அறுவர் ஒருவரான ஆறுமுக கடவுளின் அவதார வரலாறு...

  கோமதி   | Last Modified : 19 Jan, 2019 11:06 pm
history-of-lord-arumuga

எல்லா ஜீவராசிகளும் இறைவனுக்கு விருப்பமுள்ளவர்கள் தாம். அன்னையானவள் தன் குழந்தை தவறான வழிக்குச் சென்றாலும் காட்டும் அன்பில் குறை வைக்கமாட்டாள். அப்படியிருக்கும் போது தன்னால் படைக்கப்பட்ட உயிர்களிடம் வேற்றுமை காட்டுவாரா இறைவன்? எல்லாம் அவர் குழந்தைகளே... எல்லாமே நீதான் என்று இறைவனை நினைத்து உருகும் போது தாயைப் போன்ற உருக்கமும் நெகிழ்வும் இறைவனுக்கு ஏற்படுவது  ஆச்சர்யமல்ல.

தேவர்களும், அசுரர்களும் எப்போதும் ஒருவருக்கொருவர் எதிரியாகவே பார்க்கப்பட்டார்கள். கடவுளின் அனுக்கிரக பார்வை தேவர்களைச் சுற்றி இருந்ததால் அசுரர்களால் தேவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை. எத்தனை முயன்றாலும் தேவர்களின் வெற்றி உறுதியாகவே இருந்தது. ஒருமுறை அசுரர்களுக்குள் விவாதம் நடந்தது. தேவர்களை வீழ்த்துவதுதான் நமது குறிக்கோள். அதற்காக இறைவனின் துணையை நாடுவோம். அதாவது வரம் பெற்றால் இறைவனாலும் திருப்பி எடுக்க முடியாதல்லவா என்று முடிவு செய்தனர். அப்போது சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகிய மூன்று அசுரர்களும் அண்ட சராசரங்களையும் அடக்கி ஆளும் சக்தி மிகுந்த  சிவபெருமானை நினைத்து தவம் புரிந்தனர். அவர்களது தவத்தின் பின் விளைவுகளை அறிந்தாலும் சிவபெருமான் அசுரர்களது தவத்தில் மகிழ்ந்து  வரமளித்தார். அற்புத சக்திகளை கையில் வாங்கிய அக்கணமே அவர்களுக்கு மமதை தலைக்கேறியது. இது நாள் வரை தேவர்களை கண்டு ஓடிய அசுரர்கள் தேவர்களை தைரியமாக எதிர்கொண்டனர். அசுரர்களின் மாற்றத்தைக் கண்ட தேவர்கள் ஓட்டம் பிடித்தனர். தலை மறைவு வாழ்க்கை வாழும் அளவுக்கா நமது நிலைமை... எப்படி இப்படி ஒரு அற்புத சக்தியை அசுரர்கள் பெற்றனர்.. என்று குமுறிய தேவர்கள், சிவபெருமானை நாடினர்.

தேவர்களின் புலம்பலைக் கண்ட சிவபெருமான் அசுரர்களுக்கு வரம் அளித்தது யாம்தான் என்று முதல் அஸ்திவாரத்தை ஏவினார்.தேவர்கள் அதிர்ந்தனர். நாங்கள் என்ன குற்றம் செய்தோம். ஒன்றும் அறியாத எங்களை அவர்கள் துன்புறுத்துவார்கள் என்று உங்கள் ஞானக் கண்ணில் உணர்ந்தும் அவர்களுக்கு வரம் அளித்துவிட்டீரே மகேசா.. எங்களைக் காப்பதும் எங்களுக்கு துணையிருப்பதும் நீங்கள் தான் என்பதை மறந்துவிட்டீரா?  என்று புலம்பினர். உண்மைதான் ஆனால் அவர்களது தவம் என்னை மெய் சிலிர்க்க வத்துவிட்டது. என்னால் அவர்களது உயிருக்கு ஏதும் நேராது என்று வாக்களித்துவிட்டேன் என்று அடுத்த அஸ்திவாரத்தை தேவர்கள் மீது ஏவினார். என்ன சொல்கிறீர்கள் சுவாமி. எங்களுக்கே இந்த நிலைமை என்றால் ,உலக ஜீவராசிகளின் நிலைமை என்ன ஆவது? எங்கள் மீது உங்களுக்கு கருணை இருந்தால் உங்கள் சக்தியைக் கொண்டு எங்களுக்கான தலைவனை உருவாக்குங்கள் என்றூ மன்றாடினர். சிறிது தயக்கத்துக்குப் பிறகு சிவபெருமானும் ஒப்புக்கொண்டார்.

சக்தி மிகுந்த தமது நெற்றிக்கண்ணில் இருந்து 6 தீப்பொறிகளை  வெளிக்கொண்டு வந்தார். அழகிலும் அழகான குழந்தைகள் வெளிப்பட்டன. இவர்களை வளர்க்கும் பொறுப்பு கார்த்திகைப் பெண்களுக்கு என்று  அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார். ஒவ்வொரு கார்த்திகைப் பெண்ணும் ஒவ்வொரு கலையை குழந்தைகளுக்கு கற்றுகொடுத்தனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தைகள் திறமையிலும் வீரத்திலும் கல்வியிலும் ஞானத்திலும் ஜொலித்தார்கள். தன்னுடைய பாதி, சிவனின்  சக்தியிலிருந்து உருவான குழந்தைகளைக் காண ஆர்வத்துடன் வந்தாள் பார்வதி. அனைத்திலும் கற்று தேர்ந்து விட்ட மகன்கள் அறுவரையும் ஒன்றாக்கினாள். குறையில்லா அழகை பெற்ற இக்குழந்தை முருகன் என்று அழைக்கப்பட்டான்.மறுபுறம் அசுரர்களின் பாவக் குடம் நிறைந்து வழிந்துக் கொண்டிருந்தது. தேவர்கள் ஒருபுறம் அவசரப்படுத்த.. அசுரர்கள் மறுபுறம்அட்டூழியங்களை அளவில்லாமல் நிகழ்த்த முடிந்தது . அசுரர்களை வதம் செய்யும் நேரம் வந்துவிட்டது என்று அன்னை தேவி பழனியில் ஆண்டிக்கோலத்தில் இருந்த முருகனுக்கு ஞான வேல் வழங்கி ஆசிர்வாதம் செய்தாள். அந்த வேலை ஆயுதமாக கொண்ட முருகன் அசுரர்களை நோக்கி படையெடுத்தார். தங்கள் பாவக்கணக்கு தீர்ந்ததை அறியாத அசுரர்கள் ஆவேசமாக முருகப்பெருமானிடம் மோதினார்கள். சிவன் சக்தியும் பார்வதியின் ஆயுதமும் கொண்ட முருகன், அசுர குலத்தை அழிக்க தொடங்கினார். அசுரர்களை வதம் செய்த இடம் திருச்செந்தூர். 

சிவபெருமானும் பார்வதியும் மகிழ்ச்சியில் திளைக்க... தேவர்களின் முகங்கள் நிம்மதியைத் தாங்கியபடி அளவில்லா அன்புடன் முருகனைத் தொழுதனர்.  முருகனுக்கு அறுபடைவீடுகள் உண்டு. ஆனால் பார்வதி தேவி ஞானவேல் கொடுத்த இடம் பழனி என்பதால் அன்றைய தினம் தைப்பூச தினமாக மற்ற அறுபடை வீடுகளையும் விட சிறப்பாக கருதப்படுகிறது . மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். இறைவன் என்ன கேட்டாலும் கொடுப்பார். அதிலும் அதன் நன்மை தீமைகளை அறிந்து நமக்கு நம்மை சுற்றியிருப்பவர்களுக்குமான நல்ல செயல்களுக்கான வேண்டுதல் உடனடியாகவே கிடைக்கும். வேண்டுதல் வேண்டியபடி கிடைத்தாலும் வேண்டியது கிடைத்ததும் தன்நிலை மாறாமல் இருந்தால் முருகன்  ஆனந்தமாக அருள் தருவார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close