தினம் ஒரு திருப்பாவை - திருப்பள்ளிஎழுச்சி- 25

Last Modified : 10 Jan, 2018 11:44 am

திருப்பாவை - 25

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர

தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.


திருப்பள்ளிஎழுச்சி - 5

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்

போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரை

சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!

சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து

ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்

எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.!

விளக்கம்: குளிர்ச்சியைக் கொண்ட, வயல் சூழ்ந்த திருப் பெருந்துறைக்கு அரசனே! நினைத்தற்கும் அருமையானவனே! எங்கள் எதிரில் எழுந்தருளி வந்து, குற்றங்களைப் போக்கி எங்களை ஆட்கொண்டருளுகின்ற எம் பெருமானே! உன்னை, எல்லாப் பூதங்களிலும் நின்றாய் என்று பலரும் சொல்வதும், போதலும் வருதலும் இல்லாதவன் என்று அறிவுடையோர் இசைப்பாடல்களைப் பாடுவதும்; ஆனந்தக் கூத்தாடுவதும் தவிர உன்னை நேரே பார்த்தறிந் தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை. ஆயினும், நாங்கள் நேரே காணும்படி பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.