உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே –வள்ளலார் காட்டிய வழி

  கோமதி   | Last Modified : 19 Jan, 2019 01:47 pm
those-who-offers-food-are-really-worshipful-the-way-vallalar-showed

பத்து இலட்சம் கோடி கொடுக்காத ஆனந்தம் பசியால் வாடிய போது கிடைக்கும் அன்னத்தில் கிடைத்துவிடும். இவையெல்லாம் இன்று நாம் கேட்கும் வார்த்தைகளாக இருந்தாலும் ஒரு காலத்தில்அன்னதானம் என்பதின் அருமையை உணராமலிருந்தது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். கர்ணன் சொர்க்கலோகத்தில் இருந்தபோது அவனுக்கு அனைத்தும் கிடைத்தன. ஆனால் வயிறு மட்டும் பசியால் வாடியது. என்ன இது சொர்க்கலோகத்தில் அனைத்தும் கிடைக்கும் என்று சொன்னார்களே...என்று யோசித்த கர்ணன் தன் பசியின் கொடுமையை கடுமையாக உணர்ந்த தருணத்தின் போது நாரதர் அந்தப் பக்கம் வந்தார். கர்ணன் தன் பசி கொடுமையை நாரதரிடம் தெரிவித்தான். நாரதர், கர்ணனின் அருகில் வந்து அவன் ஆள்காட்டி விரலை எடுத்து அவன் வாய்க்குள் வைத்தார். கர்ணனின் பசி அடங்கிற்று. கர்ணனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.மீண்டும் பசி எடுத்தால் என்ன செய்வது என்று கேட்டான். மீண்டும் உன் ஆட்காட்டி விரலை எடுத்து வாயில் வைத்தால் பசி தெரியாது என்றவர் அதற்கான காரணத்தையும் தெரிவித்தார். எல்லா விதமான தானங்களையும் செய்த வள்ளல் நீ...ஆனால் அன்னதானத்தை மட்டும் செய்யவில்லை. ஒருமுறை ஞானி ஒருவர் பசியால் வாடியபோது உன் ஆள்காட்டி விரலால் அன்னதானம் செய்யும் இடத்தை காண்பித்தாய். அதனால் உன் ஆள்காட்டி விரல் அத்தகைய புண்ணியத்தைப் பெற்றுவிட்டது என்று விளக்கினார்.

அடடா... இப்படி ஒரு விஷயம் தனக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டான் கர்ணன். இறைவா மீண்டும் ஒரு பிறவி எடுத்தால், நான் அன்னதானம் மட்டுமே செய்யும் பேற்றை எனக்கு கொடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.அப்படி ஒரு சிறப்பு அன்னதானத்து உண்டு.உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று புறநானூறும் அன்னதானத்தின் பெருமையைப் பறைசாற்றுகிறது. வாடிய பயிறை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பயிர்களுக்கும் பசி உணர்வு உண்டு என்று உணர வைத்தவர் வள்ளலார். பயிருக்கே பசி கொடுமை என்னும்போது படைப்பில் சிறந்த மனிதனுக்கு அக்கொடுமை நிகழலாமா? என்ற கேள்வியைப் பாய்ச்சியவர் இவர். பசி என்று வரும் உயிரினங்களை வாடவிடாமல் பசியைப் போக்க முன் வர வேண்டும் என்று அனைவர் மனதிலும் பசியின் கொடுமையையும், அதைப் போக்க வேண்டிய அவசியத்தையும் மனதில் பதிய வைத்து, முதன் முதலாக அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார் இராமலிங்கம் என்று அழைக்கப்படும் வள்ளலார்.

ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பது மனிதருக்கு முக்தியை அளிக்கும். பசி இல்லாத மனிதர்கள் இருந்திருந்தால் மனிதநேயம் உணர்ந்திருக்க மாட்டோம். மனித நேயம் இல்லாமல் இறைவனை எப்படி உணர முடியும்? அதனால் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பது பிறருக்கு பசி ஆற்றுவதைக் குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும் என்றுதான் வள்ளலார் அனைவருக்கும் உபதேசித்தார். பசி என்பது தீயைப் போன்றது. பசி வந்தால் மனிதனின் புத்தி தடுமாறும். இந்தத் தீயை அணைக்க அன்னதானத்தால் மட்டுமே முடியும். நரக வேதனை, ஜனன வேதனை, மரண வேதனையை விட கொடியது பசி என்னும் வேதனை. அறிவு மங்கி, கடவுளை மறந்து, சித்தம் கலங்கி, வயிறு எரிந்து இன்னும் எத்தகைய துன்பம் அது... வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத கொடுமை என்று கூறுகிறார் வள்ளலார். வள்ளலார் வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இதை சொல்லவில்லை. செயலிலும் செய்து காட்டினார். சத்திய ஞான சபையைத் தோற்றுவித்தார். சத்திய தரும சாலை என்பது சாதி, சமய,மதம் கடந்த சன்மார்க்க பாதையே. 

அருட்பெருஞ்சோதி இராமலிங்க சுவாமிகள் வடலூரில் தருமசாலையைத்  தொடங்கி தினமும் அன்னதானம் செய்யும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். வழி வழியாக இன்றும் பசிப்பிணி போக்கும் இடமாக இது விளங்குகிறது. வள்ளலாரின் வார்த்தையை வேதவாக்காக கொண்ட இவரது பக்தர்கள் ஆங்காங்கே தருமசாலையை நிறுவி இன்றளவும் அன்னதானத்தைத் தொடர்கிறார்கள். இன்று ஆலயங்களிலும், வீடுகளிலும் அன்னதானம் செய்வது என்பது மிக முக்கிய அங்கமாக இருக்க காரணம் அன்னதான வள்ளல்  வள்ளலார் எனப்படும் இராமலிங்கசுவாமிகள்.அன்னதானம் செய்வோம்,அழியா புண்ணியத்தை தேடிக் கொள்வோம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close