பொங்கல் ஸ்பெஷல் - தை மகளை வரவேற்போம்

  கோமதி   | Last Modified : 13 Jan, 2019 11:39 am

pongal-special-let-us-welcome-thai-magal

ஆடி மாதம் தேடி விதைத்த பயிர்கள், செழிப்பாக வளர்ந்து தை மாதத்தில் அறுவடை செய்யப்படும். அறுவடை நெல்லில் இருந்து படிநெல்லை எடுத்து உரலில் குத்தி உமி நீக்கி எடுக்கப்படும் அரிசியை, வாசலில் கல் அடுப்பு கட்டி, புத்தம் புது மண்பானையில் ,இஞ்சி கொத்தும் மஞ்சள் கொத்தும் அலங்கரிக்க,  பசும்பாலைச் சேர்த்து புது அரிசி இட்டு... கண்கள் மின்ன மின்ன, பொங்கல் பானை பொங்க பொங்க.. பொங்கலோ பொங்கல் .. என்று குடும்பத்துடன் மகிழ்ச்சியில் மனம் பொங்க பொங்க, இயற்கை கடவுளை வழிபடும் நந்நாளை வரவேற்கும் சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

தை பொங்கலும் வந்தது ,பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ.... உலகெங்கும் பரந்து விரிந்திருக்கும் தமிழர்கள் ஒருமித்தமாக கொண்டாடும் விழா பொங்கல் விழா... பகலவனுக்காக கொண்டாடும் இத்தைத்திருநாளில் மகிழ்ச்சி பொங்க பாடுகிறோம். ஆம் உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், உயிரினங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா, பெருமை மிக்க பாரம்பரிய  பொங்கல் விழா! சங்க காலத்தில் பெண்கள் கடைப்பிடித்த பாவை நோன்பு தான் பொங்கல் பண்டிகையின் தொடக்கமாக இருந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். மாணிக்கவாசகரின் திருவெம்பாவையிலும் ஆண்டாளின் திருப்பாவையிலும் தை நீராடலையும் , பாவை நோன்பையும் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்கு நாள் வெகு விமரிசையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். மார்கழி மாதம் முடிந்து, தை மாதம் முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிந்து புதியன புகும் நாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.  

இரண்டாவது நாள் சூரியப் பொங்கல் வைக்கப்படுவது வழக்கம். அன்றைய தினம் சூரியனுக்கு நன்றி செலுத்துவோம். பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட வேண்டும் என்று அன்றைய தினம் வழிபடுவார்கள். தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப தைத்திருநாளில் இதுவரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு கொண்டாடப்படுகிறது.

மூன்றாவது நாள் மாட்டுப்பொங்கல். பெயருக்கேற்ப கால்நடைகளுக்காக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வைக்கப்படும் பொங்கல்  உழவுத்தொழிலுக்கு உறுதுணயாக இருந்து வரும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக படைக்கப்பட்டு அவைகளுக்கு வழங்கப்படும்.

நான்காவது நாள் காணும் பொங்கல். இது கன்னிப்பொங்கல் அல்லது கணுப்பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. பெரியோர்களின் ஆசியைப் பெறுவதற்காகவும்,குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும் விதத்திலும் உற்றார் உறவினர்களைக் காணும் நிகழ்வை முக்கியமாக கடைப்பிடிக்கும் தினம் இன்று.  கிராமங்களில் சாகச விளையாட்டுகளை ஊர் கூடி நடத்தும் சுவாரசியமான தினம் இன்று என்றும் சொல்லலாம். வடமாநிலங்களில் சகோதரனுக்காக பெண்கள் இத்தினத்தில் வழிபடுவார்கள்.

பொங்கல் பாரம்பரியமான பண்டிகை என்பது எவ்வளவு உண்மையோ.. அவ்வளவு உண்மை பழமை மாறாமல் இயற்கையை வணங்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதும்..தை மகளை வரவேற்க தயாராவோம். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.