பிறப்பில்லா முக்தி நிலையை தரும் திரிவேணி சங்கமம் – கும்பமேளா மஹோத்சவ புராண வரலாறு

  கோமதி   | Last Modified : 14 Jan, 2019 05:52 pm

triveni-sangamam-place-which-gives-us-immortal-life-the-legendary-history-of-kumbh-mela

அனைத்து நீர்நிலைகளும் புண்ணியமானவைதான்.புண்ணியத்திலும் புண்ணியம் பெற்றவை திரிவேணி சங்கமமாய் இணைந்துள்ள கங்கை,யமுனை, சாஸ்வதி இணையும் இடமான அலகாபாத்.இங்கு நீராடுவது மிகப் புனிதமான சடங்கு. அப்படி நீராடும் ஒருவன் தான் ஏழுபிறவியில் செய்த அனைத்து பாவங்களையும் நீங்கி பிறப்பில்லா முக்தி நிலையை அடைவான் என்பது ஐதிகம்.. அது ஏன் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. என்ன காரணம் என்று பார்க்கலாமா?

துர்வாச முனிவர் சிவனிடமிருந்து பெற்ற மாலையை ஐராவதத்தின் மேல்  உட்கார்ந்து வந்த இந்திரனிடம் கொடுத்தார். எப்போதும் ஒரு வித மமதையில் இருக்கும் இந்திரன் அந்த மாலையின் பெருமையையும், துர்வாச முனிவரின் கோபத்தையும் அறியாமல் உதாசினப்படுத்தியபடி அந்த மாலையை தன் யானையிடம் கொடுக்க, யானை காலில் போட்டு மிதித்துவிட்டது. இதைப் பார்த்த துர்வாச முனிவர் கொதித்தெழுந்து விட்டார். “இந்திரனே என்ன காரியம் செய்துவிட்டாய்? பதவியும் செல்வமும் உன்னை ஆணவத்தின் உச்சியில் வைத்திருக்கிறது. இக்கணம் முதல் உன்னிடம் இருக்கும் செல்வம் அனைத்தும் இழந்து நீயும் உன்னை சார்ந்தவர்களும் பராரிகளாக மாறுவீர்கள் என்று சாபமிட்டபடி சென்று விட்டார்.செய்த தவறை உணர்ந்தான் இந்திரன். ஆனால் அதற்குள் தேவலோகத்தில் இருந்தவர்கள் தங்கள் சுகங்களைஇழந்துவிட்டனர். அவர்களிடமிருந்த செல்வங்களும், சுகங்களும் கைவிட்டு நழுவியது. தேவர்களின் இத்தகைய பராரி கோலத்தைக் கண்ட அசுரர்களுக்கு கொண்டாட்டமாகிவிட்டது. எங்கு காணினும் அசுரர்களே இருந்தனர். தேவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. எத்தகைய சாபத்தை பெற்றுவிட்டோம். இனி இதற்கு என்ன தீர்வு என்று தேவர்கள் ஒன்று கூடி யோசித்தபோது கலகத்தின் அதிபதி நாரதரின் நினைவு வந்தது.

எப்போது என்ன விஷயம் கிடைக்கும் கலகத்துக்கு என்று சுற்றி வரும் நாரதர் கண்ணில்பட்டார். அவர் தேவர்களின் நிலையை அறிந்து பாவம் நீங்கள் என்றபடி பிரம்மாவிடம் அழைத்து வந்தார். நடந்ததை கேள்விபட்ட பிரம்மனோ துர்வாச முனிவரின் சாபம் மிகவும் பொல்லாதது, என்னால் இதைத் தீர்த்து வைக்க முடியும் என்று தோன்றவில்லை என்று கைவிரித்துவிட்டார். அவ்வளவு தான் இனி எங்களுக்கு விடிவுகாலமே இல்லையா என்று கண்ணீர்விட்ட தேவர்களுக்கு முக்கலாத்தையும் கட்டிக்காக்கும் கயிலை நாயகனின் நினைவு வந்தது. “துர்வாச முனிவரின் சாபத்தை நீக்குமளவுக்கு என்னால் எதுவும் செய்ய இயலுமா என்றூ தெரியவில்லை. வேண்டுமானால் உலகமும், படைக்கும் தொழிலும் சிறந்து விளங்க பரப்பிரம்மே பல அவதாரங்களை எடுத்து வருவது நாம் அறிந்ததுதான், என்னால் ஒன்று மட்டும் செய்யமுடியும். உங்களுக்கு துணையாக வரமுடியும்” என்றபடி தேவர்களை அழைத்துக்கொண்டு பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த பரந்தாமனிடம் அழைத்துச்சென்றார்.
தேவர்களின் கண்களில் ஓயாமல் வழிந்து கொண்டிருந்த கண்ணிரைக் கண்டு  விஷ்ணுவும் அவர்களுக்கு உதவ வந்தார். உங்களுக்கு செல்வம் வேண்டுமா? இழந்த பலம் வேண்டுமா? மீண்டும் உங்கள் பதவி பலம் பெற வேண்டுமா என்றார். இம்முறை ஏதாவது கேட்டு மாட்டிக்கொண்டால்?,அதனால் தேவர்கள் அனைவரும் இழந்த பலம் கிடைத்தால் போதும் என்றனர். பாற்கடலைக் கடையுங்கள். அதிலிருந்து வரும் அமுதத்தை நீங்கள் சாப்பிட்டால் இழந்த பலம் உங்களுக்கானது, அனைத்தும் கிடைக்கும் என்று கூறினார்.

நமக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்த தேவர்கள் அசுரர்களை சூட்சுமமாக அணுகி அவர்கள் உதவியோடு பாற்கடலை கடைந்தனர். பல இன்னல்களுக்கு பிறகு புனிதம் மிக்க பொருள்கள் உதயமாகின. வந்ததா.... வந்ததா,அமுதம் வந்ததா... என்று வழிமேல் விழி பார்த்து காத்திருந்து கடைந்தெடுத்த தேவர்களை, காக்க வைக்காமல் ஒருவழியாக அமுதகலசத்துடன் வந்த தன்வந்திரி பகவான் கண்ணில்பட்டார்.

இழந்த பலத்தை தரும் அமுதத்தை அசுரர்கள் உண்ணக்கூடாதே.. என்ன செய்வது என்று எண்ணிய மகாவிஷ்ணு மோகினி வடிவில் உருவெடுத்து தன்வந்திரியிடமிருந்த அமுத கலசத்தைப் பறித்துக் கொண்டு ஓடினார். தேவர்கள் செய்வதறியாமல் திகைக்க.. அசுரர்களுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது புரிந்துவிட்டது, மோகினியை ஆவேசமாக துரத்தினர். பன்னிரண்டு இரவு பகலாக அவர்களுக்குள் ஒரு போராட்டமே நடந்துவிட்டது.. தேவர்களுக்கு ஒரு நாள் என்பது  நமக்கு ஒரு வருடம் ஆயிற்றே. அதுபோல் இந்த 12 இரவு பகல் என்பது நமக்கு 12 வருடங்களாகிவிட்டது... போராட்டத்தின் போது கிடைத்ததிலும் அரியத்தக்க அமுதமானது அக்கலசத்திலிருந்து சில துளிகள்  சில இடங்களில் சிந்தி, அந்த இடத்துக்கு சிறப்பு சேர்த்துவிட்டது. 

இந்த அமுதத்துளிகளை தன்னுள் ஏந்தி எண்ணற்ற பக்தர்களின் பாவங்களைப் போக்கி, வேண்டிய அனைத்தையும் தரும் புண்ணிய இடமாக விளங்குகிறது ஹரித்துவார், உஜ்ஜையினி, நாசிக், அலகாபாத் ஆகிய இடங்கள்.. அமுதம் சிந்திய அந்நாளில் தான் கும்பமேளா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அங்குள்ள நீர்நிலைகளில் சிந்திய அமுதத்துளிகள், பொங்கி வழிவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். தேவர்களுக்காக கடைந்தெடுக்கப்பட்ட அமிர்தத்துளிகளைப் பெற்றிருக்கும் சிறப்பு மிக்க புண்ணியத்தலமாக விளங்கும் இடத்தில் நாமும் நீராடி எப்பிறவியும் இல்லா முக்தி அடைவோம். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.