பொங்கல் ஸ்பெஷல்: ஞாயிறு போற்றுவோம்!

  கோமதி   | Last Modified : 12 Jan, 2018 09:46 am


பொங்கல் பண்டிகை என்பதே அனுதினமும் தனது வாழ்வாதாரத்திற்கு துணை நிற்கும் இயற்கைக்கு நன்றி நவிலும் நாள் தானே. அத்தகைய பொங்கல் திருநாளில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நேரத்தில் சூரிய பகவானின் பெருமைகளை தெரிந்துக்கொள்வோம்.

மனிதன் தான் வாழும் காலத்தில், கண்களால் நேரடியாகப் பார்த்து உணரக்கூடிய தெய்வம் சூரியன். நம் முன்னோர்கள் நன்றி மறவாதவர்கள். அதனால் தான் அவர்கள் கொண்டாடிய பண்டிகைகள் அனைத்திற்கும் பின்னணியில் அவர்களின் நன்றியுணர்ச்சி வெளிப்பட்டது. சூரியனின்  கருணையால் விளைந்த பொருட்களை அவனுக்கே  படைத்து, அதை பிரசாதமாக உண்டுகளித்து  நன்றியினை காணிக்கையாக்கி மகிழ்ந்தார்கள்.

சூரியனை பூமி சுற்றி வருவதால் ஏற்படும் பருவ கால மாற்றத்தில், தட்சணாயனம் பூமியை குளிரச் செய்து மண்ணைப் பக்குவப்படுத்தி ,பலப்படுத்தும் காலம். உத்ராயணம் மண்ணின் மகத்துவத்தால் விளைந்த நன்மைகளால் உற்சாகம் கரைபுரண்டு ஓடும் காலம்.

தட்சணாயணத்தில் சூரியன் தெற்கு சார்ந்தும், உத்ராயண காலத்தில் சூரியன் வடக்கு, சார்ந்தும் காட்சி தந்தாலும், தட்சணாயன முதல் நாளும் உத்ராயண முதல் நாளும் தான் சூரியன் நேர் கிழக்கில் காட்சி தருவார். ஆடி முதல் தேதியும் தை முதல் தேதியிலும் மட்டுமே இந்த அதிசயம் நிகழும். தை மாதத்தில் நமக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அதிகமாக கிடைக்கப்பெற்று பசிப்பிணி  இன்றி வாழ ஆசீர்வதிக்கப்பட்ட மாதம் என்பதால், தான் தை பிறந்தால் நல்ல வழி பிறக்கும் என்றார்கள் நம் முன்னோர்கள்.  

தினமும் சூரியன் உதய காலத்தில், வெறுங்கண்ணால் பார்த்து தரிசித்து சூரியனின் காயத்ரி, தியான மந்த்ரம், அஷ்டோத்ரம் ஆகியவற்றைச் சொல்லி வணங்க வேண்டும்.

உதயகால சூரியனை தரிசிப்பது  அளப்பறிய சூரிய ஆற்றலை நமக்கு பெற்றுத்தரும்.

‘சூரிய வழிபாட்டினை முறையாக மேற்கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும், கண்ணொளி பிரகாசிக்கும்,சருமப் பாதுகாப்பு ஏற்படும்' என்கிறது நம் ஆயுர்வேதம். வேதங்களும் சூரிய ஒளியின் ஏழு வண்ணங்களை, சூரியனின்  ஏழு குதிரைகளாக  குறிப்பிடுகின்றன. இது மட்டுமின்றி "சூரியன் காலையில் ரிக் வேத சொரூபி யாகவும்; மதியத்தில் யஜுர் வேத சொரூபியாகவும்; மாலை வேளையில் சாம வேத சொரூபி யாகவும் திகழ்கிறான்' என்று சிறப்பிக்கிறது  மந்திர சாஸ்திரம்.

ஜோதிட ரீதியாகப் பார்த்தாலும், 30 நாட்களுக்கு ஒரு முறை வீடு மாறும் சூரியன் தன் ஆட்சி வீட்டில் இருந்து ஆறாவது வீடான தன் மகன் சனியின் வீடான மகர வீட்டிற்கு வரும் நாளைத் தான் நாம் பொங்கலிட்டு போற்றுகின்றோம்.

அது மட்டுமின்றி இத்திரு நாளில் நம் பித்ருக்களாகிய நமது மூதாதயர்களை வணங்கி அவர்கள் ஆசி பெற வேண்டும்.

தனுர் ராசியை விட்டு சூரியன் மகர ராசிக்குச் செல்லும் நாளான மகர சங்கராந்தியில் தானம், தர்மம், தர்ப் பணம் முதலியவற்றைச் செய்வது அதிக பலனைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது. சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கும் மகர மாதமே தை மாதம் ஆகும். தை மாதம் சூரிய பகவானை வழிபட உகந்த மாதம் என்பதால், தைமாதப் பிறப்பை பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறோம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close