தினம் ஒரு திருப்பாவை - திருப்பள்ளிஎழுச்சி- 26

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 10 Jan, 2018 11:40 am

திருப்பாவை - 26

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே

சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன்பிற்கு, உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.


திருப்பள்ளி எழுச்சி - 06

பப்பற வீட்டு இருந்து உணரும் நின் அடியார்

பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானிடத்து இயல்பின்

வணங்குகின்றார் அணங்கின் மணவாளா!

செப்புறு கமலங்கள் மலரும் தண் வயல்சூழ்

திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!

இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்

எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.!

விளக்கம்: உமையம்மைக்கு மணவாளனே! கிண்ணம் போன்ற தாமரை மலர்கள் விரியப்பெற்ற குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! இந்தப் பிறவியை நீக்கி எங்களை ஆட்கொண்டு அருள் செய்கின்ற எம் பெருமானே! மனவிரிவு ஒடுங்க பற்றற்று இருந்து உணருகின்ற உன் அன்பர்கள் உன்பால் அடைந்து பிறவித்தளையை அறுத்தவராய் உள்ளவர்களும் மை பொருந்திய கண்களையுடைய பெண்களும் மனித இயல்பில் நின்றே உன்னை வணங்கி நிற்கின்றார்கள்; பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.