தினம் ஒரு திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி - 22

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 06 Jan, 2018 12:32 pm

திருப்பாவை - 22

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல

செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்

எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் நீ  பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!


திருப்பள்ளி எழுச்சி - 02

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ நயனக்

கடிமலர் மலர மற்று அண்ணல் அம்கண் ஆம்

திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்

திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!

அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே!

அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே.!

விளக்கம்:

பெரியோய்! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! அருட்செல்வத்தைக் கொடுக்க வருகின்ற இன்ப மலையே! அலைகளையுடைய கடல் போன்றவனே! சூரியன் தேர்ப் பாகன் இந்திரன் திசையாகிய கீழ்த்திசை அடைந்தான். இருள் முழுதும் நீங்கிவிட்டது. உதய மலையில் உனது திருமுகத்தினின்றும் தோன்று கின்ற கருணையைப் போல, சூரியன் மேல் எழுந்தோறும் உனது கண் போன்ற வாசனை பொருந்திய தாமரை விரிய, அவ்விடத்தில் பொருந் திய கூட்டமாகவும் வரிசையாகவும் விளங்குகின்ற வண்டுகள் இசை பாடுகின்றன. இவற்றைத் திருவுள்ளம் பற்றுக! பள்ளி எழுந்தருள்வாயாக.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close