உண்மையான பக்தன் யார்? 

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 05:56 pm
devotional-article-who-is-best-devotee


நாராயணா.. நாராயணா.. என்று நாரயணன் நாமம் பாடும்  நாரதர், வைகுண்டவாசியான விஷ்ணுவைக் காண சென்றிருந்தார். மகாவிஷ்ணு, இருக்காரே மிகவும் வில்லங்கமானவர்.  கர்வம் மிக்க பக்தர்களாக இருந்தாலும், பதுசாக  வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றிவிடுவார். 

நாரதருக்கு நாராயணனின் சிறந்த பக்தன், தான் ஒருவர் மட்டுமே என்னும் மமதை இருந்தது. அதை அடக்குவதற்கு சரியான சமயம் எதிர்பார்த்திருந்தார் விஷ்ணு. நாரதரின் அழைப்பு கேட்டும் காது கேட்காதது போல் பூலோகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

”நாராயணரே நான் அழைத்தது கூட கேளாமல் என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். ”வேறொன்றுமில்லை நாரதரே பூலோகத் தில் எனக்கு பிடித்த பக்தன் ஒருவன்  இருக்கிறான். அவனைதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.  

”தேவலோகத்திலும் பூலோகத்திலும் என்னை விட உங்கள் மீது  பக்தியை கொண்டிருப்பவர்கள் உண்டா என்ன? அறியாமல் பேசலாமா  பிரபு” என்றார் நாரதர்.” நான் சொல்வதில் நம்பிக்கை இல்லாவிட்டால் வா அந்தப் பக்தனை நேரில் பார்க்கலாம்” என்று அழைத்துச்சென்றார். 
  
விஷ்ணு பக்தனாக அடையாளம் காட்டப்பட்டவன் விவசாயி. குடிசையில் வாழ்ந்து வந்தான். ”இருந்த நொய் அரிசி கொண்டு கஞ்சி காய்ச்சியிருக்கேன்.  எடுத்துட்டு போங்க” என்றாள் விவசாயியின் மனைவி.  ”நல்லபடியாக இன்று வயிற்றுப்பாட்டுக்கு படி யளந்த நாரயணனே உனக்கு நன்றி” என்று வயலுக்கு கிளம்பினான். 

வழியில் வயதான பாட்டி ஒருவர் பசியில் துன்பப்பட, அவர்களுக்கு கையில் இருந்த கஞ்சியைக் கொடுத்துவிட்டு வயிறார உண்டு மீதியிருந்ததை  மதிய பொழுதில் உண்டு வயிற்றை நிரப்பினான். இரவு அவன் மனைவி “ வீட்டில் இருந்தது இது தான்” என்று கொண்டு வந்த  உணவை மகிழ்ச்சியோடு சாப்பிட்டான். படுக்கும் போது  ” நாரயணா இன்றைய பொழுது உன்னால் நல்லபடியாக  துன்பமில்லாமல் கழிந்தது. எப்போதும் நீ துணையாக இருப்பாய்” என்று கூறி படுத்தான்.
 
 ”மூச்சு கூட விடாமல் உன் நாமம் ஜபிக்கிறேன். என்னையும் அவனையும் ஒப்பிடுவதா நாராயணா...”. என்றார் நாரதர். “உனக்கு சொன்னால் புரியாது. இங்கு அருகில் வா” என்ற விஷ்ணு  அருகில் இருந்த ஆலயத்துக்கு நாரதரை அழைத்து சென்று.. கையில்  பூமாலையைக் கொடுத்தார். இந்த மாலையைக் கையில் வைத்துகொள். ”என்னுடைய பிரகாரத்தை மூன்று சுற்று வேகமாக சுற்றி வா. ஆனால் கவனம் நீ சுற்றும் போது பூமாலையில் இருந்து பூக்கள் உதிரக்கூடாது” என்று கட்டளையிட்டார்.

”இது என்ன பிரமாதம்.. என்னை விட வேகமாக யாரும் செயல்படமாட்டார்கள்” என்று சொல்லியபடி பூமாலையோடு கண் இமைக்கும் நேரத்தில் பிரகாரத்தைச் சுற்றி வந்தார். ”பார்த்தீர்களா...நீங்கள் சொல்வது போல் நான் வேகமாக வந்துவிட்டேன். இப்போது சொல்லுங்கள் யார் உண்மையான உங்கள் பக்தன்” என்றார் முன்னிலும் கர்வமாக.... 

”இப்போதும் அவன் தான் சிறந்த பக்தன் என்ற விஷ்ணு .. பிரகாரம் சுற்றும் போது என்னை நினைத்தாயா அல்லது மலர்கள் உதிரக்கூடாது என்று கவனம் செலுத்தினாயா? மலர்கள் உதிரக்கூடாது என்று  உனக்கிட்ட ஒரு பணியை மட்டும்தான் மனதில் வைத்திருந்தாய். ஆனால் அவன் இல்லறத்தில் ஈடுபட்டு, அவன் குடும்பத்துக்காக கஷ்டப்பட்டு பொருள் ஈட்டினாலும்...கேட்பவர்களுக்கும் இல்லையென்று சொல்லாமல் அத்தகைய சூழ்நிலையிலும் என்னை மனம் உருகி அழைத்தானே அவன் தான்  சிறந்த பக்தன்.

 துன்பம் என்றால் என்னவென்றே தெரியாமல் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நீ எனக்கு பூஜை செய்வதாலோ, என் நாமத்தை உச்சரிப்பதாலோ, சிறந்த பக்தன் ஆகிவிடமாட்டாய்.. இப்போது புரிந்ததா” என்றார் நாராயணன்.

  ”ஆம் நாராயணா.. நாராயணனை அடைய சிறந்த பேறு  பூஜையும் விரதமும் அல்ல.... மனம் உருகி அவனை அழைப்பதிலும், வணங்குவதிலும் தான் இருக்கிறது” என்று ஒப்புக்கொண்டார் நாரதர். 

எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும், தன் கடமை தவறாது, அதே சமயம், கடவுளையும் மறக்காமல் இருப்பவர்கள் தான் அனைவரையும் விட சிறந்த உயர்வான உண்மையான பக்தர்கள் என்கிறது ஆன்மிகம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close