வயலூர் முருகன்: வரம் தரும் வயலூர் வள்ளி மணாளன்!

  கோமதி   | Last Modified : 04 Jan, 2018 06:47 pmவாய் மணக்க பாடும் திருப்புகழ் என்னும் அரிய நூல் உருவாகக் காரணமானவர் வயலூர் முருகன். தனது குடும்பத்தோடு   முருக பெருமான் அருள்பாலிக்கும் அற்புத தலம் வயலூர். 

உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னர்களால் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இத்திருக்கோயில். சோழ மன்னன் ஒருவன் வயல்வெளிக்குச் சென்ற போது, ஒரே கணுவில் மூன்று கரும்புகள் விளைந்திருந்ததைக் கண்டான். அதன் அடியில் தோண்டியபோது சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டவுடன் பக்தி பரவசத்துடன் அங்கு ஆலயம் ஒன்றை நிர்மானித்தான். அந்த திருக்கோயிலில் வீற்றிருக்கும் சிவ பெருமானுக்கு ஆதிநாதன் என்று பெயர்.உடனுறை அம்பாளுக்கு பெயர் ஆதிநாயகி. வயல்கள் நிறைந்து இயற்கை பச்சை போர்வையில் கண்களுக்கு குளுமை நிறைக்கும் அந்த ஊரின் பெயர் வயலூர்.

அருணகிரி நாதர் , திருவண்ணாமலையில் முருகன் தரிசனமும் அருளும் பெற்று, 'முத்தைத் தரு' எனத் துவங்கும் திருப்புகழ் பாடினார். அதனைத் தொடர்ந்து அருணகிரிநாதர், வேறு பாடல்களை இயற்றவில்லை.இந்நிலையில் , ஒரு நாள் முருகபெருமானை தரிசனம் செய்தபோது அசரீரி ஒலித்தது. அருணகிரிநாதருக்கு முருகன் அசரீரியாக இட்ட கட்டளை, 'வயலூருக்கு வா' என்பதே.

உடனே முருகரை தரிசிக்க வயலூருக்கு வந்தார் அருணகிரி நாதர். பக்தி பரவசத்துடன் வந்த அவருக்கு 

முருகனின் நேரடி தரிசனம் கிடைக்கவில்லை. ஏமாற்றமும் , வலியும் மிகுந்த மன நிலையில் , 'அசரீரி பொய்யோ?' என உரக்கக் கத்தினார் அருணகிரிநாதர். பக்தர் குரல் கேட்டு எழுந்தருளிய  முருகப்பெருமான் வேலால் அருணகிரிநாதரின் நாக்கில் 'ஓம்' என்று எழுதினார். அதன்பின், இத்தல முருகனைப் போற்றி அவர் 18 பாடல்கள் பாடினார். தொடர்ந்து பல முருகன் கோயில்களுக்குச் சென்று திருப்புகழ் பாடியது வரலாறு.

கந்த சஷ்டியின்போது முருகன்- தெய்வானை, பங்குனி உத்திர திருவிழாவில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம் மிக விமர்சையாக இங்கு நடைபெறுகிறது. செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் வயலூர் முருகனை  வழிபட நல்ல வரன் அமையும்.

வாரியாரின் ஐம்பது பைசாவும் - கோபுரமும்

1934 ஆம் ஆண்டு வாரியார் சுவாமிகள் இந்த திருக்கோயிலுக்கு வந்தார். அப்போது அர்ச்சகராக இருந்த ஜம்புநாத சிவாச்சாரியார்,வாரியார் சுவாமிக்கு முருகப்பெருமானை தரிசனம் செய்து வைத்தார். மகிழ்ந்த வாரியார், 50 பைசாவை அவரிடம் காணிக்கையாகக் கொடுத்தார். அன்றிரவில் கோயில் நிர்வாகி ஒருவரின் கனவில் தோன்றிய முருகன், 'ஐம்பது பைசா வாங்கியிருக்கிறாயே? அதை வைத்து கோபுரம் கட்ட முடியுமா?' என்று கேட்டார். வியந்த நிர்வாகி, மறுநாள் கோயிலுக்கு வந்தபோது, வாரியார் ஐம்பது காசு கொடுத்ததை அறிந்தார். அவருக்கு அந்த காசை திருப்பி அனுப்பிவிட்டார். இதைக் கேள்விபட்ட வாரியார், வயலூர் முருகப்பெருமான கோயிலுக்கு கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்வித்தார்.

விசேஷ விநாயகர்: அருணகிரிநாதருக்கு காட்சி தந்த 'பொய்யா கணபதி விசேஷமான மூர்த்தியாவார். அருணகிரியார் இவரைப்போற்றி திருப்புகழில் காப்புச்செய்யுள் பாடியுள்ளார். யாருக்கு எவ்வளவு தகுதி இருக்கிறதோ, அந்த அளவிற்கு இவர் செல்வத்தைத் தருவார் எனவும் குறிப்பிட்டுள்ளார். அருணகிரிநாதருக்கும் இத்திருக்கோயிலில் சன்னதி உள்ளது.

 திருச்சியில் இருந்து 11 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது வயலூர் முருகன் திருக்கோயில்.

வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை…

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.