தர்மம் என்பது வேறு தானம் என்பது வேறு

  கோமதி   | Last Modified : 08 Jan, 2019 09:30 pm

charity-is-different-from-donation

பத்தாயிரம் சம்பாதிச்சோம். பத்து ரூபாவாது தர்மம் பண்ணாதான் நமக்கு நல்லது என்று வரவுக்கேற்றபடி தர்மம் செய்பவர்கள் இப்பூவலகத்தில் நிறைய இருக்கிறார்கள். பெரியவர்கள் கூட தான  தர்மம் செய்யுங்கள்.. தர்மம் தலைகாக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்றும் சொல்கிறார்கள்.  தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது... 

அஹிம்ஸா சத்யம் அஸ்தேயம் செளசம்

இந்திரிய நிக்ரஹ ஏதம் சாமாதிகம் தர்மம்

சாதுர்வர்ணே பிரதிர் மனு: என்று சொல்லியிருக்கிறது.  

ஆனால் தர்மம் என்பது வேறு தானம் என்பது வேறு... வேதபுராண இதிகாசங்களின்  படி..  அஹிம்ஸை, சத்யம், அஸ்தேயம், செளசம், இந்திரிய நிக்ரஹம் போன்ற தர்மமும் தானமும் இணைந்து செய்தால் ஆன்மிக என்னும் பாதை நம் கண்ணுக்கு புலனாகும் என்பதில்  ஐயமில்லை. சரி முதலில் இவை ஐந்தும் என்ன என்பதைப் பார்க்கலாம். மனிதன் என்பவன் உலகில் உள்ள சக ஜீவராசிகள் சிறியதாயினினும் அவற்றைத் துன்புறுத்துதல் கூடாது. உணவுக்காகவும், அழகுக்கான மூலப்பொருள்களுக்காகவும் கொல்ல கூடாது. உயிரினங்களின் உயிரை திரும்ப பெறும் உரிமை படைத்தவனுக்கே உரியது. கூடவே உயிர்களை எடுப்பது மட்டுமல்லாமல் சக ஜீவிகள் வருந்தும் அளவுக்கு அவர்களை வருத்தத்துக்கு உள்ளாக்காமல் இருப்பதும் கூட அஹிம்சைதான். நாம் மன வருத்தத்தில் இருக்கும் போது சினத்தில் செய்யும் செயல்கள் பிறருக்கு மனவருத்தத்தைக் கொடுக்கும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே மனம் அமைதியிழந்து இருக்கும்போது முக்கியமான விவாதங்களைத் தவிர்த்து அமைதியாக இருந்தால் முதல் தர்மத்தைக் கடைப்பிடித்த  நிம்மதியை அடையலாம். 

அடுத்ததாக  தர்மத்தில் சொல்லப்பட்டிருப்பது சத்யம் பற்றி... சத்தியமா சொல்றேன் என்று சத்தியத்துக்கு சத்தியம் வைக்கும் வழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு. நாம் சொல்லும் பொய் பிறருக்கு அளவு கடந்த துன்பத்தையும் வருத்தத்தையும் தரும் என்றால் நீ செய்யும் தானம் எப்படி உன்னைக் காப்பாற்றும். நியாயங்களையும், உண்மையையும் நேர்மையாக மற்றவரது முகத்துக்கு எதிரில் பேசுவது இரண்டாவது தர்மமான சத்யத்தைக் கடைப்பிடிப்பதற்கு சமம்.. ஆனால் புறங்கூறும் பழக்கம் நமக்கு இருந்தால் இத்தகைய தர்மத்தை மீறிய காரணத்தால் நமக்கு பாவங்களே வந்து சேரும் என்கிறது.

மூன்றாவது தர்மம் என்பது ஆசையைத் துறத்தல் என்றும் சொல்லலாம்.  அஸ்தேயம் என்று அழைக்கப்படும் இத்தர்மத்தைக் கடைப்பிடிக்க ஆசையை அடக்கி ஆளும் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்மிடம் இல்லாத பொருள்களைப் பிறரிடம் களவு பெற்று சொந்தமாக்க செய்யும் குணத்தைக் கைவிடவேண்டும். கடவுளின் அருள் நமக்கு உண்டானவற்றைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையும்,கடவுளின் மீதான பொறுமையும் இருந்தாலே நம்மால் முதல், இரண்டு, இந்த மூன்றாவது தர்மத்தைய கடைப்பிடித்த மகிழ்ச்சியைப் பெறலாம். 

அடுத்ததாக தூய்மையை, தூய்மையாக கடைப்பிடிப்பது என்று சொல்லலாம். நான்காவதாக சொல்லப்படும் செளசம் என்னும் தர்மம் பவித்ரம் அதாவது பரிசுத்தம் என்ற பொருள்படுகிறது. இறைவனை அடைய உடல் சுத்தமும் அதனினும் மேலான மனச்சுத்தமும் மிகவும் முக்கியம். மனச் சுத்தம் கொண்ட ஒருவனால் தான் அனைவரையும் இறைவனாக பாவித்து அன்பு செலுத்த முடியும். இறைவனை மனதிலும் நிறுத்தி வைக்க முடியும். மனதில் அழுக்கு சேராமல் இருந்தால் நான்காவது தர்மத்தையும் கடைப்பிடிக்கும் அருளைப் பெறலாம்.

இறுதியாக சொல்லப்படும் தர்மமானது ஐம்புலன்களையும் அடக்கி ஆளக்கூடிய தர்மத்தைப் பறைசாற்றுகிறது. இந்திரிய நிக்ரஹம் என்று அழைக்கப்படும் இந்த தர்மமானது மனிதனாக்கப்பட்டவன் தனது ஐம்புலன்களையும் அடக்கி  கட்டுக்குள் வைத்திருக்கும் சூத்திரத்தை தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்கிறது. நல்லனவற்றைக் கண்களால் கண்டு... நல்லதைப் பேசி,நல்லதை கேட்டு... செய்வதை நல்லதாக செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.  ஆக ஐவகை தர்மம் என்பது மனிதனை ஆகச் சிறந்த மனிதனாக வாழ வழிசொல்கிறது. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய தர்மம் இவை என்று வலியுறுத்துகிறது. இப்பிறவியின் பயனை முழுமையாக அனுபவித்து மறுபிறவி வேண்டாம் என்று மனமுருக இறைவனை வழிபடும் அனைவரும் இத்தகைய தர்மத்தைக் கடைப்பிடித்தாலே எண்ணியதை அடையலாம்.

ஆக பாவங்கள் செய்து பாவ மன்னிப்பு கேட்டு,தானம் செய்து பாவம் கழிக்கலாம் என்று பரிகாரம் தேடுவதை விட தானம் என்பது வேறு தர்மம் என்பது வேறு என்பதை உணருங்கள். இயன்றவரை தானம் அளித்து தரும வழியில் சென்றால் ஆன்மிகம் என்னும் பாதை எட்டுமளவில் தான்.. தானம் செய்வோம்.. தரும வழியில் பயணிப்போம். ஏனெனில் தானம் என்பது வேறு தர்மம் என்பது வேறு...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.