தினம் ஒரு திருப்பாவை - திருப்பள்ளிஎழுச்சி- 28

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 12 Jan, 2018 10:43 am

திருப்பாவை - 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்

குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை

சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே

இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பொருள்: குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.


திருப்பள்ளி எழுச்சி - 08

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்

மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்?

பந்தணை விரலியும் நீயும் நின் அடியார்

பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே!

செந்தழல் புரை திருமேனியும் காட்டி

திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்!

ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!

விளக்கம்: அருமையான அமுதமே! எப்பொருளுக்கும் முற்பட்ட முதலும், நடுவும் முடிவும் ஆனவனே! மும்மூர்த்திகளும் உன்னை அறியமாட்டார்; வேறு யாவர் அறியக்கூடியவர். பந்தை ஏந்திய விரல்களை உடைய உமையம்மையும் நீயுமாக உன்னுடைய அடியார்களுடைய பழைய சிறு வீடுதோறும் எழுந்தருளின மேலானவனே! சிவந்த நெருப்பை ஒத்த வடிவத்தையும் காட்டித் திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற திருக்கோயிலையும் காட்டி, அழகிய தண்ணிய அருளாளன் ஆதலையும் காட்டி வந்து ஆட்கொண்டவனே! பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.