தினம் ஒரு திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி 21

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 05 Jan, 2018 10:40 am

திருப்பாவை - 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்

ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்

ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்: கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங்களால் போற்றப்படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.


திருப்பள்ளி எழுச்சி - 01

போற்றி! என் வாழ் முதல் ஆகிய பொருளே!

புலர்ந்தது பூம் கழற்கு இணை துணைமலர் கொண்டு

ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும்

எழில் நகை கண்டு நின் திருவடிதொழுகோம்

சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ்

திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!

ஏற்றுயர் கொடி உடையாய் எமை உடையாய்

எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.!

விளக்கம்: என் வாழ்வுக்குத் தாரகமாகிய பொருளே! சேற்றினிடத்து இதழ்களையுடைய தாமரை மலர்கள் மலர்கின்ற குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த, திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! உயர்ந்த இடபக் கொடியை உடையவனே! என்னை அடிமையாக உடையவனே! எம் தலைவனே! வணக்கம். பொழுது விடிந்தது; தாமரை போலும் திருவடிகளுக்கு ஒப்பாக இரண்டு மலர் களைக் கொண்டு சாத்தி அதன் பயனாக உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்கு அருளோடு மலர்கின்ற அழகிய நகையினைக் கண்டு உன் திருவடியைத் தொழுவோம்; பள்ளி எழுந்தருள்வாயாக.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.