுங்கள். உங்களுக்கான வேலைகளை நாங்கள் அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம் என்று ஸ்ரீராமனை மேற்கொண்டு பேசவிடாமல் தாங்கள் பகிர்ந்து கொண்ட பணிகளை அவரிடம் காட்டினர். சரி உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என்று ஸ்ரீராமன் பட்டியலைப் பார்த்தார். அவர் கண்கள் எதையோ ஆர்வத்துடன் தேடின. வேறு என்ன அனுமனுக்கு உரிய பணியைத் தான். ஆனால் அனுமனுக்குத் தான் ஒரு பணியும் இல்லையே...அனுமன் என்ன செய்வான் என்றார் ஸ்ரீ ராமர். இல்லை அனுமனுக்கு அன்றைய தினம் ஓய்வு தான்.நாங்களே செய்கிறோமே என்றனர் சீதாதேவியும்... ஸ்ரீ ராமரின் சகோதரர்களும்... அப்படியானால் சரி.. ஆனால் இதில் ஏதாவது ஒரு சேவை விடுபட்டிருந்தால் அனுமன் செய்யட்டும் என்று சம்மதம் தெரிவித்தார். சீதாதேவிக்கும், ஸ்ரீ ராமரின் உடன்பிறப்புகளுக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை. அடுத்த நாள் ஸ்ரீ ராமர் காலையில் கண்விழித்தது முதல் ஒவ்வொருவரும்  தங்கள் பணிகளை மகிழ்ச்சியோடு செய்தனர். அனுமனும் ஸ்ரீ ராமனுக்குரிய சேவைகள் உரியபடி நடக்கிறதா என்று கண்காணித்தப்படி ராமா.. ராமா.. என்று ஜபித்துக் கொண்டே ஸ்ரீ ராமனைக் கண்டவாறு அமர்ந்திருந்தார்.

இரவு நேரம் ஸ்ரீ ராமனுக்கு தாம்புலம் மடித்து கொடுத்தார் சீதா தேவி. ஸ்ரீ ராமனின் திறந்த வாய் மூடவே இல்லை. சீதாதேவி பயந்து ஸ்ரீ ராமனின் சகோதரர்களை உதவிக்கு அழைத்தார். யார் வந்து பார்த்தும் ஸ்ரீராமனின் திறந்த வாய் மூடவேயில்லை. அனுமனிடம் உதவி கேளாமல் வசிஷ்டரை அழைத்தனர் அவரும் ஸ்ரீ ராமனின் திறந்த வாயைக் கண்டு காதில் மந்திரம் ஓதினார். ஆனாலும் ஸ்ரீ ராமனின் திறந்த வாய் மூடவில்லை. இதுவரை ஸ்ரீ ராமனுக்கு சேவை செய்துவந்த அனுமனால் மட்டுமே இதற்கான காரணத்தைக் கண்டறிய முடியும். ஸ்ரீ ராமனின் கண் அசைவை அவரது இமையைக் காட்டிலும் முதலில் உணர்ந்தவர் அனுமனே. அனுமனின்றி ஓர் அசைவும் ஸ்ரீ ராமனிடம் இருக்காது. ராம நாமம் ஜெபிக்காமல் ஸ்ரீ ராமனுக்கு சேவகம் செய்யாமல் அனுமனுக்கும் சுவாசம் இருக்காது என்றார். சரி இப்போதாவது அனுமனை கூப்பிடுவோம் என்று அனுமனை அழைத்தார்கள். ராமா...ராமா. என்ன வேடிக்கை இது.... என்று துள்ளி குதித்தபடி ஸ்ரீ ராமனின் வாயருகில் சொடக்கு போட்டதும் ஸ்ரீ ராமனின் வாய் மூடிக்கொண்டது. எல்லோரும் திகைத்து போனார்கள்.

சொடக்கு போடக் கூட நான் தான் வரவேண்டுமா.. நீங்கள் செய்துகொள்ள மாட்டீர்களா என்று செல்ல கோபத்துடன் பக்தியில் திளைத்த அனுமன் ஸ்ரீ ராமனைப் பார்க்க.... என் கண் அசைவு கூட உன்னை கேட்டு அசையும் படி நீதானே சேவகம் செய்கிறாய் என்று நினைத்தப்படி ஸ்ரீ ராமன் அனுமனை பார்க்க.... அவர்களது பக்தி அருகிலிருப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close