தினம் ஒரு திருப்பாவை - திருப்பள்ளிஎழுச்சி- 29

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 13 Jan, 2018 11:13 am

திருப்பாவை - 29

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

பொருள்: கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை; பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.


திருப்பள்ளி எழுச்சி - 09

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

விழுப் பொருளே! உன தொழுப்பு அடியோங்கள்

மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே!

வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம்

கண் அகத்தே நின்று களிதரு தேனே!

கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார்

எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்!

எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.!

விளக்கம்: விண்ணில் வாழும் தேவர்களும், அணுகவும் முடியாத, மேலான பொருளாயுள்ளவனே! உன்னுடைய தொண் டினைச் செய்கின்ற அடியார்களாகிய எங்களை மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே! பரம்பரை அடியாராகிய எங்களுடைய கண்ணில் களிப்பைத் தருகின்ற தேன் போன்றவனே! கரும்பு போன்றவனே! அன்பு செய்கின்ற அடியவரது எண்ணத்தில் இருப்பவனே! உலகம் அனைத்துக்கும் உயிரானவனே! பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.