எனக்கு எல்லாமே நீதானே பாபா..

  கோமதி   | Last Modified : 31 Jan, 2019 03:09 pm
you-are-everything-for-me-baba

பாபா என்று உரிமையுடன் அழைக்க செல்வம் தேவையில்லை. மனம் முழுக்க அன்பு ஒன்றே போதுமானது. நீ அனுபவிக்கவேண்டியதை பொறுமையாக அனுபவித்தே தீரவேண்டும். இதை மாற்ற முடியாது. ஆனால்  பதற்றமடையாதே. இவற்றைக கடக்க நான் உனக்கு துணையாக இருப்பேன். பயப்படாதே.. நான் உன்னுடன் தான் இருக்கிறேன். நினைப்பது எதுவுமே நடக்கவில்லையே என்று ஆத்திரப்படாதே.அவற்றிலிருந்து வெளியே வா.. நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்று புரியும். கஷ்டப்படும் போது இப்படியெல்லாம் உடன் இருப்பவர்கள் தைரியம் சொல்லி நம்மை வெளியே கொண்டு வருவது இயல்பாக நடப்பது தான். ஆனால் இதையெல்லாம் பகவான் சொல்வாரா? இப்படி கூட தேற்றமுடியுமா?... என்று நினைப்பவர்கள் பாபாவின் பக்தர்களிடம் பேசினால் போதும்... பாபா அவர்களுக்கும் உணர வைப்பார்.

பக்தர்களின் மனநிலையைப் புரிந்து அவர்களுக்கு வேண்டியதைத் தரும் இறைவனாக மட்டும் பாபாவைப் பார்க்க முடியாது. பக்தனுக்கு பக்குவத்தையும், பொறுமையையும், அன்பையும், சகிப்புத்தன்மையும் சகலத்தையும் சேர்த்து கொடுக்கும் சர்வ வல்லமை படைத்தவர் பாபா. மனம் முழுக்க பாபாவின் மீது அன்பையும், நேசத்தையும் சுமந்து செல்வபவர்களுக்கு நீ வாழ்க்கையில் மகிழ்ச்சியையும்,ஆரோக்கியத்தையும், செல்வங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வாய் என்று தன்னுடைய ஆசிர்வாதத்தை உண்மையாக்கும் உன்னதமானவர் பாபா. அதே நேரம் நான் பக்தன் தான் ஆனால் அவர் கேட்பதை என்னால் கொடுக்க முடியும் என்ற இறுமாப்புடன் பாபாவிடம் செல்பவர்கள்  அப்போதைக்கு எதுவும் கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பினாலும் அவர்களது மனம் பாபாவின் பக்திக்கு உட்பட்டு மனதிலிருந்த நான் என்னும் அகந்தை காணாமல் போய் மீண்டும் பக்தனாய் அமர்ந்து பாபாவிடம் செல்ல தர்க்கம் செய்ய வைப்பதிலும் வல்லவர் பாபா.

ஷீரடியில் பாபாவைக் காண எப்போதுமே ஒரு கூட்டம் வந்து கொண்டேயிருக்கும். நான் கனவில் பார்த்த உருவம். என்னை வழிநடத்திய உருவம். என்னை இங்கு வந்து வழிபடச் சொன்ன உருவம் நீங்கள் என்று நீண்ட தொலைவிலிருந்தெல்லாம் மக்கள் பாபாவின் மகிமையைச் சொல்லி ஆச்சரியப்பட்டபடி வணங்கி செல்வார்கள். சிலருக்கு பாபாவை விட்டு போக மனம் வராது. சிலர் பிரிய மனமில்லாமல் செல்வார்கள். சிலர் பாபாவின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு அங்கிருந்து செல்வார்கள். எங்கு சென்றால் என்ன மனம் தான் பாபாவின் இருப்பிடத்தை மையத்திலேயே நிறுத்தி வைத்திருக்கிறதே... ஒருமுறை பக்தன் ஒருவன் பாபாவைக் காண வந்தான். அவனிடம் செல்வம் மிகுந்திருந்தது. பாபாவைப் பார்த்தால் காசு கேட்பாராமே. எவ்வளவு கேட்டாலும் கொடுக்க வேண்டும். பாபாவின் மனதில் தனி இடம் பிடிக்க வேண்டும். சிறந்த பக்தனாக இருக்க வேண்டும் என்று எண்ணினான். அவன் பார்வையில் ஒரு வித அலட்சியம் இருந்தது. என்னிடம் தான் பணம் இருக்கிறதே என்ற கர்வம் அவனது முகத்தில் தெரிந்தது. பாபாவின் தரிசனத்துக்கு காத்திருந்த மக்களின் வரிசையில் நின்றான். பாபா வந்ததும் வரிசையில் இருப்பவர்களை வாழ்த்தி வந்தார். அடுத்து நான் தான் என்றபடி நகர்ந்தவன் அருகில் வந்ததும் பாபா தன் தரிசனத்தை முடித்து திரும்பி போய் அமர்ந்து கொண்டார்.இப்படியே பக்தன் தினமும் வரிசையில் வருவதும் பாபா அவனை தவிர்ப்பதுமாக நடந்தது.
ஒரு வருடங்களாக பாபாவை பார்க்க அவனும் தினமும் வரிசையில் நின்றான். ஒரு முறை பாபாவை பார்த்துவிட்டால் போதும். அவர் கேட்கும் முன்பு செல்வத்தை அள்ளிக்கொடுத்துவிட்டால் பிறகு எப்போதுமே நமக்கு தரிசனம் உடனடியாக கிடைக்கும் என்றபடி சாவடிக்கு சென்றான். அன்றும் தரிசனம் கிட்டவில்லை. பாபாவின் அருகில் இருப்பவர்களுக்கு தெரியாதா? வருடம் முழுக்க வரிசைகட்டி ஒருவன் வருகிறான். ஆனால் இவர் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன் என்கிறாரே என்றபடி யோசித்தார்கள். பாபாவின் நெருங்கிய பக்தனான ஷாமாவுக்கும் இதே யோசனைதான். ஆனால் பாபாவிடம் கேட்க முடியாதே என்று அந்த பக்தனிடமே வந்தார்.

பாபாவிடம் ஏதாவது வேண்டுதல் வைத்தாயா? அவரிடம் கோரிக்கை வைக்க வந்திருக்கிறாயா? என்றார். அவன் ஷாமாவிடம் எதுவுமேயில்லை அவரை பார்த்து அவருக்கு வேண்டிய செல்வத்தை தரலாம் என்று வந்தேன் என்றான். ஷாமாவுக்கு புரிந்துவிட்டது. ஒன்றும் சொல்லாமல் சிரித்தபடி நழுவிவிட்டார். அருகில் வந்த பாபா என்ன ஷாமா உமது சந்தேகம் தீர்ந்ததா? என்றபடி வந்தமர்ந்தார். ஒருவருடமாயிற்றே அவனை அழைத்தாவது ஆசிர்வாதம் செய்யலாமே என்றார். நானா வரவேண்டாம் என்று சொல்கிறேன். அவனிடம் உள்ள நான் என்னும் எண்ணம்தான்... அவனை என்னிடமிருந்து தள்ளி நிற்க வைத்திருக்கிறது. தாங்கள் தான் அவனுக்கு எடுத்து சொல்ல என்று ஷாமா முடிப்பதற்குள்... பாபாவுக்கு கோபம் வந்துவிட்டது. உரக்க சத்தமிட்டார்.  பெருமைகளுக்கும், அகங்காரங்களுக்குமான இடம் இதுவல்ல... யாருக்கு என்ன தேவையோ அதை கொடுக்கும் சிறு பணியை இறைவன் எனக்கு அளித்திருக்கிறார். நானாக செய்வதற்கு ஒன்றுமில்லை. இறைவனின் கட்டளையிருந்தால் தான் என்னால் இயன்ற சிறு துரும்பை நகர்த்த முடியும். இது புரியாமல் நான் தான் எல்லாம் என்று நினைப்பவனை என்ன செய்வது என்று சத்தம் போட்டு விட்டு விடுவிடுவென தோட்டத்துக்கு சென்றுவிட்டார். அங்கிருப்பவர்களுக்கு நடப்பதும், பாபாவின் கோபமும் புரியவில்லையென்றாலும் புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தது.

சிறிதுநேரம் கழித்து வரிசையில் வந்த பக்தர்களைக் காண வந்த பாபாவுக்கு அந்த பக்தன் கண்ணில் பட்டான். சப்தமும் ஒடுங்கியபடி நின்ற அவனை அருகில் அழைத்தார் பாபா. அவனைஆதரவாக அணைத்து அவனுக்கு மாம்பழங்களையும், 15 ரூபாய் பணமும் கொடுத்தார். கண்ணீர் பெருக்க பாபாவை தொழுத அந்த பக்தன். இது போதும் பாபா. ஏழேழு பிறவிக்கு எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம். தாங்கள் கட்டளையிடுங்கள். நான் என்னால்.... இல்லையில்லை தங்களது துணையுடன் செய்ய வேண்டிய பணிகளை எனக்கு அளியுங்கள். குறையின்றி செய்ய மனம் நிறைவாக ஈடுபடுகிறேன் என்றான். பாபா அன்போடு அவனை அணைத்துக்கொண்டார். 

பகவானை அடைய நமது செல்வ வளத்தை காண்பிக்க வேண்டியதில்லை. கொடுத்தவரிடமே நம்கொண்டாட்டங்களை காண்பிக்கலாமா. நான் என்னும் அகந்தையை விடுத்து எனக்கு எல்லாமே நீதானே பாபா.. என்னும் ஒரு வார்த்தை போதுமே.. தள்ளியிருக்கும் பாபா நம்மை தாங்கி கொள்ள ஓடோடி வர... சாய்ராம்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close