வேண்டிய வரங்கள் அளிக்கும் தை கிருத்திகை

  கோமதி   | Last Modified : 26 Jan, 2018 04:21 pm


முருகனுக்கு உகந்த விரத நாட்களில் கிருத்திகை விரதம் சிறப்பு மிக்கது. அதிலும் ஒரு வருடத்தில் வரும் மூன்று கார்த்திகை தினங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தை மாதத்தில்  வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை என இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். கிருத்திகையில் விரதம் இருந்து சேவல் கொடியோனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும்! என சிவபெருமானே வாக்குறுதி அளித்ததாக கூறப்படுவதில் இருந்து அதன் மகிமையை அறிந்துக்கொள்ளலாம்.  

கிருத்திகை விரதத்திற்கு முதல் நாளான பரணி நட்சத்திரத்தின் பின்னேரத்தில் சிறிது உண்டு, கார்த்திகை அன்று விடியற்காலை பொழுதில் நீராடி,கந்த புராணம் மற்றும்  முருகன் துதிகளை பாராயணம் செய்தல் வேண்டும். கிருத்திகை அன்று முழுதும் உண்ணாமல், உறங்காமல் நோன்பிருந்து, அடுத்த நாள் அதிகாலை ரோகிணி நட்சத்திரத்தில் மனமார முருகப் பெருமானை நினைந்து, பின் பாரணை செய்ய வேண்டும்.

ஆனால் இன்று நாம் இயந்திரத்தனமாய் சுழன்றுக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், அந்த அளவிற்கு விரதம் இருக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் கிருத்திகை தினத்திலாவது விரதமிருப்பது முருகப் பெருமானின் அருளைப் பெற உதவும். 

தை கிருத்திகை மகிமைகள்:

பிள்ளைச் செல்வம் வேண்டுபவர்கள்,தை கிருத்திகையில் அழகன் முருகனை மனமார நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும்என்பது நம்பிக்கை. 

ஆறுமுகனின் ஆறு படை வீடுகளிலும், ஏனைய சைவ சமயம் சார்ந்த திருத்தலங்களிலும், தை கிருத்திகை, சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் தை கிருத்திகை விழாவில் காலையிலும், மாலையிலும் முறையே சண்முக நாதர் சிங்கக் கேடய சப்பரத்திலும், பூங்கோயில் சப்பரத்திலும் திருவீதி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம் என்பதால், செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை,மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தைக் கிருத்திகை தினத்தில் கார்த்திகேயனை வணங்க, வந்த வினையும்,வருகின்ற வல்வினைகளையும் அந்த ஆறுமுகசுவாமி போக்கியருள்வான். வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.

மேலும் இன்று அம்பாளுக்குரிய தை வெள்ளிகிழமையில்,கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருவது இரட்டிப்பு சிறப்பாகும்.  

வேலுண்டு வினையில்லை... மயிலுண்டு பயமில்லை!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close