ஆன்மீக கதை - இது எந்த வகையில் நியாயம்?

  கோமதி   | Last Modified : 19 Jan, 2019 06:07 pm
spiritual-story-in-what-way-it-is-justice

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொல்வார்கள். அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் முற்பிறவியில் அவர்கள்செய்த  பலன்களுக்கேற்றதை அனுபவித்தே தீரவேண்டும் என்பதை உணர்த்தும் கதை.

மகாபாரதத்தில் குருக்ஷேத்திர போர் முடிந்திருந்தது. அப்போது அங்கிருந்த திருதராஷ்டிரன் கிருஷ்ணரிடம் வந்து, கிருஷ்ணா நான் குருடனாக ஆட்சி செய்தாலும் தர்ம நியாயங்களுக்கு கட்டுபட்டு நடந்தேன். நானறிந்து மட்டுமல்ல அறியாமல் கூட ஒரு பாவம் செய்ததில்லை. ஆனால் போரில் என் 100 பிள்ளைகளும் இறந்தது எந்த வகையில் நியாயம்? என்று கேட்டார். புன்னகைத்த கிருஷ்ணர் முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். நான் இதற்கு பதில் சொல்கிறேன் என்றபடி தொடர்ந்தார்.

அரசன் ஒருவனிடம் ஏழை தான் நன்றாக சமைப்பதாக கூறி வேலை தேடி வந்தான். அவனது தோற்றம் அரசருக்குப் பரிதாபமாக இருந்தது. சரி ஆனால் சுவையாக சமைக்க வேண்டும் இல்லையென்றால் உன்னை பணியிலிருந்து விரட்டி விடுவேன் என்றார், சரி என்று சம்மதித்தவன் உணவு தயாரிக்கும் போது சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தான். ஆனால் என்ன செய்தும் அரசரின் முகத்தில் சந்தோஷமில்லை. என்ன செய்யலாம் என்று குளத்தில் அமர்ந்து  யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அன்னம் ஒன்று அவனது கவனத்தை ஈர்த்தது. அன்னத்தின் குஞ்சுகளைச் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். ஆஹா.. என்ன அற்புதமான சுவை இது. இனிமேல் இந்த உணவு தவறாமல் இடம்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார் அரசர். அவனும் 100 அன்னத்தின் குஞ்சுகளுக்கு மேல் பிடித்து சமைத்துப் பரிமாறினான். வேலையை   தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் ஆசையில் அரசருக்கு செய்யக் கூடாததைச் செய்து அரண்மனையில் நிரந்தரமாகிவிட்டான். இப்போது சொல்லுங்கள் மாமிச உணவுகளை அரசர் தெரியாமல் சாப்பிட்டு விட்டார். இதற்கான தண்டனை யாருக்கு வழங்க வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் கேட்டார்.

திருதிராஷ்டிரன் சட்டென்று பதிலுறுத்தார். சமையல் செய்பவன் ஆயிரம் செய்யட்டும். ஆனால் சுவையின் தன்மையைக் கூட உணராத அரசன் என்ன அரசன், சமையல்காரன் மேல் தவறு இருந்தாலும் அதிக தவறு அரசர் மீதுதான். உயிர்களை வதம் செய்து சுவைத்த பாவம் அவரையேச் சாரும் என்றார். இப்போது ஸ்ரீ கிருஷ்ணர் தாங்கள் முதலில் கேட்ட கேள்விக்கு தற்போது பதில் சொல்கிறேன் என்றபடி தொடர்ந்தார். முற்பிறவியில் அன்னத்தின் குஞ்சுகள் என்று அறியாமல் உண்ட அரசர் நீங்கள் தான். அன்னத்தின் குஞ்சுகளை இழந்து தவித்த அன்னங்களின் சாபம்தான் இப்பிறவியில் உங்கள் 100 பிள்ளைகளையும் இழக்க காரணம். இப்பிறவியில் நீங்கள் நல்லதை மட்டுமே செய்திருந்தாலும் கடந்து வந்த பிறவிகளின் கர்மம் தொடரத்தான் செய்யும் என்று கூறினார்.

நாம் செய்த வினைகள் நம்மை நிழல் போல் தொடரும் போது கடந்து வந்த பிறவியின் நிலை தெரியாது என்றாலும், கடக்க விருக்கும் இப்பிறவியில் புண்ணியங்களைச் சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை. பாவங்களைச் சேர்க்காமல் கடவுளின் துணையுடன் இப்பிறவியைக் கடப்போம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close