• வியட்நாம், ஆஸ்திரேலியாவுக்கு குடியரசுத் தலைவர் அரசுமுறைப் பயணம்
  • ஜனவரி பேரணி ஓர் திருப்புமுனை: மம்தா பானர்ஜி
  • தேனி, திருவாரூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
  • இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே
  • அரையிறுதியில் தமிழக ரோல்பால் அணிகள்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: முழுமுதற் கடவுள் விநாயகர் பிறந்த கதை!

  கோமதி   | Last Modified : 11 Sep, 2018 12:22 pm

வக்ரதுண்ட மஹாகாய கோடிஸூர்ய ஸமப்ரப| அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா||

உடைந்த கொம்பையுடைய, பெரிய உடம்புடன் கூடிய பலகோடி சூரிய பிரகாசமுடைய இறைவனே!

என்னுடைய எல்லா காரியங்களிலும் எப்போதும் எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாமல் இருக்க நீ அருள் புரியவேண்டும்.

விநாயகப் பெருமான் விக்னங்கள், தடை, தடங்கல், அனைத்தையும் நீக்குபவர். எல்லோருக்கும் மூத்தவர், முதல்வர், ஞான பண்டிதர். விநாயகர் அஷ்டோத்திரத்தில் வரும், ஓம் அநீஸ்வராய நம என்ற ஒரு வரிக்கு ஏற்ப, தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லாதவர். பார்கவ புராணத்தின்படி விநாயகரே முழு முதல் கடவுளாக, இந்த உலகை படைத்து, அதில், காத்தல், அழித்தல் போன்ற தொழில்களை செய்ய மும்மூர்த்திகளையும் படைத்தவர் ஆவார்.

பிரம்மா ஒரு சமயம் கொட்டாவி விடவே அதில் இருந்து சிந்தூரனன் என்ற ஓர் அரக்கன் தோன்றினான். அவனுடைய சிவந்த தேகத்தைப் பார்த்து பயந்த பிரம்மா, முன்னெச்சரிக்கையாய் அவன் கேட்காமலேயே அவனுக்கு சில வரங்களைத் தந்தார். கேட்காமலேயே வரம் கிடைத்த மமதையில் மூவுலகையும் ஆட்டிப் படைத்தான் அரக்கன். மும்மூர்த்திகளே செய்வதறியாமல் திகைக்க கணபதியைப் பணிந்தனர். விநாயகர் உடனே தோன்றி, “கவலை வேண்டாம். நான் உமா தேவியாரின் திருவயிற்றில் அவதரிப்பேன்” எனக் கூறி மறைந்தார்.

கருவுற்று உமாதேவியாரின் திருவயிற்றில், காற்றாக நுழைந்த சிந்தூரானன் குழந்தையின் தலையைத் திருகி எடுத்துக் கொண்டு போய் விட, தலையே இல்லாமல் பிறந்த குழந்தையைப் பார்த்து அனைவரும் பதறவே கலங்காதே என்று சொன்ன சிவபெருமான் முன்பொரு சமயம் கஜமுகாசுரன் கேட்டுக் கொண்டபடி அவனுடைய தலையைத் தன் குழந்தையின் தலை இருக்கும் இடத்தில் பொருத்தினார். கஜானனன் ஆனார் விநாயகப் பெருமான்.

உமாதேவியாரிடம் வளர்ந்து வந்த கஜானனன் உரிய காலம் வந்ததும் சிந்தூரனனை அழிக்கப் புறப்பட்டார். சிந்தூரனனைத் தூக்கி எடுத்துத் தன் துதிக்கையால் ஓங்கி அடித்து அவன் ரத்தத்தைத் தன் உடம்பில் பூசிக் கொண்டார். செந்நிறமான விநாயகர் அன்று முதல் "சிந்தூர விநாயகர்" என்ற பெயரும் பெற்றார். இது தான் பார்கவ புராணம்.

இன்னொரு புராண கதைப்படி, சிவனின் மனைவி பார்வதி, தன் மேனியில் பூசிய மஞ்சளை எடுத்து, சிறிது தைலத்தில் தோய்த்து குழைத்தாள். அதன் மீது கங்கை தீர்த்தம் தெளித்து உயிரூட்டினாள். உயிர்ப்பெற்ற அந்த மகவை தனது மகனாகவே எண்ணிய பார்வதி தேவியார், அவரையே தன் அந்தப்புர காவலராக நியமித்தார். அவருக்கு கணபதி என்று பெயரிட்டார்.

அப்போது பார்வதியைக் காண அங்கு வந்த சிவனை, புதுக்காவலரான கணபதி தடுத்தார். தன் தாயின் உத்தரவுப்படி, யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்றார். கோபம் கொண்ட சிவன் அவரது தலையை வெட்டினார். பார்வதி இதைக் கண்டிக்கவே, தனது பூத கணங்களை அனுப்பி முதலில் காணும் உயிரினத்தின் தலையை கொய்து வருமாறு கூறினார் சிவன்.

பூதகணங்களுக்கு யானை தென்படவே அதன் தலையை வெட்டி எடுத்து வந்தனர். சிவ பெருமான் அந்த தலையில்லா குழந்தைக்கு யானைத் தலையைப் பொருத்தி உயிரூட்டினார். அவருக்கே முதல் பூஜை செய்ய வேண்டுமென ஆணையும் பிறப்பித்தார்.

வியாசர் சொல்ல சொல்ல ஸ்ரீமகாபாரதத்தைத் தன் கொம்பை உடைத்து எழுதினார் விநாயகப் பெருமான். தனக்கான இருப்பிடத்தைக் கூட மிக எளிமையாக அமைத்துக்கொண்டவர். அரசமரத்தடி முதல் நாம் உள்ளன்போடு நினைத்தால் உடனே காட்சி தர தெரு முனை முதற்கொண்டு வளம் வருபவர். பசுஞ்சாணத்தில் பிடித்து வைத்தாலும் அதிலும் காட்சி தரும் தெய்வம். தன்னை துதிப்போரின் சங்கடங்களை நீக்கியருளும் முழுமுதற் கடவுள். அவரை மாணவர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபட்டால் தடைகள் நீங்கி கல்வியில் ஏற்றமும், ஞானமும், புலமையும் கிட்டும்.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

- newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.