தரிசிக்க வேண்டிய விநாயகர் கோவில்கள்!

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2018 12:33 pm

மூலமுதற் கடவுள் விநாயகர் இல்லாத கோயில்களே இல்லை எனலாம். பிரபலமான சில விநாயகர் கோயில்களை இங்கு தரிசிப்போம்.

திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் திருச்சியின் அடையாளங்களுள் முக்கியமானது மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில். சத்திரம் பகுதியில் அமைந்துள்ள மலை உச்சியில் காணப்படும் குடைவரை கோவிலான தாயுமானவர் சிவன் கோவில் உச்சியில் உள்ளது இந்தக் கோவில்.

இராமன் கொடுத்த அனந்த சயன ஸ்ரீ ரங்கநாத சுவாமி விக்கிரகம் கொண்டுபோகும் வழியில் சந்தியாவதனம் செய்ய விரும்பினார் விபீஷணன். அப்பொழுது ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் உருவில் தோன்றிய பிள்ளையாரிடம் அந்த விக்கிரகத்தை சிறிது நேரம் கொடுத்துவிட்டு செல்ல, அவரோ விக்கிரகத்தை நிலத்தில் வைத்துவிட்டார். பிறகு விபீஷணனால் எவ்வளவு முயன்றும் அதனைப் பெயர்க்க முடியவில்லை. கோபங்கொண்ட விபீஷணனிடம் இருந்து தப்பி ஓடிய சிறுவன் அருகில் இருந்த மலையில் ஏறலானான். துரத்திச் சென்ற விபீஷணன் உச்சிக்குப் போனதும் சிறுவனைப் பிடித்து அவனைக் கொட்ட கையை ஓங்கவே சிறுவன் பிள்ளையாராக மாறி விபீஷணனுக்கு அருட்காட்சி கொடுத்தார். அந்த இடத்தில் பிள்ளையாரும் நிலை கொண்டார். அதுவே இன்று தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மலையேறி வணங்கும் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார்.

பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட பிள்ளையார் கோவில்களுள் மிகவும் பிரசித்திப் பெற்றது, சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கும் குன்றக்குடிக்கும் இடையில் அமைந்துள்ள பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில். 6 அடி உயர வலம்புரி பிள்ளையார் இங்கு வந்து அமர்ந்த பிறகு, மருதங்குடி, திருவீங்கைக்குடி, ஈக்காட்டூர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்த ஊர் பிள்ளையார் பட்டி ஆகிவிட்டது. இங்கு விநாயகர் சதுர்த்தி, 10 நாட்கள் திருவிழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மதுரை முக்குறுணி விநாயகர் மதுரை மீனாட்சி கோவிலில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் பிள்ளையாரின் பெயர் முக்குறுணி விநாயகர்.

பெரிய பிள்ளையாரான இவருக்கு பிள்ளையார் சதுர்த்தி அன்று முக்குறுணி அரிசியில் மிகப் பெரிய கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்வர். திருச்செங்காட்டங்குடி வாதாபி கணபதி நாகை மாவட்டம் நன்னிலத்திருந்து 9கிமீ தொலைவில் உள்ளது திருச்செங்காட்டாங்குடி திருத்தலம். கஜமுகாசுரனை விநாயகப் பெருமான் அழித்த ஊர் இது. போரின் போது அந்த அசுரனின் ரத்தம் படிந்து, ஊர் முழுவதும் செங்காடாக மாறியது. அதனால் செங்காட்டாங்குடி என்ற பெயர் பெற்றதாக வரலாறு. பல்லவர் கால தெய்வீகக் கலைச் செல்வங்களான நவதாண்டவ மூர்த்திகளையும், துவார பாலகர்களையும்இங்கு கண்டு களிக்க முடியும்.

திருவையாறு அபீஷ்ட வரத கணபதி ஸ்ரீ அபீஷ்ட வரத மஹாகணபதியை வணங்கினால் திருமணத் தடை நீங்கி விடும் என்பது நம்பிக்கை. திருவையாறு மேட்டுத் தெருவில் உள்ள இத்திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ள திருக்குளத்தில் மூழ்கி எழுந்த பின்தான் அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் திருகைலாயக் காட்சி கொடுத்தார் என்று தலபுராணம் கூறுகிறது.

பாபநாசம் சர்ப்ப விநாயகர் பாபநாசம் திருத்தலத்தில் உள்ள சர்ப்ப விநாயகர், உடலை சர்ப்பங்கள் அலங்கரிக்கின்றன. சர்ப்ப விநாயகரை வணங்கினால், இராகு, கேது தோஷங்களிலிருந்து விடுபட்டு அருள் பெறலாம் என்று கூறப்படுகிறது.

வேலூர் ஜலகண்டேஸ்வரர் குழந்தை விநாயகர் வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில், அமர்ந்திருக்கும் குழந்தை விநாயகர், பார்ப்பவரை பரவசம் அடைய செய்பவர். தவழும் கண்ணனைப் போல, இங்கு துதிக்கையில் கொழுக்கட்டையுடன், தவழ்ந்தபடியே பின்புறம் திரும்பிப் பார்க்கும் கோலத்தில் அமைந்துள்ளார் விநாயகர்.

விநாயகர் குடிகொண்டிருக்கும் எல்லா கோவிலுக்கும் நம்மால் போக முடியவில்லை என்றாலும், நம்மால் முடிந்த கோவிலுக்கு சென்று வர, காரியத்தடைகள், திருமண தடைகள் முதலான விக்கினங்களை அந்த விக்னேஸ்வரன் தீர்த்து வைப்பார்.

மணக்குள விநாயகர், புதுச்சேரி: புதுச்சேரி சென்றாலே கண்டிப்பாக பார்க்க வேண்டிய, தரிசிக்க வேண்டிய கோவில் மணக்குள விநாயகர் கோவில். வேறு எங்கும் இல்லாத வகையில், இங்குதான் விநாயகருக்கு தனி பள்ளியறை உள்ளது. தினமும் நைவேத்தியம் முடித்தவுடன் விநாயகர் பள்ளியறைக்குச் செல்வார். மூலவரான மணக்குள விநாயகர் அமர்ந்திருப்பது ஒரு கிணற்றின் மீதுதான். இந்த கிணற்றின் ஆழத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்வார்கள். முற்காலத்தில் இந்த இடத்தில் குளம் இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எல்லாவிதமான பிரார்த்தனைகளும் இங்கு நிறைவேறுகிறது என்றாலும் திருமணம், குழந்தைப்பேறு வேண்டி வணங்கிவந்தால் நன்மை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தை காட்டிலும், வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு 'தானே' மாவட்டத்தில்' தித்துவானா' என்னும் நகரிலும், 'கொலபா' மாவட்டத்தில் உள்ள 'மாத்துபாலி' என்னும் நகரிலும் உள்ள விநாயகர் கோவிலில் விநாயக சதுர்த்தி விழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்ட்ராவில் மகா கணபதி 'கணபதியப்பா' என்னும் பெயரில் விநாயக சதுர்த்தி மகாராஷ்டிர மாநிலத்தில் வேறு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகாராஷ்ட்ராவில் விநாயகர் கல்விக்குரிய தெய்வமாக வணங்கப்படுகிறார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close