தினம் ஒரு திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி - 30

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 13 Jan, 2018 11:53 pm

திருப்பாவை - 30

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை

திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்

செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பொருள்:

அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.


திருப்பள்ளி எழுச்சி - 10

புவனியில் போய்ப் பிறவாமையின் நாள் நாம்

போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவனுய்யக் கொள்கின்ற ஆறு என்று நோக்கி

திருப்பெருந்துறை உறைவாய்! திருமாலாம்

அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப்

படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும், நீயும்

அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்!

ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே.!

விளக்கம்:

திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே! திருமாலாகிய அவன், பூமியில் சென்று பிறவாமையினால் யாம் வீணாகவே நாளைக் கழிக்கின்றோம்; இந்தப் பூமியானது சிவபெருமான் நாம் உய்யும்படி அடிமை கொள்கின்ற இடமென்று பார்த்து விருப்பத்தை அடையவும், பிரமன் ஆசைப்படவும் அர்ச்சிக்கவும் உனது பரந்த உண்மையான திருவருட்சத்தியும், நீயுமாகப் பூமியில் எழுந்தருளி வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே! அருமையான அமுதம் போன்றவனே! திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.