தினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை -20

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 04 Jan, 2018 10:15 am

திருப்பாவை - 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!

செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!

செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

பொருள்: முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.


திருவெம்பாவை - 20

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்

போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்

போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்

போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.

விளக்கம்: எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்; எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடி களுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.