பெறுவதற்கரிய பேறைப் பெற திருவண்ணாமலையாரை நாடுவோம்…

  ஸ்ரீதர்   | Last Modified : 26 Feb, 2019 02:58 pm
devotional-article

பெறுவதற்கரிய பேறைப் பெற திருவண்ணாமலையாரை நாடுவோம்…

ஆலயங்களுக்கு சென்றால் அங்கிருக்கும் தெய்வீக அலைகள் நமக்கு அருள் புரியும்  என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால்  ஆலயம் அமைந்திருக்கும் ஊரும், அங்கிருக்கும் ஒவ்வொரு அடியும்  தெய்வீக அலைகள் பொருந்தி,  சித்தர்களையும், எண்ணற்ற ஞானிகளையும், ஆன்மிகவாதிகளையும் தன் பக்கம் ஈர்த்து மலையே சிவனாக  காட்சி தருகிறது திருவண்ணாமலை என்னும் புண்ணிய க்ஷேத்திரம்.

திருவண்ணாமலை..  பிரபஞ்ச ரகசியத்தைத் தன்னுள் பொதித்திருக்கும் பிரம்மாண்டமான மலை..  கல் தோன்றி மண் தோன்றா காலத்தே என்பது போல  பிரபஞ்சம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை தோன்றியது என்று பிரமிக்கின்றனர் ஆய்வாளர்கள். எங்கும் சிவமாக எதிலும் சிவமாக  காணும் இடமெல்லாம் சிவலிங்கம் என்பது போல மலையைச் சுற்றியும் 108 சிவலிங்கள் கண்ணுக்குத்தெரியாதபடி புதைந்து தனது  தெய்விக அலைகளை வீசியபடி பக்தர்களைக் காத்துக்கொண்டு இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியில் கிரிவலம் வரும் பக்தர்கள் மலையைச் சுற்றுவது போல  கண்ணுக்குத் தெரிந்த சிவலிங்கத்திடமும் , கண்ணுக்குத் தெரியாத சிவலிங்கத்திடமிருந்து  அருளைப் பெறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இன்றும் சித்தர்களும், ஞானிகளும், தவயோகிகளும்  ஒவ்வொரு தமிழ்மாதத்தின் முதல் நாள்களும், பிரதோஷ நாட்களிலும் சூட்சும ரூபமாக  கிரிவலம் வந்து எல்லாம வல்ல ஈசனை வணங்கி வருகிறார்கள்  என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பக்தர்களுக்கான பூமியாக மட்டுமல்ல.. பக்தியில் திளைத்து பகவானைச் சரணடந்த எண்ணெற்ற சித்தபுருஷர்களின் புகலிடமாகவும் உள்ளது திருவண்ணாமலை. சிவனைக் காண வரும் சித்தர்கள் சிவனின் அருளைப் பெற்று இங்கேயே சித்தியாக இருப்பதே இதற்கு சான்று. ஆம் சித்தர்கள் தங்களது ஞான திருஷ்டியில் சிவனின் அருளை நேரடியாக பெறுவதால் வேறு எங்கும் செல்ல நாட்டமற்று இங்கேயே தவம் செய்து ஜீவசமாதி ஆகியிருக்கின்றனர். இன்றும் பல சித்தர்கள் இங்கு சூட்சும ரூபத்தில் பக்தர்கள் கண்களுக்குப் படாமல் மலையைச் சுற்றிலும் இருந்து , தவம் செய்வதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள சித்தர்கள்  திருவண்ணாமலையை நாடி வர என்ன அவசியம் என்று தானே கேட்கிறீர்கள்? இறைவன்  எங்கு குடியிருக்கிறானோ அங்குதானே அவனையும் நாடும் சித்தர்களும் குடியிருப்பார்கள்.  ஏனெனில் அத்தகைய சித்தர்களுக்கு எல்லாம் தலையாயச் சித்தரே ஆதி சித்தர் எனப்படும் சிவபெருமான்தான். .அதனால் தான் நாம் பெரிதும் போற்றும் பதினெட்டு சித்தர்களும், அவர்களுக்கு பக்கபலமாக 188 சித்தர்களும் இன்றும் அரூபமாக திருவண்ணாமலையில் நம் பார்வை படாமல் நடமாடி கொண்டு இருக்கிறார்கள். கயிலாய மலையில் கூட காண முடியாத காட்சி இது. அகத்தியர் ஜீவநாடியில் 200 க்கும் அதிகமான சித்தர்கள் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசித்து..... 25க்கும் மேற்பட்ட சித்தர்கள் அங்கேயே  ஜீவசமாதி ஆனதாக தெரிவித்துள்ளார்.
 
மனிதன் தம் மன அதிர்வுகளை புத்தியின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர இயல்பாகவே உதவிபுரிகிறது திருவண்ணாமலை. இயல்பாக பூகோள அமைப்பிலேயே எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரும் அதிர்வுகளைக் கொண்டு தன்னிகரற்று விளங்குகிறது திருவண்ணாமலை. பொதுவாக நமக்கு கோபம், ஆக்ரோஷம், குழப்பம், கவலை, மன அமைதியின்மை ஏற்படும் போது,  நம் உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதை பீட்டா அலைகள் என்போம்.  மனம் இந்நிலையில் நம் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதை அறிவோம்.

ஆனால்  நாம்  ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது  இந்த அலைகள் கீழே இறங்கி ஆல்ஃபா அலைகளாக மாறும்.  அப்போது முயற்சி செய்தால் நம் எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். ஆனால் இதே நாம் தியான நிலையில் இருந்தல் அலைகளானது 8  ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அதைத் தான்  தீட்டா அலைகள் என்று சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்நிலையில்  நம் எண்ணங்களை நம் இயக்கங்களை எளிதாக நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். இதற்காகவே சித்தர்கள் உலகெங்கிலுமிருந்து திருவண்ணாமலையை நாடி வருகிறார்கள்.

இயல்பாகவே தீட்டா அலைகளைக் கொண்டிருக்கும் திருவண்ணாமலையில் சித்தர்கள் தவநிலையில் இருக்கும் போது இந்த அலைகளும் வெளிப்படும். அதனால்தான் சித்தர்கள் சமாதி அடைந்திருக்கிறார்கள். இத்தகைய சிறப்பு மிக்க  திருவண்ணாமலையையும், திருவண்ணாமலையாரையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தரிசித்து வாருங்கள்.  பெறுவதற்கரிய பேறைப் பெற்று சிறப்பாக வாழ்வீர்கள். ஓம் நமசிவாய...
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close