சத்குரு தியாகையருக்கு கோயில் எழுப்பிய பெண் ரத்தினம்

  கோமதி   | Last Modified : 25 Jan, 2019 06:00 pm
rathinam-who-raised-the-temple-to-sadhguru-thyagar

தை மாதம் பிறந்து விட்டது .. இசை ரசிகர்களும், இசைக் கலைஞர்களும்  மார்கழி  உற்சவத்தோடு கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின் ஜெயந்திவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இசைக்கலைஞர்கள் இசையில் சங்கமிக்கும் முக்கிய இந்நிகழ்வு உருவாகக் காரணமாக இருந்தவர்..,

சங்கீதத்திலேயே திளைத்து வாழ்ந்ததாக கருதப்பட்ட  கலைஞர்கள் செய்ய இயலாததை, செய்ய நினைக்காததை ஒற்றை ஆளாய் தனித்து நின்று செய்தவர் நாகரத்தினம் அம்மாள். தேவதாசி குலத்தில் பிறந்திருந்தாலும்  எந்தக் கோவிலுக்கும் பொட்டு கட்டாமல் தியாகராஜருடைய தாசி நான் என்று சொல்லி தியாகப்பிரம்மம் சத்குரு  ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சமாதி மேல் கோயில் எழுப்பியவர் பெங்களூரு நாகரத்தினம் அம்மாள்

பெண்கள் அவ்வளவு எளிதில் வெளி உலகில் பிரவேசிக்கமுடியுமா என்ன? எத்தனை இரும்பு வேலிகளை, இரும்பு மனது கொண்டு உடைக்க வேண்டும். அத்தனையும் உடைத்தெறிந்தார் நாகரத்தினம்மாள்.

1878 ல் மைசூரில் தேவதாசி குலத்தில் பிறந்தார் இவர். 10 வயதுக்குள் இசை, தெலுகு மற்றும் வடமொழி கற்று தேர்ந்ததோடு பின்னர் வெங்கட சாமி, முனுசாமி அப்பா, கிருஷ்ணசுவாமி ஆகியோரிடம் இசைப் பயிற்சியும், கிட்டண்ணாவிடம் நாட்டியமும் கற்று தேர்ந்தார்.

புகழ்பெற்ற இசைக்கலைஞர் சேஷண்னா முன்னிலையில் நாகரத்தினம் அம்மாளின்  அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் கிடைத்த வரவேற்பும் புகழும் தான்  நாகரத்தினம்மாளுக்கு கிடைத்த முதல் வெற்றி.

நாகரத்தினம்மாள்  கச்சேரி செய்வதற்கு தன்னை  தயார் செய்துகொண்ட கால கட்டத்தில்,  தேவதாசி குலத்தில் பிறந்த ஒரு பெண்  கச்சேரி செய்வதா என்று எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் எந்த எதிர்ப்பையும் மனதில் கொள்ளாமல் அவருக்கு உறுதுணையாக இருந்த சிவசுப்ரமணிய  ஐயர், ராமாமிர்தம் ஐயர் ஆகியோரின்  பக்கவாத்தியத்திய உதவியோடு கச்சேரிகளில் தோன்றினார். மரபை  மறவாமல் மனதை உருக்கும் வகையில் அவர் பாடிய பாடல்களைக் கேட்க தனி ரசிகர் கூட்டம் கூடியது.  

இவர் எப்போதும் தியாகையரின் கீர்த்தனைகளை மட்டுமே பாடுவது வழக்கம். அதுமட்டுமின்றி இசையுடன் கூடிய கதா காலட்சேபம் செய்வதில் திறமையானவராக விளங்கினார் நாகரத்தினம்மாள். ஆண்கள் மட்டுமே கதாகாலட்சேபம் செய்துவந்த நிலையில்  அதிலும் ஓர் மாற்றம் ஏற்படுவதற்கு காரணமாக விளங்கினார். 

சென்னை, மைசூர் ஆகிய நகரங்களின் இசை உலகையே திரும்பி பார்க்க வைத்தார் என்றால் அது மிகையாகாது.  இசைக் கலைஞர்களில் வருமான வரி கட்டுபவராக நாகரத்தினம்மாள் விளங்கினார்.. 

நாகரத்தினம்மாவுக்கு தியாகபிரம்மம் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் மீது  இனம்புரியா அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். கீர்த்தானாச்சாரியார் சி.ஆர். ஸ்ரீனிவாஸ ஐயங்கார் நாகரத்னாம்மாளுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அதில்  சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிக்கு சிஷ்யர்கள் பல கோடி  இருந்தாலும்  அவருக்கு  நிரந்தரமாக சேவை செய்யும் பாக்கியம் உங்களுக்கே கிடைத்தது.  இசை உலகமே உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது என்று அந்தக் கடிதத்தில் ஸ்ரீனிவாச ஐயங்கார்  எழுதியுள்ளார்.

1912 முதலே இசை ஆராதனை அங்கு நடைபெற்றுவந்தாலும் தியாகராஜரின் சமாதியைச் சுற்றி கட்டடம் எழுப்பியிருக்கவில்லை. சமாதியை செப்பனிட்ட உமையாள்புரம் சகோதரர்களுக்குள்ளும் பிணக்கு ஏற்பட்டு சிறிய கட்சி, பெரிய கட்சி என்று  இருபிரிவாக கலைஞர்கள் பிரிந்திருந்தனர்.

இந்நிலையில் நாகரத்தினம்மாவின் கனவில் தோன்றினார் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். அவரது நினைவில் இருந்த நாகரத்தினம்மா 1920 ஆம் ஆண்டு திருவையாறு வந்தார். அவரது சமாதி இருந்த நிலத்தை பெற்று, அதற்கு பிரதிபலனாக தன்னுடைய நிலத்தைத் தந்தார்.

1921 ஆம் ஆண்டு  தியாகையருக்கு ஆலயம் அமைப்பதற்கான திருப்பணிகளைத் தொடங்கினார். ஆலயம் நிர்மாணிப்பதற்கு தேவைப்பட்ட நிதிக்காக தன்னுடைய நகை, சொத்துக்களை விற்று அதற்கு பயன்படுத்தினார். சத்குரு சமாதியைச் சுற்றி அவர் இயற்றி பாடிய பாடல்கள் கல்வெட்டுகளாக பதிக்கப்பட்டன. 

கனவில் கண்ட சத்குருவின் திரு உருவத்தை சிலையாக வடிக்கச் செய்தார். தியாகராஜரின் தாசி என்று சொல்லிக்கொண்டே தியாகராஜர் மீது 108 நாமாவளியை இயற்றினார். 1925 ஆம் ஆண்டு தியாகையரின் ஆலத்தின் குடமுழுக்கு  நடைபெற்றது.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற ஆராதனை விழாவில் கலந்து கொள்ள வந்த நாகரத்தினம்மாளுக்கு எதிர்ப்பு வலுத்தது. யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். பெண்களும், நாதஸ்வர கலைஞர்களும் சமாதிக்குள் வர அனுமதி இல்லை என்று சூலமங்களம் வைத்திய அய்யர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருந்தபோதிலும்..  ஊர்மக்களையும்,பெண்களையும்  நாகரத்தினம் அம்மாள் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்து சமாதியின் அருகில் மேடைபோட்டு பெண்களாக சேரந்து நிகழ்த்திய இசைக்கச்சேரிக்கு மக்களிடையே பலத்த வரவேற்பு பெற்றது.

சமாதியை சுற்றி அமைந்திருந்த நிலங்களை  நிதி திரட்டி விலைக்கு வாங்கி, ஆலயத்திற்கு தானமாக வழங்கிய நாகரத்தினம் அம்மாளுக்கு மக்களிடையே ஆதரவு பெருகியது. அடுத்தடுத்து நாதஸ்வர கலைஞர்களும் சமாதிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையில் இருந்த வீட்டை விற்று விட்டு திருவையாறுக்கு குடிபெயர்ந்த நாகரத்தினம்மாள் 1952 ஆம் ஆண்டு மறைந்தார். சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் தாசியாக தானும் அவரது சமாதிக்கு எதிரிலேயே தன் சமாதி அமையவேண்டும் என்ற நாகரத்தினம்மாளின் கோரிக்கையை, தியாகையரின் பக்தர்கள் நிறைவேற்ற முயன்ற போது தேவதாசியின் சமாதியை, ஓர் மகானின் சமாதிக்கு எதிரிலேயே எவ்வாறு அமைக்கலாம் என எதிர்ப்புகள் கிளம்பியது.

ஆனால் இசையின் மீது அவர் கொண்டிருந்த பக்தியும்... சத்குரு மீது கொண்டிருந்த அன்பும் அவரது ஆசையைப் பூர்த்தி செய்ய வைத்தது. ஆம்.. அவரது குருவின் சமாதிக்கு எதிரிலேயே நாகரத்தினம் அம்மாளின் சமாதியும் மக்களால் வெற்றிகரமாக அமைக்கப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close