இன்று தை பிரதோஷம்: சிவனை வழிபடுவதன் பலன்களும் அற்புதங்களும்!

  கோமதி   | Last Modified : 29 Jan, 2018 11:46 am


சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷ வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு சிறப்புகள் அதிகம். அந்த வகையில் (29.01.2018) தை பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். 

தை மாதம், ஈசனுக்குப் பிடித்த சோமவாரம், ஈசனின் திருவாதிரை நட்சத்திரம் மற்றும் அவருக்கு உகந்த திரயோதசி என இந்த பிரதோஷத்திற்கு மகத்துவம் அதிகம். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இப் பிரதோஷம்,அபூர்வ  பிரதோஷம் என ஆன்மீக பெரியவர்கள் சிலாகிக்கிறார்கள். 

பொதுவாகவே சோம வார (திங்கட்கிழமை) பிரதோஷத்தில் சிவ தரிசனம் மிகவும் புண்ணியம் தரக்கூடியது.இந்த நன்னாளில்  சிவாலயம் சென்று நந்தி தேவரையும் ஆடலரசனையும் வணங்குவது 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்.

நமது மனதில் தோன்றும் பல்வேறு சிந்தனைகளுக்கு மனோகாரகனான சந்திரனே  காரணம். அதனால் சந்திரனை பிறையாக சூடிய எம்பெருமானை இந்நன்னாளில் தரிசிப்பது எண்ணிலடங்கா நன்மைகளை நமக்கு அருளும்.நிலையில்லா புத்தியை உடையவர்கள் திங்கட்கிழமைகளில் சிவனை  வழிபடுவது நன்மை பயக்கும். மேலும்  சோமவார பிரதோஷத்தின் போது சந்தனம் , பால், இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும்  அபிஷேகம், செய்து வில்வ மாலை அணிவித்தால், செய்த பாவங்கள் அனைத்தும் விலகி, ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் ,ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. 

பிரதோஷ நாளில், பிரதோஷ காலம் என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான வேளையில், சிவாலயங்களுக்குச் சென்று, நந்திதேவருக்கும் சிவனாருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைக் தரிசிப்பது கோடிப் புண்ணியங்களை அள்ளித்தரும்.


தை மாத சோம வாரப் பிரதோஷத்தில், மாலை சிவாலயம் சென்று நந்திதேவருக்கு செவ்வரளியும் அருகம்புல் மாலையும் வழங்குவதோடு,அபிஷேகத்திற்கு  பன்னீர், சந்தனம், விபூதி, பால், தயிர் போன்றவற்றில் இயன்றதை கொடுப்பதால், ஈசன் அருள் பெறலாம். எம்பெருமானுக்கு வில்வம் சார்த்துவதும் அவன் கருணையை நமக்கு பெற்று தரும்.

பிரதோஷ வேளையான மாலை 4.30 முதல் 6 மணி வரையுள்ள காலத்தில், சிவலிங்க மூர்த்தியை இடப தேவரின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும்.

மேலும் பிரதோஷ நேரத்தில் உமா தேவியுடன் சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்குதல் பாக்கியம். 

இவ்வாறு இறைவன் ஆலயத்தை வலம் வரும் போது ,முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்து கேட்க வேண்டும்.

இந்த அபூர்வ பிரதோஷ தினத்தை வழிபடுவதால் வீட்டில்  மங்களமும்,மனதில் நல்லெண்ணமும் இறையருளும் கிடைக்கும். நல்ல புத்திரபாக்யம் கிடைக்கும். திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும். எதிரிகள், எதிர்ப்பு விலகும். அனைத்து துன்பமும் விலகும். வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தடையாக உள்ள சகலத்தையும் தகர்த்து ,அடுத்தடுத்து முன்னேறிச் செல்ல வழிவகைகள் செய்வார் ஈசன்.

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.