ஆன்மீக கதை - விடாமல் இருப்பான் விட்டலன்

  கோமதி   | Last Modified : 30 Jan, 2019 08:53 pm

spiritual-story-vitalan-will-not-let-go

இறைவனைத் துதிப்பதற்கு தகுந்த நேரம் காலம் உண்டா? குறிப்பிட்ட நேரத்தில் தான் இறைவனை வணங்க வேண்டுமா? இறை நாமம் சொல்வதற்கு முன் என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும். சதா சர்வ காலமும் இறைவன் திருநாமத்தை சொல்கிறார்களே..அவர்கள் செய்வது சரியா? அல்லது குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இறைவனை வேண்டுவது சரியா? இவையெல்லாம் எல்லோருக்கும் இருக்கும் பொதுவான சந்தேகம்தான். ஆனால் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பகவான் நாமம் சொல்வதற்கு நம் மனதும் நமது நாவும் ஒத்துழைத்தாலே போதும். நேரமும் காலமும் தேவையில்லை. நாராயணா என்றாலும்.. ராமா என்றாலும்.. சிவ சிவா.. என்றாலும் எல்லாமே இறைவனது திருநாமம்தான். ஆண்டவனது மகிமையை எடுத்துச்சொல்லவும், அவனைப் பற்றி பேசவும் மட்டும் நம் நாவில்லை. அவனது திருநாமத்தைச் சொல்லி அவன் பாதம் பற்றவும் அவன் பெயரை உச்சரித்து உச்சரித்து நாம் கேட்டு அதை பிறர் கேட்டு மகிழவும் தான் நமது நாக்கு இருக்கிறது.

பகவான் திருநாமத்தை உச்சரித்தால் என்ன கிடைக்கும் என்று கேட்பவர்களுக்குத்தான் இந்தப் புராணக்காலத்து கதை.துக்காராம் என்ற கிருஷ்ண பக்தர் ஒருவர் இருந்தார். உடல் உறுப்புகள் ஓய்வின்றி இயங்குவது போல இவரது நாக்கும் உணவு மெல்லும் நேரம் தவிர கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டே இருக்கும். என் பணி இறைவன் நாமம் ஜெபிப்பதே என்பது போல பார்ப்பவர்களிடமும் கிருஷ்ணா என்று சொல்லுங்கள்.. விட்டலா என்று சொல்லுங்கள்.. பாண்டுரங்கா என்று சொல்லுங்கள் என்று கூறுவார். சில நேரங்களில் எப்போதும் இதே புராணம் பாடுகிறாரே.. என்று சலித்துக் கொள்பவர்கள்.. உங்களுக்கு இதைத் தவிர வேறு எதுவும் பேச தெரியாதா.. உங்களை கிருஷ்ணாதான் காப்பாற்ற வேண்டும் என்று யாராவது சலித்தப்படி சொன்னால் சட்டென்று உரக்க சிரித்துவிடுவார். காரணம் புரியாமல் மற்றவர்கள் விழித்தால்... பார்த்தீர்களா.. இப்போது கூட கிருஷ்ணாதான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டீர்கள்.. இதைத்தான் நானும் சொல்கிறேன். கிருஷ்ணா.. கிருஷ்ணா என்று சொல்லுங்கள் என்று மடக்கி விடுவார். பேசியவர்கள் வாயடைத்தப்படி ஓ... இவர் சொல்வது போல் கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்ல வேண்டும் போல என்று ஆமோதித்தபடி ஒப்பு கொள்வார்கள். 

இவரிடம் இப்படி வாதம் பேசியவர்கள் இறுதியில் கிருஷ்ணரை அழைப்பார்கள் அல்லது வானத்தைப் பார்த்தபடி விட்டலா என்று தங்களது தோல்வியை ஒப்புக் கொள்வார்கள். இவர்கள் வீட்டில் பணிபுரியும் வேலைக்கார பெண்மணி இவரது செயல்களை கவனித்துக்கொண்டே இருந்தாள். சதா சர்வ காலமும் கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்கிறாரே... அப்படி என்னதான் கிருஷ்ணன் லீலை புரிந்துவிட்டானோ... விட்டேனா பார் என்று இல்லாமல் விட்டலா.. விட்டலா வேறு என்று நொந்துகொள்வது போல் வெளியில் சொன்னாலும் மனதளவில் விட்டலாவை ரசித்தப்படி சொல்லி சொல்லி மகிழ்வாள். காரணமே புரியாமல் அவளுடைய மனதையும் விட்டலா வென்று விட்டான் போல.. விட்டலாவை விடாமல் சொல்லியபடி வேலை செய்து வந்தாள்.

ஒருமுறை தன்னுடைய வீட்டில் அடுப்பு எரிக்க வறட்டி தயாரித்துக் கொண்டிருந்தாள். உடன் அவள் தோழியும் அவளுக்கு தயாரித்து கொண்டிருந்தாள். வழக்கம் போல விட்டலா விட்டலா என்றபடி வறட்டி தட்டிகொண்டிருந்தாள். கைகள் இயந்திரமாய இயங்க.. இயங்க.. வாய் விட்டலாவின் நாமத்தை ஜெபிக்க வேலையும் சுறுசுறுப்பாக நடந்தது. இவளது தோழிக்கோ இவளது வேகம் பார்த்து இருப்பு கொள்ளவில்லை. எவ்வளவு சீக்கிரம் இவ்வளவு வறட்டி தயாரித்துவிட்டாள். நம்மால் முடியவில்லையே என்று மனதில் வஞ்சம் மிக அவள் தட்டியிருந்த வறட்டியை எடுத்து இவளது இடத்தில் வைத்துக் கொண்டாள். துக்காராம் வீட்டு பணிப்பெண்ணுக்கு விட்டலாவே உடன் இருந்து வேலை செய்தது போல் மகிழ்ச்சி... நான் முடித்துவிட்டேனடி என்றபடி தோழியிடம் திரும்பினாள். தோழியோ புன்னகையுடன் நானும் முடித்துவிட்டேனடி என்றாள். அவளது இடம் முழுக்க வறட்டி நிரம்பி வழிந்தோடியது. இவள் தனது வறட்டியைப் பார்த்தாள் வெறும் எண்ணிக்கையில் வறட்டி இருந்தது. என்னடி நான் அதிக வறட்டி தயாரித்தேனே என்றாள் தோழியிடம்.. ம்ம்... நீ எங்கே தயாரித்தாய்? விட்டலா ...விட்டலா..என்று விட்டத்தை நோக்கி சொல்லிக்கொண்டே இருந்தாய், வறட்டி என்ன வானத்தில் இருந்து குதிக்குமா என்றாள் தோழி. இல்லை.. நீதான் என்னுடைய வறட்டியைத் திருடியிருக்கிறாய். அதை ஒப்புக் கொள்ளாமல் வீணாக விட்டலா மேல் பழியிடுகிறாய் என்றாள். இருவருக்குள்ளும் வாதம் அதிகமாகிய போது துக்காரம் அந்த வழியே வந்தார்.

இருவருமே பொய் சொல்லவில்லையென்றால் நடுவர் ஒருவர் தீர்ப்பு சொல்லட்டும் என்றபடி இருவரும் துக்காராமிடம் தங்கள் சந்தேகங்களைக் கூறீனார்கள். தோழி... துக்காராமைப் பார்த்து உங்கள் வீட்டு பணிப்பெண் என்பதால் தாங்கள் அவளுக்கு சாதகமாக தீர்ப்பு கூறக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவரது கருத்துக்களை ஏற்பதாக தெரிவித்தாள். சரி என்ற துக்காராம் வறட்டி எடுத்து திருப்பி திருப்பி பார்த்தார். முகத்தின் அருகில் கொண்டு போன போது விட்டலா என்ற சத்தம் வறட்டியிலிருந்து கேட்டது. பிறகு ஒவ்வொரு வறட்டியாக காதருகில் கொண்டு போனார். விட்டலா என்ற சத்தம் கேட்ட வறட்டியை ஒரு புறமும், சத்தமில்லாத வறட்டியை மறுபுறமும் வைத்தார். வறட்டி தட்டும் போது விட்டலா என்று கூறியது யார் என்று கேட்டார். பணிப்பெண் நான் தான் என்றாள். இதோ இதுதான் உன்னுடைய வறட்டி. நீ விட்டலா.. விட்டலா என்று சொல்லும் போது நீ கூறிய திசையில் உள்ள காற்றிலெல்லாம் விட்டலா என்னும் வார்த்தை பரவியது. அப்படி இந்த வறட்டிக்குள்ளும் அத்திருநாமம் பரவி இப்போது எதிரொலிக்கிறது. இந்தப் பக்கம் இருக்கும் வறட்டிதான் நீ தயாரித்தது சரியா என்றார்.. தோழி ஆமாம் என்பது போல் தலையயாட்டினாள். இனி இதுபோல் செய்ய மாட்டேன் என்று மன்னிப்பு கோரினாள். பணிப்பெண்ணுக்கு மிகுந்த சந்தோஷம்.. விட்டல்.. விடாமல் உடன் இருந்தானே... இதைவிட வேறு என்ன பேறு வேண்டும் என்றபடி மீண்டும் மீண்டும் விட்டலா விட்டலா என்று பாடியபடி துக்காராமுக்கு நன்றி சொன்னாள்.

வறட்டியில் விட்டலா விட்டலா என்ற நாமம் எதிரொலிக்குமா என்று  கேட்க கூடாது. இது புராணக் கதை ஆனால் விட்டலா என்றாலும்.. பாண்டுரங்கா.. பண்டரிநாதா என்றாலும்... கிருஷ்ணா என்றாலும்.. சிவ  சிவா என்றாலும் ராமா..ராமா. என்றாலும் இறைவன் உடன் இருப்பார். இறைவன் நாமம் சொல்ல நாக்கு தயங்குமா என்ன? அதனால் என்ன வேலை செய்தாலும் இறைவன் நாமம் சொல்லி தொடங்குங்கள். இறைவன் உடன் இருப்பான்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close