தினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை-15

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 30 Dec, 2017 11:18 am

திருப்பாவை பாடல் 15

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!

சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்

வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

பொருள்:

“ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, “கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள். உடனே தோழிகள், “உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.

அப்போது அவள், “சரி..சரி…எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள். ”அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். “என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.

தோழிகள் அவளிடம், “நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.


திருவெம்பாவை - 15

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்

சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர

நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்

பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்

பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :

கச்சணிந்த அழகிய அணியுடன் கூடிய கொங்கை களை உடையீர்! ஒவ்வொரு சமயத்தில், எம்பெருமான் என்று சொல்லி வந்து இப்பொழுது நம்மிறைவனது பெருமையை ஒருகாலும் வாயினாள் கூறுதலை நீங்காதவளாகிய இவள் மனம் மகிழ்ச்சி மிக விழிகளினின்றும், ஒருபொழுதும் நீங்காத நீரின் நீண்ட தாரைகள் ஒழுகப் பூமியின்மேல் ஒருமுறையே வீழ்ந்து எழாது வணங்குவாள்.பிற தேவரைத் தான் வணங்கமாட்டாள்.

பெரிய தலைவனாகிய இறைவன் பொருட்டு ஒருவர் பித்தராகுமாறும் இவ்வாறோ? இவ் வாறு பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர் யார் ஒருவரோ, அவருடைய திருவடியை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த நீரில் நீர் குதித்து ஆடுவீராக.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close