தினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை-11

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 27 Dec, 2017 10:13 am

திருப்பாவை - 11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்

குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே

புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

பொருள்: கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?


திருவெம்பாவை - 11

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்

கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி

ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்

செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்

மையார் தடங்கண் மடந்தை மணவாளா

ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்

எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.

விளக்கம்: நிறைந்த நெருப்புப் போன்ற செந்நிறம் உடையவனே! வெண்மையான திருநீற்றுப் பொடியில் மூழ்கியவனே! ஈசனே! சிற்றிடையையும், மைபொருந்திய பெரிய கண்களையும் உடைய உமையம்மையின் கணவனே! அழகனே! வண்டுகள் மொய்த்தலைப் பொருந்திய அகன்ற தடாகத்தில், முகேர் என்ற ஒலி எழும்படி புகுந்து, கையால் குடைந்து குடைந்து மூழ்கி, உன் திருவடியைப் புகழ்ந்து பாடி, பரம்பரை அடிமைகளாகிய நாங்கள், வாழ்ந்தோம்; தலைவனே! நீ எங்களை அடிமை கொண்டருளுகின்ற திருவிளையாட்டினால், துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறுபவர்கள் அவற்றைப் பெறும் வகைகளை எல்லாம் யாங்களும் படிமுறையில் பெற்று விட்டோம். இனி, நாங்கள் பிறவியில் இளைக்காதபடி எங்களைக் காத்தருள்வாயாக.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close