பக்தர்கள் என்பவர்கள் கடவுளை காண விழைபவர்கள். ஆனால் சித்தர்கள் கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் என்று தேவாரம் கூறுகிறது. சித்தர் என்றால் சித்தி பெற்றவர் என்பது பொருள். சித் என்றால் அறிவு என்று பொருள். சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலையான பேரறிவு பெற்றவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள். மருத்துவம், ஜோதிடம், மந்திரம், யோகம், இரசவாதம் என அற்புதமானவற்றைத் தந்தவர்கள் சித்தர்கள் தான். சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன்படாதவர்கள். இவர்கள் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி அனைத்தையும் கடந்து இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து வந்தார்கள். இன்றும் நம் கண்களுக்குள் எட்டாமல் வாழ்ந்து வருகிறார்கள். அட்டாங்க யோகம் அல்லது எட்டு வகை யோகாங்களான இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம்,சமாதி மூலம் எண் பெருஞ்சித்திகளைப் பெற்றவர்கள் சித்தர்கள்.
ஆழ்ந்த ஞானம் கொண்டவர்கள் சித்தர்கள். நடப்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் ஆற்றல் சித்தர்களுக்கு இருந்தது. சித்தர்களின் கூற்றுப்படி மனித உடல் 96 தத்துவங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றில் ஆன்மாவின் ஆட்சியில் 24 சக்திகள் இருந்ததையும் உணர்ந்தவர்கள். நமது உடலில் 72 ஆயிரம் ரத்தக்குழாய்களும், 13 ஆயிரம் நரம்புகளும், 10 முக்கியத் தமனிகளும், 10 வாயு அமைப்புகளும் கொண்டதாக கண்டறிந்தவர்களும் இவர்கள் தாம். இதை அடிப்படையாகக் கொண்டே 96 வகையான நாடித் துடிப்புகளை உணர்ந்து இதன் மூலம் வைத்தியம் செய்யும் வகையையும் குறிப்பிட்டிருந்தார்கள். சமயத்துக்கு தொண்டு செய்த சித்தர்கள், மனித உடலின் நலனுக்கான உன்னதமான மருத்துவ முறைகளையும் எழுதி வைத்துள்ளார்கள்.
மனிதனின் ஆயுட்காலத்தில் 30 ஆண்டுகள் வாயு, 33 ஆண்டுகள் பித்தம்,37 ஆண்டுகள் கபம் என்று பிரித்து கணக்கிட்டார்கள். மனித உடலில் 4448 வியாதிகள் வரக்கூடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு களிம்புகளை தடவுவதன் மூலமாகவும், உள்ளுக்கு மருந்துகள் கொடுப்பதன் மூலமாகவும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மிக மிக அபூர்வமாக அறுவை சிகிச்சை முறை கையாளப்பட்டது. சித்தர்களது சிகிச்சை முறையில் யோகம், பிராணயாமம் மூலம் மூலிகைகளைப் பயன்படுத்தி கட்டுப்பாடாக வாழ்வது, ஆரம்ப நிலையிலேயே நோயின் தாக்கத்தைக் கண்டறிந்து குணப்படுத்துவது... கடுமையான வியாதிகளின் தீவிரத்தைக் குறைப்பது போன்றவற்றை சித்தர்களது சிகிச்சை முறையில் காணலாம்.
உடலின் உறுதியையும் மன வலிமையையும் காக்க மனதில் தோன்றும் இச்சைகளை அடக்க வேண்டும் என்று மெய்ஞானம் கூறுவது போலவே சித்த சாஸ் திரமும் கூறுகிறது. உடலை இளமையில் வைத்திருக்கும் ரகசியத்தை சித்தர்கள் அறிந்திருந்தார்கள். வயோதிகத்தால் உடல் பாதிக்காமல், மூப்பு அடையாமல், உடல் சுருக்கம் அடையாமல், நரை விழாமல் தங்களை என்றும் 16 ஆக வைத்துக்கொண்டார்கள். ஆனால் இப்படி பாதுகாத்த உடம்பை இறைவனை அடைய வேண்டிய மார்க்கத்துக்கு பயன்படுத்தினார்கள். காட்டிலும், தனிமையிலும் தவம் புரிந்தார்கள். இறைவனுக்கு செய்யும் தொண்டாக உயிரினங்களின் துன்பங்களைப் போக்கும் வகையில் சிகிச்சைகள் செய்தார்கள். இந்திரியங்களை அடக்கி சுவையைக் கட்டுக்குள் வைத்து இறைவனை அடையவே இந்த பிறவி என்பது போல உலக பற்றின்றி எந்தேரமும் இறைவனை நினைத்து வாழ்ந்தார்கள் சித்தர்கள்.
சித்தர்கள் முக்காலத்தையும் உணர்ந்த ஞானிகள். அழியாத உடம்பை பெற்றவர்கள். கூடு விட்டு கூடு பாயும் கலையை அறிந்தவர்கள். நினைத்த வடிவை நினைத்தவுடன் எடுக்கும் மாயாஜால வித்தையை உணர்ந்தவர்கள். கடலிலும் மிதப்பார்கள். நீரிலும் மூழ்கி எழுவார்கள். உலகத்தை தன் வசம் கொள்ளும் திறனை படைத்தவர்கள். ஆனாலும் எதன் மீதும் பற்றற்று இறைவனை மட்டுமே நாடினார்கள். எண்ணிலடங்கா சித்தர்கள் இருந்தாலும் அதில் முதன்மை பெற்றவர்கள் 18 பேர். சித்தர் அடங்கிய ஆலயங்கள் மேலும் பல சிறப்புகளை பெற்றிருக்கும்.
அகத்தியர் அனந்த சயன நிலையில் கேரளா பத்மநாபபுரத்திலும், அகப்பேய் சித்தர் எட்டக்குடியிலும், தன்வந்திரி வைத்தீஸ்வரன் கோயிலிலும், திருமூலர் சிதம்பரத்திலும், போகர் பழனியிலும், இடைக்காடர் திருவண்ணாமலையிலும், சட்டமுனி சீர்காழியிலும், மச்சமுனி திருப்பரங்குன்றத்திலும், கொங்கணவர் திருப்பதியிலும், பதஞ்சலி இராமேஸ்வரத்திலும், பாம்பாட்டிச்சித்தர் திருக்கடவூரிலும், குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையிலும், கோரக்கர் திருக்கழுகுன்றத்திலும் அடக்கமாகியுள்ளனர். சித்தர்களின் அடக்கத்தாலேயே இத்தகைய தலங்கள் சிறப்பு பெற்றவையாகின்றன. சக்திகள் மிகுந்து பக்தர்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் முக்கிய தலமாகவும் மாறுகின்றன. எண்ணற்ற சக்திகளைத் தன்னுள் அடக்கி உடல் ஆரோக்யத்துக்கு ஜீவநாடியாக அற்புதமான மருத்துவ சிகிச்சையை வெளிக்கொணர்ந்து, பிரபஞ்சத்தையே கட்டி ஆளும் திறமையைக் கொண்டிருந்தாலும்,காட்டிலும் மலையிலும் குகையிலும் இறைவனின் நாமத்தை ஜெபித்து வாழுங்காலம் முழுமையும் இறைவனையே தியானித்தவர்கள் இவர்கள். இன்றும் திருவண்ணாமலையிலும், சதுரகிரி மலையிலும், கயிலையும் சித்தர்கள் தங்கள் சித்து விளையாட்டை தொடர்ந்தபடி வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நம் கண்களுக்கு எட்டாதபடி….