தினம் ஒரு திருவெம்பாவை - 1

  கோமதி   | Last Modified : 15 Dec, 2018 10:43 pm

thiruvempavai-of-the-day-1

திருவெம்பாவை விரதத்தை, சைவ சமயத்தவர்கள் மார்கழிமாதத்தில் வரும் திருவாதிரை நாளிற்கு ஒன்பது நாட்கள் முதல் நோன்பை ஆரம்பித்து பத்தாவதுநாள் திருவாதிரை அன்று  நிறைவு செய்வது வழக்கம். மணிவாசகப் பெருமான் பாடியருளிய ‘திருவெம்பாவையும்’, ‘ஆண்டாள் அருளிய திருப்பாவையும்’ மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டவை.

அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர் மூவருக்கும் மூத்தவர் என அறுதியிட்டுச் சொல்லப்படுகிறவர் மணிவாசகப் பெருமான். பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்த இவர் அந்த ஊரின் பெயராலேயே வாதவூரார் எனவும் அழைக்கப் பட்டார்.திருவெம்பாவைக்குச் சிறப்பே, அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வரும் "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. திருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவையையும் தம் கையால் எழுதிய இறைவன் அந்நூல்களை உலகறியச் செய்ய வேண்டி நூலின் முடிவில் "திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து" எனத் திருச்சாத்திட்டுத் தில்லைச் சிற்றம்பலத்தில் வாயிற் படியிலே வைத்தருளினார். இறைவனையே உருக வைத்த மாணிக்கவாசகரின் திருவெம்பாவையை நாமும் இறையருள் ததும்பும் மார்கழி மாதத்தில் தினமும் பாராயணம் செய்து ஈசன் அருள் பெறுவோம்.  

பாடல் எண் : 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்

ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே

ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :

ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத காணுதற்கு அரிய பெருமையையுடைய ஒளியானவனை பாடுவதைக் கேட்டும், உறங்குகின்றனையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ?.மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது,உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இது என்ன நிலை பார். அவள் செயல் அவ்வாறிருக்க, எங்கள் தோழியாகிய விழித்தெழாதிருக்கும் உன் தன்மை இந்நிலையோ? அது என்ன! எமது கண்பாவை போன்றவளே! சொல்லுவதை ஏற்பாயாக;

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.