கூடாரைவல்லி நாயகியான கோதை நாச்சியார்

  கோமதி   | Last Modified : 11 Jan, 2018 01:02 pm


மார்கழி மாதத்தின் 27வது நாள் கூடாரவல்லி வைபவமாக அனைத்து வைணவ கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொஞ்சும் அழகு தமிழில் ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 30 பாடல்களையும் மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடினால் கண்ணபிரானின் அருளினைப் பெறலாம் என்பது நம்பிக்கை. அதிலும்  27ம் நாள் "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" எனும் பாடல் மிகவும் விசேஷம். பாவை நோன்பின் 27வது நாளிலே பரமந்தாமன் ஆண்டாளுக்கு திருமண வரம் அளித்த நன்னாள். அதனால் மார்கழி மாத 27ம் நாளே "கூடாரைவல்லி" நாளாக கொண்டாடப்படுகின்றது. 

திருப்பாவையிலேயே இந்தப் பாசுரம் ரொம்பவும் விசேஷமானது. இந்தப் பாடலை பாராயணம் செய்து கோதை நாச்சியாரை பிரார்த்தித்துக்கொண்டால், கன்னிப்பெண்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். ஜீவாத்மா - பரமாத்மா தத்துவத்தில், பரமாத்மாவே  வந்து ஜீவாத்மாவை தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொள்வது என உறுதி என்பதை உலகிற்கு உணர்த்தியது இது என்பதால் கூடாரவல்லி வைபவம் ஒரு திருநாளாகவே கொண்டாடப்படுகிறது.

மார்கழி மாதத்தில் மனதிற்குப் பிடித்த மணாளனை அடைய பெண்கள் பாவை நோன்பு இருப்பது  தொன்றுதொட்டு இருந்து வரும் விரதங்களில் ஒன்று. திருமாலையே  மணாளனாக அடைய வேண்டி, கோதை நாச்சியார் பல்வேறு பாசுரங்களை  இயற்றியுள்ளார். அவையெல்லாம் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் ஒரு பகுதியான நாச்சியார் திருமொழி என்று அழைக்கப்படுகின்றன. அதில், கண்ணனையும் அழகரையும் அரங்கனையும் நெக்குருகி போற்றிப் பாடியிருக்கிறார் .

ஆண்டாள் தனது  முப்பது பாடல்களிலும், தோழியரை அதிகாலைப் பொழுதில் எழச் செய்து கண்ணனைக் காண அழைக்கும் பாடல்களாகவும், பாவை நோன்பின் சிறப்பினையும், நோன்பு இருந்தால்பெறக்கூடிய நல்வாழ்க்கையைப் பற்றியும் சிறப்பாக கூறப்பட்டுள்ளது. 

நோன்பு சமயத்தில் "நெய்யுண்ணோம், பாலுண்ணோம்", கண்களில் மையிடோம், மலரிட்டு முடியோம் என்று மனக்கட்டுப்பாடோடு இறைவனைக் காண விரதமிருந்தப் பெண்கள், மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில், விரதம் முடிக்கின்றார்கள். திருப்பாவையின் 27வது பாடலான  "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" என  பாடி அக்காரவடிசல் எனும் உணவினை இறைவனுக்குப் படைத்து விரதம் முடிக்கிறார்கள். 

ஆண்டாளின் அவதார தலமான ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் ,அரங்கனைக் கைப் பிடிக்க வேண்டிக்கொண்ட கள்ளழகர் கோவிலும்  இந்த வைபவம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

108 பாத்திரங்களில் அக்காரவடிசலும், வெண்ணெயும் நைவேத்தியமாகப் படைக்கப்படுவது சிறப்பு. இதற்குப் பின் சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. பாவை நோன்பு இருந்த ஆண்டாள், தனக்கும் ரங்கநாதருக்கும் திருமணம் செய்துவைத்தால், அக்காரவடிசலும் வெண்ணெயும் சமர்ப்பிப்பதாக தனது குல தெய்வமான கள்ளழகர் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறாள்.அவள் ஆசை பூர்த்தியாகும் விதமாக அவள் பக்திக்கு மெச்சிய அரங்கனும் ,அவளை தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டப் பிறகு, ஆண்டாள் ,கள்ளழகருக்கு அக்காரவடிசலும் வெண்ணெயும் சமர்ப்பிக்கமுடியாமல் போனது. 

சுமார் 2,000 வருடங்களுக்குப் பின்னர் பிறந்த உடையவர் என்று வைணவ அன்பர்களால் போற்றப்படும் ராமானுஜர், ஆண்டாளின் விருப்பத்தையும் , நிறைவேற்றப்படாமல் இருந்த அவளின் நேர்த்திக்கடனைத் தெரிந்து கொண்டு, அழகர்கோவிலில், ‘நூறு தடா அக்கார அடிசில்’ நூறு அண்டாக்களில் சமர்ப்பித்தார்.

தன் வேண்டுதலை நிறைவேற்றியதால், ராமாநுஜரை ‘அண்ணா’ என்று அழைத்தபடி முன்னே வந்தாளாம் ஆண்டாள். அதனால்தான் இன்றும் வைபவத்தின் போது,ஆண்டாள் சந்நிதிக்குச் சற்று முன்பு உள்ள அர்த்தமண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் தருகிறாள்.

அன்று முதல், இன்றைக்கும் அழகர்மலையில், கள்ளழகருக்கு ,கூடாரை வல்லி அன்று, 27ம் நாள் பாசுரத்தில், ’பால் சோறு மூட நெய் பெய்து’ என்று இருப்பது போல, அக்கார அடிசிலான பால் சோறு, நூறு தடாவில் சமர்ப்பிக்கும் வழக்கம்,  நடைபெற்று வருகிறது.

கூடாரைவல்லி தினமான இன்று, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியுடன் அரங்கனையும் தரிசித்து அவனருள் பெறுவோம். 

ஆண்டாள் திருவடிகளே சரணம் .....

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.