மனதில் இருக்கும் மாயத்திரையை நீக்குவோம்

  கோமதி   | Last Modified : 20 Jan, 2019 08:31 pm

let-us-remove-hypocrisy-from-our-mind

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி...

தை பூசம் திருவிழா

உயிர் என்பது மூன்று வகை ஒளிகளால் இயங்குகிறது. அருள் என்பது வெள் ஒளியையும்,பெரும் என்பது உயிர் ஒளியையும், ஜோதி என்பது உள் ஒளியையும் குறிக்கும். இம்மூன்றையும் இணைத்து சொல்லும் மந்திரமே அருட்பெருஞ்சோதி. இதை இடைவிடாமல் மக்கள் சொல்லும் போது உடலில் உள்ள உயிரானது ஒளியை ஓங்கச் செய்யும். கடலூர் மாவட்டம் வடலூரில் இராமலிங்க சுவாமி என்னும் வள்ளலார் வாடிய பயிறை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடி ஜீவகாருண்ய ஒழுக்கத்தை நமக்கு கற்றுத்தந்ததோடு சத்திய ஞான சபையும் தொடங்கி வைத்தார். கடவுள் ஒருவரே! அவர் ஒளிவடிவமானவர்! எல்லா உயிர்களிடத்திலும் அன்பு கொள்ள வேண்டும் என்று மக்கள் மனதில் பதிய வைத்தவர் இவர்.  

இறைவன் ஒளிமயமானவன் என்பதை உணர்த்தும் வகையில் தைப்பூச தினத்தன்று வடலூரில் ஜோதிதரிசனம் மிகச்சிறப்பாக நடைபெறும். 7 திரைகளை விலக்கி, ஜோதி தரிசனத்தைக் காண தமிழகத்திலிருந்து மட்டுமல்ல வள்ளலாரின் வாக்குகளை மனதில் ஏற்ற பக்தர்கள் உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் ஒன்று கூடுவார்கள். அன்னதானம் செய்வதன் அவசியத்தை உணர்த்திய வள்ளலார் தமது வள்ளலார் திருக்கோயிலில் தருமசாலை அமைத்து அன்னதானத்தைத் துவக்கினார். 21 அடி நீளமும், 2.5 அடி அகலமும் ஆழமும் கொண்ட அந்த அடுப்பு, அப்போது அவர் பற்ற வைத்தது 152 வருடங்களைக் கடந்தும் இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டே இருப்பதை என்னவென்று சொல்வது. அன்னதானத்துக்கு வேண்டிய பொருள்களும் தடையின்றி பக்தர்கள் மூலமாக வந்து சேர்கிறது. வேண்டுதல் வைத்த பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் விரும்பிய பொருள்களை காணிக்கையாக அளிக்கிறார்கள். 

இறைவன் ஒளிமயமானவன் என்பதை உணர்த்திய வள்ளலார் முக்தியடைந்ததும் இந்நாளில் தான். சித்தி வளாகத்தில் ஒரு தீபம் வைத்து ஏற்றி, அந்த ஜோதி இறைவனாக வழிபடவேண்டும் என்று அறிவுறுத்தினார். இவர் சித்திஅடைவதற்கு முன்பு அடியார்களுக்கு பேருபதேசம் செய்தார். இவரது இறுதிக்காலத்தில் சித்திவளாக அறைக்குள் நுழைந்து, வெளியே அறையை  தாளிடச் செய்தார். குறிப்பிட்ட சில காலங்களுக்கு இந்த அறையைத் திறக்ககூடாது என்று அவர் கட்டளையிட்டதாக சிலர் கூறுவதுண்டு. மறுபுறம் அவர் குறிப்பிட்ட காலம் முடிந்ததும் அறையைத் திறந்துபார்த்தபோது அவர் ஜோதி ரூபத்தில் இறைவனுடன் ஐக்கியமாகிவிட்டார் என்றும் சொல்வதுண்டு.  இந்த அறை திருக்காப்பிட்ட அறை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தைப்பூச தினம் முடிந்த இரண்டாம் நாளன்று இந்த அறை திறக்கப்பட்டு, வள்ளலார் இயற்றிய திருஅருட்பாவை, சத்திய ஞானசபையில் இருந்து பல்லக்கில் வைத்து திருக்காப்பிட்ட அறைக்குள் எடுத்துச்செல்லப்படும். நண்பகல் 12 மணிக்கு அறை திறக்கப்படும். பக்தர்கள் மாலை 6 மணிவரை வள்ளலார் சித்தி அடைந்த அறையைத் தரிசிக்கலாம்.

வள்ளலார் சத்திய ஞானசபை அமைந்திருக்கும் அனைத்து இடங்களிலும் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் கொண்டாடப்படும் என்றாலும் வள்ளலார் சித்தி அடைந்த வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் விலக்கப்படும் 7 திரைகளைக் காண இரண்டு கண் போதாது.தைப்பூச தினத்தன்று காலை 6.30 மணிக்கும், 10 மணிக்கும், மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி அடுத்த நாள் காலை 5.30 மணி என்று ஆறுநேரங்களில் ஏழுத்திரைகளும் நீக்கப்படும். ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்பட்டதும், அனல் பிழம்பாக வெளிப்படும் ஒளிகாட்சி நம்முள் புதைந்து கொண்டிருக்கும் ஆசை, கோபம், தன்னலம், பொய்மை, வன்மம் அனைத்தையும் வேரோடு கட்டறுத்துவிடும் என்பதை பக்தர்கள் அனுபவத்தில் உணர்வதாக கூறுவர். புலால் உணவுகளைக் கைவிடவிரும்பும் பக்தர்கள் இவரைக் கண்டு சென்றதும், இயல்பாகவே வெறுத்து ஒதுக்கிவிடும் அதிசயமும் உண்டு.

வெண்ணிற ஆடையில் தன்னை மறைத்துக் கொண்டு, உருவமாக இல்லாமல் அருவமாக ஜோதியாக காட்சியளிக்கும் வள்ளலார் பிற உயிர்களிடத்தில் காட்டிய அன்பு வெண்மையை விட தூய்மையானது. வள்ளலாரின் வாக்கு அன்பை மட்டுமே பிராதானமாக கொண்டது. ஜோதி மட்டுமே இறைவனது உருவமானது. மனதில் இருக்கும் ஆசை, செல்வம், புகழ், வன்மம்... போன்ற மாயத்திரைகளை நீக்கி மனதார ஜோதியைத் தரிசிப்போம்... இறைவனை மனதில் நிறுத்துவோம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close